நியூயார்க்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டிகள் வட அமெரிக்காவில் வியாழக்கிழமை அன்று நடைபெறுகின்றன. இதில் மெக்சிகோ vs தென்னாப்பிரிக்கா மற்றும் தென் கொரியா vs செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி, இந்தத் தொடக்கப் போட்டிகள் ஜூன் 12ம் தேதி அதிகாலை 12:30 மணிக்கு நடைபெறும்.
போட்டிகள் வட அமெரிக்கா முழுவதும் நடத்தப்படுவதால், பெரும்பாலான ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைபெறும்.மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதால், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் மூன்று தொடக்க விழாக்கள் நடைபெறவுள்ளன

அந்தந்த நாடுகளின் மைதானங்களில் ஒரு பொதுவான மைய கருத்துடன் இந்த விழாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படும். ஒவ்வொரு தொடக்க விழாவும், அந்தந்த நாட்டின் முதல் போட்டி தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாகத் தொடங்கும். அமெரிக்கா தனது முதல் போட்டியை வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கும் (இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 6:30 மணி) விளையாடுகிறது.
லீக் சுற்று போட்டிகள் ஜூன் 27 வரை நடைபெறும். இதில் மொத்தம் 12 குழுக்கள் இருக்கும், ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் இடம்பெறும். அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும். இதன் முடிவில் மொத்தம் 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளும், சமநிலையில் (டிரா) முடிந்தால் தலா 1 புள்ளியும் வழங்கப்படும்.ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அத்துடன், மூன்றாவது இடம் பிடிக்கும் சிறந்த எட்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
அதன்பிறகு நாக்-அவுட் சுற்று தொடங்கும். ஒவ்வொரு போட்டியின் முடிவும் அந்த அணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான கட்டம் இது. ஜூன் 28 முதல் ஜூலை 3 வரை 32 அணிகள் மோதும். அதைத் தொடர்ந்து, ஜூலை 4 முதல் 7 வரை 16 அணிகள் போட்டியிடும்.
IND A vs SL A: ருதுராஜ் அபார சதம்.. தோல்வி விளிம்பில் இருந்த இந்தியா ஏ திரில் வெற்றி
காலிறுதிப் போட்டிகள் ஜூலை 9 முதல் 11 வரையும், அரையிறுதிப் போட்டிகள் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். மூன்றாவது இடத்திற்கான போட்டி ஜூலை 18-ம் தேதியும், இறுதிப்போட்டி ஜூலை 19-ம் தேதியும் நடைபெறும். இந்தப் போட்டிகள் அனைத்தும் ஜி நெட்வோர்க் புதியதாக தொடங்கி உள்ள யூனைட்8 ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம்.