கல்லூரியில் பயில பணம் ஒரு தடையல்ல! தமிழ்நாடு அரசு, மத்திய அரசு வழங்கும் உதவித்தொகைகள், சலுகைகள்

கல்லூரியில் சேர என்னென்ன அரசு உதவித்தொகைகள், சலுகைகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்கள் தற்போது உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பது, கலந்தாய்வுகளுக்கு விண்ணப்பிப்பது என மும்முரமாக இருக்கிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில், மாணவர்களுக்கு தாம் சேர விரும்பிய கல்லூரியிலோ, பாடப்பிரிவிலோ இடம் கிடைக்காமல் போகலாம். சில சமயம் பண வசதி இல்லாத காரணங்களாலும் இது நிகழலாம்.

இப்படி தகுதியான மாணவர்களுக்கு தாம் விரும்பிய கல்லூரிகளிலும் பாடப்பிரிவுகளிலும் இடம் கிடைக்காமல் போவதைத் தடுக்க அரசு வழங்கும் உதவித்தொகைகள் பல சமயங்களில் உதவிசெய்கின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழக அரசு சில உதவித்தொகைகளை வழங்குகிறது. அதேபோல் மத்திய அரசும், மத்திய அரசின் துறைகளும் சில உதவித்தொகைகளை வழங்குகின்றன.

பொறியியல். மருத்துவம் ஆகிய தொழில் படிப்புகளுக்கு மட்டுமின்றி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளுக்கும் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

பெரும்பாலும் இந்த உதவித்தொகைகளையும் திட்டங்களையும் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் பல வாய்ப்புகளை அவர்கள் இழக்கிறார்கள் என்கின்றனர் கல்வியாளர்களும் உயர்கல்வி ஆலோசகர்களும். அவர்களிடம் பேசிப் பெற்றத் தகவல்களின் அடிப்படையில் மாணவர்களுக்கான கீழ்கண்ட உதவித்தொகைத் திட்டங்கள் தொகுத்தளிக்கப்படுகின்றன.

கல்லூரியில் சேர என்னென்ன அரசு உதவித்தொகைகள், சலுகைகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித்தொகைகள்

1) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் ரத்து

தமிழ்நாட்டின் அரசுப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தொழில் கல்வி உயர்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்குகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, இந்த இடதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை (tuition fees) தமிழக அரசே முழுமையாக ஏற்கும்.

இது, அரசுப்பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், கள்ளர் மறுவாழ்வுப் பள்ளிகள், வனத்துறை நடத்தும் பள்ளிகள் ஆகியவற்றில் பயின்ற மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படும்.

அந்த மாணவரது மதிப்பெண் சான்றிதழிலேயே அவர் அரசுப்பள்ளியில் பயின்றவர் என்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் என்பதால், தொழில் கல்வி மேற்படிப்புகளுக்காக விண்ணப்பிக்கும்போதே அது கணக்கில் கொள்ளப்படும்.

கல்லூரியில் சேர என்னென்ன அரசு உதவித்தொகைகள், சலுகைகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images

முதல் பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் ரத்து

இது பொறியியல் படிப்புக்கான திட்டம்.

ஒரு மாணவர் தனது குடும்பத்தின் முதல் பட்டதாரி எனும் பட்சத்தில், அதாவது அந்த மாணவரது பெற்றோர் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள் என்றாலோ, மேலும் அவரது மூத்த சகோதர, சகோதரிகள் யாரும் பட்டதாரிகள் இல்லையென்றாலோ அந்த மாணவருக்கு முதல் பட்டதாரி எனப்படுவார்.

அத்தகைய முதல் பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக்கட்டணத்தில், அந்தந்தக் கல்லூரிகளின் கட்டணத்திற்கேற்ப சலுகைகள் வழங்கப்படும்.

முதல் பட்டதாரி மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுப் படிவத்தில் அதற்கான தகவல்களைக் குறிப்பிட வேண்டும்.

அதற்கான சான்றிதழை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து மாணவர்கள் பெறலாம்.

கல்லூரியில் சேர என்னென்ன அரசு உதவித்தொகைகள், சலுகைகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images

பட்டியல் பிரிவு, பழங்குடி மாணவர் உதவித்தொகை

தமிழ்நாடு அரசின ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வழங்கும் உதவித்தொகை இது.

