உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களை வாக்களிக்க விடாமல் காவல்துறை தடியடியா? பிபிசி கள ஆய்வு

சம்பல்: காவல்துறை தடியடி நடத்தியதாக குற்றம் சாட்டும் முஸ்லிம் வாக்காளர்கள்  - கள அறிக்கை

பட மூலாதாரம், TARIQUE AZIM

படக்குறிப்பு, தாரிக் அசீம்
  • எழுதியவர், தாரிக் அசீம்
  • பதவி, பிபிசி ஹிந்தி

உத்தர பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவின்போது, ​​ சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஜியாவுர் ரஹ்மான் பார்க், தனக்கு ஆதரவாக வாக்குப்பதிவு நடந்த பகுதிகளில் காவல்துறை தடியடி நடத்தி கடுமையாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சம்பல் ஆட்சி நிர்வாகம் மறுத்துள்ளது.

செவ்வாய்க் கிழமை சம்பலில் நடந்த வாக்குப்பதிவின்போது என்ன நடந்தது என்பதை அறிய, அங்குள்ள சில உள்ளூர் மக்களுடன் பிபிசி பேசியது.

நகரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள அஸ்மௌலி காவல் நிலையப் பகுதியின் ஷாபாஸ்பூர் கிராமத்தில் மருந்தகம் வைத்திருக்கும் ஷாதாப் கூறுகையில், “என் மருந்தகத்தில் வலிக்கு தடவும் களிம்புகள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் தீர்ந்துவிட்டன. வாக்களித்தவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர். இதனால் ஏராளமான மக்கள் காயமடைந்தனர், அவர்கள் எங்கள் கடையில் இருந்த பெரும்பாலான வலி நிவாரணி மருந்துகளையும் வாங்கிச் சென்றனர்.

ஷாபாஸ்பூர் கிராமத்துக்கு அருகிலுள்ள ஓவாரி கிராமத்திலும் இதே நிலைதான். ஓவாரி, முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமம். இங்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு தொடங்கியவுடன், மக்கள் வாக்குச் சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, தங்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியதாக ஏராளமான முஸ்லிம் வாக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓவாரி கிராமத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளியில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது, அதில் மக்கள் கூட்டம் வாக்குச்சாவடியை விட்டு வெளியே ஓடுவது பதிவாகியுள்ளது. அவர்களின் பின்னால் காவல்துறையினர் ஓடுவதும் பதிவாகியுள்ளது. இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

மூன்றாம் கட்ட வாக்குப் பதிவின்போது, ​​மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்து பல வாக்காளர்களை காவல்துறை தாக்கியதாக தகவல்கள் வந்தன. அங்குள்ள வாக்காளர்கள் தங்களை காவல்துறை வாக்குச் சாவடியில் இருந்து விரட்டியதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஜியாவுர் ரஹ்மான் பார்க், முஸ்லிம் வாக்காளர்கள் மீது நிர்வாகம் தேவையில்லாமல் கடுமையாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சம்பல் காவல்துறை நிராகரித்துள்ளது.

சம்பல் காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் சிங் குணாவத் பிபிசியிடம், “வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது, யாரும் எந்த இடையூறும் செய்யவில்லை” என்றார்.

செவ்வாய்க் கிழமை சம்பலில் நடந்தது என்ன?

சம்பல்: காவல்துறை தடியடி நடத்தியதாக குற்றம் சாட்டும் முஸ்லிம் வாக்காளர்கள்  - கள அறிக்கை

பட மூலாதாரம், X@SAMBALPOLICE

வாக்காளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான காணொளிகளை வெளியிட்ட கிராமங்களுக்கு பிபிசி நேரடியாகச் சென்று பார்வையிட்டது.

வாக்குப்பதிவு நடக்கும் இடத்துக்கு திடீரென வந்த போலீசார், எந்த விதமான கேள்வியும் கேட்காமல் தடியடி நடத்தியதாக இங்கு வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாக்குச்சாவடிக்குள் வாக்களித்துக் கொண்டிருந்தவர்கள் அடித்து விரட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளை போலீஸ் நிர்வாகம் நிராகரித்துள்ளது.

சம்பல் காவல் கண்காணிப்பாளர் குல்தீப் சிங் குணாவத் பிபிசியிடம் பேசுகையில், “வாக்குப்பதிவு நடக்கும் பகுதியில் நெரிசல் ஏற்பட்டதால் பள்ளிக்குள் இருந்த சிலர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். நிலைமை சகஜமானபோது, வெளியே அனுப்பப்பட்டவர்கள் வழக்கம் போல் வாக்களித்தனர், காவல்துறை தரப்பில் மக்களைத் தடுக்கவில்லை,” எனக் கூறினார்.

போலீஸ் தரப்பு இவ்வாறு கூறுகிறது. ஆனால் நாங்கள் அப்பகுதிக்குள் எங்கு சென்றாலும், பலரது உடல்களில் காயங்கள் காணப்பட்டன. ஓவாரி கிராமத்தில் இருந்து வெளியான ஒரு காணொளியில் காயமடைந்த முதியவர் ஒருவர் சாலையில் கிடக்கிறார், அவருக்குப் பின்னால் போலீசார் நிற்கின்றனர்.

அவரது பெயர் ரயீஸ் அகமது, ஏறக்குறைய 80 வயது இருக்கும். ரயீஸ் வாக்களிப்பதற்காகத் தனது வீட்டைவிட்டு வெளியே சென்றார், ஆனால் அங்கு காவல்துறையினரால் தாக்கப்பட்டதால், அவர் படுகாயம் அடைந்தார். இதனால் தன்னால் வீடு திரும்ப முடியாமல் சாலையில் கிடந்ததாக அவர் வருத்தத்துடன் கூறுகிறார். அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

ரயீஸ் அகமது உடன் அவரது மகன் முகமது ஆலமும் வாக்களிக்க வந்தார். போலீசார் அவரையும் அடித்து உதைத்தனர் என்பது அவரது குற்றச்சாட்டு.

முகமது ஆலம் பிஏசியில் காவலராக (constable) உள்ளார், விடுமுறையில் கிராமத்திற்கு வந்திருந்தார்.

சம்பல்: காவல்துறை தடியடி நடத்தியதாக குற்றம் சாட்டும் முஸ்லிம் வாக்காளர்கள்  - கள அறிக்கை

பட மூலாதாரம், TARIQUE AZIM

படக்குறிப்பு, தனது குடும்பத்தினருடன் ரயீஸ் அகமது

முகமது ஆலம் கூறுகையில், ​​”போலீசார் திடீரென என்னை அடிக்கத் தொடங்கினர். நானும் காவல்துறையில்தான் இருக்கிறேன் என்று அவர்களிடம் பலமுறை சொன்னேன், ஆனால் யாரும் கேட்கவில்லை. அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

என் அம்மாவும் சகோதரியும் என்னைக் காப்பாற்ற அங்கு வந்தனர். என் கண் முன்னால் அவர்களையும் காவலர்கள் தாக்கினர். என் தாயும் சகோதரியும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மற்றொருபுறம் என் தந்தை மயங்கிக் கிடந்தார், அவரைக் காப்பாற்ற என் சகோதரர் முகமது முஸ்தகீம் வந்தபோது, ​​​​அவரும் மோசமாகத் தாக்கப்பட்டார்,” என்றார்.

காவல்துறையினர் தன் சகோதரர் முஸ்தகீமை காரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், மாலையில் அவர் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் விடுவித்ததாகவும் ஆலம் குற்றம் சாட்டியுள்ளார். முஸ்தகீமையும் காவல் நிலையத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் போலீசார் நிராகரித்தனர்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘வாக்குப்பதிவின்போது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த சுமார் 50 பேர் பல்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயீஸ் அகமது மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தி, “இங்கு சைக்கிள் ஓட்ட அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னம் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது

சம்பல்: காவல்துறை தடியடி நடத்தியதாக குற்றம் சாட்டும் முஸ்லிம் வாக்காளர்கள்  - கள அறிக்கை

பட மூலாதாரம், TARIQUE AZIM

படக்குறிப்பு, “வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தேன். திடீரென போலீசார் வந்து என்னை அடிக்க ஆரம்பித்தனர்’’ என்கிறார் அனீஸ்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பலின் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான மணீஷ் பன்சாலின் நிலைப்பாட்டை அறிய பிபிசி தொடர்பு கொண்டபோது, அவரது தரப்பில் இருந்து ​​எந்தப் பதிலும் வரவில்லை.

முன்னதாக, மாவட்டத்தில் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக மணீஷ் பன்சால் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

சம்பல்: காவல்துறை தடியடி நடத்தியதாக குற்றம் சாட்டும் முஸ்லிம் வாக்காளர்கள்  - கள அறிக்கை

பட மூலாதாரம், TARIQUE AZIM

படக்குறிப்பு, அனீஸ் மனைவி ஷப்னம்

மாலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ரயீஸின் மகன் முஸ்தகீம் கூறும்போது, ​​“வாக்குச்சாவடி அருகே நான் ரகளையில் ஈடுப்பட்டதால்தான் காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்தது என வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். ஆனால், நாங்கள் வரிசையில் அமைதியாக நின்று வாக்களித்தோம் என்பதுதான் உண்மை,” என்றார்.

இவ்வளவு சலசலப்பு இருந்தபோதிலும், ரயீஸின் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். ஆனால், அவரது மனைவி குல்சூம் காயம் காரணமாக வாக்களிக்க முடியவில்லை.

ஷாபாஸ்பூர் கிராம மக்களின் கதையும் இதேதான். ஷாபாஸ்பூர் கிராமத்தில், அந்தி சாயும்போதும், வீடுகளில் இருந்து வெள்ளி இடிக்கும் சத்தம் கேட்கிறது. முஸ்லிம்கள் அதிகமுள்ள இந்தக் கிராமத்தில், பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரத்துக்கு வெள்ளி நசுக்கும் தொழில் செய்து சம்பாதிக்கிறார்கள்.