இதன்கீழ் பட்டியல் பிரிவு மாணவர்கள் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு தொழிற்கல்வி மேற்படிப்பு, கலை அறிவியல் மேற்படிப்பு, வணிக மேற்படிப்பு ஆகியவற்றுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு குறிப்பிட்ட மாணவரது பெற்றோரின் அண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் கீழ் இருக்கவேண்டும்.

இதற்கு மாணவரின் சாதிச் சான்றிதழ் மற்றும் அவரது பெற்றோரின் வருமானச் சான்றிதழ் அவசியம்.

தொழில்நுட்பக் கல்விக்கான உதவித்தொகை

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education – AICTE) வழங்கும் கல்விக்கட்டணச் சலுகை.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சத்துக்கும் கீழ் இருக்கும் மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகளில், இந்தத் திட்டத்திற்காக 5% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் முழு கல்விக் கட்டணமும் ரத்துசெயப்படும்.

கல்லூரியில் சேர என்னென்ன அரசு உதவித்தொகைகள், சலுகைகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் பிற உதவித்தொகைகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பை முடித்தபின்பு மேற்படிப்பு படிப்பதற்கான உதவித்தொகை வழங்குகிறது.

இதனைப் பெறுவதற்கு மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும்.

40% மாற்றுத்திறனாளியாக இருக்கும் மாணவருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இதன்கீழ், ஒரு மாற்றுத்திறனாளி மாணவர் கல்லூரிக்குச் செலுத்திய கட்டணம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் திருப்பித் தரப்படும். மேலும் பராமரிப்புப் படி, புத்தகம் வாங்க நிதி ஆகியவையும் வழங்கப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதுகுறித்த மேலதிகத் தகவல்களை https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

சிறுபான்மையினருக்கு உதவித்தொகை

சிறுபான்மையினர் விவகார அமைச்சகம், சிறுபான்மைச் சமூக மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்பைப் பயில உதவித்தொகை வழங்குகிறது.

இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், ஜைன மதத்தினர், பார்சிஆகிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு மாணவர் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும்.

இதன்கீழ், கல்லூரிப் படிப்பிற்கு ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.3,000 வழங்கப்படும்.

மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ள https://scholarships.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லலாம்.

கல்லூரியில் சேர என்னென்ன அரசு உதவித்தொகைகள், சலுகைகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images

அறிவியல் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான உதவித்தொகை

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ‘இன்ஸ்பையர்’ (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE) என்ற பெயரில் அறிவியல் மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.

இதன்கீழ் ‘Scholarship For Higher Education (SHE)’ எனும் பிரிவின்கீழ் 12-ஆம் வகுப்பில் முதல் 1% நிலையில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், ஜே.இ.இ போன்ற தேசிய நுழைவுத்தேர்வுகளில் முதல் 10,000 இடங்களைப் பெறுபவர்களுக்கும், இயற்பியல், வேதியியல் போன்ற அடிப்படை அறிவியல் துறைகளில் பி.எஸ்சி பட்டம் படிக்க ஆண்டுக்கு ரூ.60,000 உதவித்தொகை மற்றும் ரூ 20,000 வழிகாட்டி உதவித்தொகை வழங்க்கப்படும்.

மேலதிகத் தகவல்களுக்கு https://dst.gov.in/inspire-scheme-innovation-science-pursuit-inspired-research என்ற இணையதளத்திற்குச் செல்லலாம்.

இது மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட உந்துவதற்கான உதவித்தொகை என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தெரிவிக்கின்றது.

‘உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும்’

இந்த உதவித்தொகைகள் குறித்து பிபிசி தமிழிடம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட கல்வியாளர்கள் மற்றும் உயர்கல்வி ஆலோசகர்கள், இவைகுறித்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அதிக விழிப்புணர்வு வேண்டும் என்றனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் ராஜராஜன், “அனைத்து பள்ளிகளும் இந்த உதவித்தொகைகள் மற்றும் சலுகைகள் இருப்பதை தங்கள் மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

அதேபோல், கல்வியாளர் நெடுஞ்செழியன், “மாணவர்கள் ஒரு கல்லூரியில் உதவித்தொகைக்கான திட்டம் இருக்கிறதா என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்” என்றார்.