இந்தக் கிராமத்திலும் வாக்குப்பதிவின்போது காவல்துறை தங்களைத் தாக்கியதாகப் பலர் கூறுகின்றனர். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட முகமது அனீஸ் படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

”வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தேன். திடீரென போலீசார் வந்து என்னை அடிக்க ஆரம்பித்தனர்’’ என்கிறார் அனீஸ்.

அனீஸை பார்த்துக் கொள்ளும் அவரது மனைவி ஷப்னம், “என் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், மொராதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வாக்களிக்கச் சென்றிருந்தார், ஆனால் காயத்துடன் திரும்பினார்,” என்கிறார்.

அனீஸ் வீட்டைவிட்டு வெளியேறிய உடன், அவர் சந்தித்த சில சிறுவர்கள், “போலீசார் அடித்ததற்கான அடையாளங்களைக் காட்டுவோம்” என்று கூறினார்கள்.

ஷேன் ஆலம் என்ற மற்றொரு இளைஞர், தனது காயங்களைக் காட்டி, “நாங்கள் ஜனநாயகத்தின் வேறு நிறத்தைப் பார்த்தோம். நாங்கள் செய்த ஒரே குற்றம் எங்கள் விருப்பப்படி வாக்களித்ததுதான்” என்று கூறினார்.

இதற்கிடையில், வாக்குச் சாவடியில் இருந்து சம்பலின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுக்ரிதி அவர்களின் வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், “வாக்காளர்களின் ஆதார் அட்டையைச் சரிபார்ப்பது காவல்துறை வேலை அல்ல, தேர்தல் அமைதியாக நடப்பதை உறுதி செய்வதே உங்கள் வேலை” என்று காவல்துறையினரிடம் அனுக்ரிதி விளக்கும் காட்சிகள் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

எந்தவொரு வாக்காளரும் காவல்துறையால் பிரச்னைகளைச் சந்திக்கக் கூடாது என்று அனுக்ரிதி அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி மற்றும் பாஜகவின் வெவ்வேறு நிலைப்பாடு

சம்பல்: காவல்துறை தடியடி நடத்தியதாக குற்றம் சாட்டும் முஸ்லிம் வாக்காளர்கள்  - கள அறிக்கை

பட மூலாதாரம், TARIQUE AZIM

படக்குறிப்பு, ஷேன் ஆலம்

சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஜியாவுர் ரஹ்மான் பார்க், தனக்கு ஆதரவாக வாக்குப்பதிவு நடந்த பகுதிகளில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய ஜியாவுர் ரஹ்மான், “அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தை மீறி நாடு முழுவதும் சம்பல் காவல்துறை அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ஆதரவாக எங்கு வாக்குப்பதிவு நடந்ததோ, அங்கெல்லாம் போலீசார் சென்று மக்கள் மீது தடியடி நடத்தி அட்டூழியம் செய்தனர். மேலிடத்தில் நான் முறையிடுவேன். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

காவல்துறையின் கண்டிப்பால் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாகவும், காவல்துறை தலையிடாமல் இருந்திருந்தால், வாக்கு சதவீதம் பத்து சதவீதம் வரை அதிகமாக இருந்திருக்கும் என்றும் ஜியாவுர் ரஹ்மான் குற்றம் சாட்டுகிறார். ஆனால், அவரது குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

சம்பலில் உள்ள பாஜக மாவட்டத் தலைவர் சவுத்ரி ஹரேந்திர சிங் கூறுகையில், “போலி வாக்குப்பதிவு நடந்த இடங்களில் மட்டும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். பல வாக்குச்சாவடிகளில் போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளனர். மற்றபடி அங்கு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது,” என்கிறார்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக காவல்துறை மீது சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஹரேந்திர சிங் கூறுகையில், “பல பகுதிகளில் போலி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, இங்கு போலி வாக்குப்பதிவைத் தடுக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியினர் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். போலி வாக்குப்பதிவு நடந்த சாவடிகளில் மட்டுமே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்,” என்றார்.

செவ்வாய்க்கிழமை நடந்த வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

சம்பலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்தியாவில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் சில இடங்களில் சம்பல் மாவட்டமும் ஒன்று.

உத்தர பிரதேசத்தில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவின்போது, ​​ராம்பூர், மொராதாபாத், அம்ரோஹா, மீரட் போன்ற முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் இரண்டு கட்ட வாக்குப் பதிவின்போது எங்கும் வாக்காளர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடந்ததாகத் தகவல் இல்லை.

இத்தகைய சூழ்நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில், செவ்வாய்க்கிழமை, சம்பலில் நடந்த சம்பவங்கள் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் மீது பல கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பலில் இம்முறை 62.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, இது கடந்த முறை பதிவான 64.71 சதவீத வாக்குகளைவிட சற்று குறைவாகவே உள்ளது.

ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் கூறுகையில், “காலை முதலே பல இடங்களில் இருந்து தடியடி நடத்தப்பட்ட வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டன, அதன் பிறகு முஸ்லிம் வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்,” என்றார்.

ஷாபாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், காவல்துறையின் நடவடிக்கைக்குப் பிறகும், கிராம மக்கள் வாக்களிப்பதில் இருந்து பின்வாங்கவில்லை என்றனர். ஓவாரி கிராம மக்களும் அதையே சொன்னார்கள்.