வரையாடு, தமிழ்நாடு, கேரளா, மேற்குத்தொடர்ச்சி மலை, வன விலங்குகள், காடுகள்

பட மூலாதாரம், Dhanarupan

  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டைக் காப்பதற்கு சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கிப் பல்வேறு முயற்சிகளை தமிழக வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? வரையாடுகளை காப்பாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி செய்வது ஏன்?

இந்தியாவின் முக்கியப் பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத்தொடர்ச்சி மலை குஜராத் துவங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவியிருக்கிறது. மொத்தம் 1.6 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மிக அரிதான காட்டுயிராக நீலகிரி வரையாடு (Nilgiri Tahr) உள்ளது.

உலகில் ஹிமாலயன், அரபிக் வரையாடு வகைகள் இருந்தாலும், நீலகிரி வரையாடு (Nilgiri Tahr) இனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் ஒரு சில வனப்பகுதிகளில் மட்டுமே உள்ளன.

நீலகிரி வரையாடு தமிழகத்தின் மாநில விலங்காகவும் உள்ளது.

வரையாடு, தமிழ்நாடு, கேரளா, மேற்குத்தொடர்ச்சி மலை, வன விலங்குகள், காடுகள்

பட மூலாதாரம், Dhanarupan

படக்குறிப்பு, நீலகிரி வரையாடு நீலகிரி, ஆனைமலை காடுகளில் 15 லட்சம் ஆண்டுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது, என்கின்றனர் வல்லுநர்கள்

பண்டைய தமிழ் இலக்கியத்தில் வரையாடு

நீலகிரி வரையாடு, கோவை, நீலகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை, தேனி, கன்னியாகுமரி, களக்காடு-முண்டந்துரை பகுதிகளிலும், நீலகிரி, ஆனைமலைக்காடுகளை இணைக்கும் கேரள மாநில வனப்பகுதிகளில் மட்டுமே உள்ளன.

வரையாடுகள் குறித்து, பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன.

‘வரையாடு வருடையும் மடமான் மறியும்’ (சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம் – காட்சிக்கதை: 51) மற்றும் ‘ஓங்கு மால்வரை வரையாடு உழக்கலின் உடைந்துரு பெருந்தேன்’ (சீவக சிந்தாமணி – 1559:1) என, தமிழில் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில் வரையாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புடைய வரையாடுகளைப் பாதுகாக்க, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ரூ.25 கோடி நிதியில் ‘வரையாடுகள் பாதுகாப்பு’ என்ற சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது வனத்துறையினர் வரையாடுகளுக்கு ‘ரேடியோ காலர்’ பொருத்துவது, வாழிடத்தை கண்காணிப்பது என பல பணிகளைச் செய்து வருகின்றனர்.

வரையாடுகள் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? வனத்துறை பின்பற்ற வேண்டியது என்ன? என்பது குறித்து சூழலியலாளர்கள் பிபிசி தமிழிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

வரையாடு, தமிழ்நாடு, கேரளா, மேற்குத்தொடர்ச்சி மலை, வன விலங்குகள், காடுகள்

பட மூலாதாரம், Osai Kalidasan

படக்குறிப்பு, ஓசை சூழலியல் அமைப்பின் தலைவர் காளிதாசன்

‘வரையாடுகளின் எண்ணிக்கை 3000-க்கும் குறைவு தான்’

பிபிசி தமிழிடம் பேசிய கோவை ஓசை சூழலியல் அமைப்பின் தலைவர் காளிதாசன், ‘வாழிடம் துண்டாடப்பட்டது, பருவநிலை மாற்றம், சோலைக்காடுகள், புல்வெளிகள் பாதிப்பு என பல காரணங்களால் வரையாடுகள் அழிந்து, அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது,” என்றார்.

“வரையாடுகள் தற்போது, பாதுகாக்கப்பட வேண்டிய காட்டுயிர்கள் பட்டியலில் உள்ளன. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதியம் (World Wildlife Fund – WWF) 2015-இல் நடத்திய கணக்கெடுப்பின் படி 3,122 வரையாடுகள் மட்டுமே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளது,’’ என்கிறார் அவர்.

வரையாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

மேலும், வரையாடுகள் சந்திக்கும் பிரச்னைகளை விளக்கினார் காளிதாசன்.

‘‘காலநிலை மாற்றத்தால் பெரும்பாலான காட்டுயிர்கள் உணவு, நீர் மற்றும் சாதகமான தட்பவெப்ப நிலையைத் தேடி காடுகளில், மலைகளில் தாம் இருக்கும் இடத்தை விட்டு, உயரமான இடங்களுக்குப் பயணிக்க துவங்கியுள்ளன,” என்றார்.

மேலும், “சாதாரணமாக, கடல் மட்டத்தில் இருந்து 1,200 – 2,200 மீட்டர் உயரத்தில் இருக்கும் வரையாடுகள், இப்போது உயரமான பகுதிகளைத் தேடி பயணிக்க துவங்கியுள்ளன. குறையும் மழைப்பொழிவு, அதீத வெப்பம் போன்ற காரணங்களால் அவற்றின் முக்கிய உணவான புற்கள், தாவரங்களின் அடர்த்தி குறைந்துள்ளதையும் ஆய்வுகளில் பதிவு செய்துள்ளோம்,” என்றார்.

“ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிக்க முடியாத காரணத்தால், ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள கூட்டத்தினுள்ளே இனப்பெருக்கம் செய்து, வரையாடுகளின் மரபணுக்கள் பலவீனமடைந்து உள்ளதாகவும், நோய்கள் பரவுவதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேபோல், தமிழக – கேரள மாநில எல்லைப் பகுதிகளில் வரையாடுகள் வேட்டைக்கான சூழலும் நிலவுகிறது,” என்றார்.

“வரையாடுகளின் நடமாட்டம், அவை ஒவ்வொரு பருவத்திற்கும் பயணிக்கும் பரப்பளவு, செல்லும் உயரத்தை கணக்கிட்டு ‘டிஜிட்டல்’ வரைபடம் உருவாக்கி, அவற்றின் உணவுத்தேவை என அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். அறிவியல் ரீதியில் ஒவ்வொரு பகுதியின் வரையாடுகளின் மரபணு மாற்றங்கள், நோய் பாதிப்புகளை பதிவு செய்வது அவசியம்.

“இவற்றை நீண்ட கால பணியாக செய்தால் மட்டுமே எஞ்சியிருக்கும் வரையாடுகளை காக்க முடியும். தமிழக அரசு திட்டம் ஒதுக்கி தற்போது இந்த பணிகளை செய்தாலும், மிக முக்கியத்துவம் கொடுத்து நீண்ட காலத்திற்கு செய்வதுதான் தீர்வாக அமையும்,’’ என்கிறார் காளிதாசன்.

வரையாடு, தமிழ்நாடு, கேரளா, மேற்குத்தொடர்ச்சி மலை, வன விலங்குகள், காடுகள்

பட மூலாதாரம், Janardhanan Nanjundan

படக்குறிப்பு, நீலகிரியைச் சேர்ந்த சூழலியலாளர் ஜனார்த்தன் நஞ்சுண்டன்

‘வரையாடுகள் தமிழ்நாட்டின் பெருமிதம்’

நீலகிரி வரையாடுகள் தமிழகத்தின் பெருமிதம் எனவும், அவற்றை காப்பது சோலைக்காடுகளை காப்பதற்கு சமம் என்கிறார், நீலகிரியைச் சேர்ந்த சூழலியலாளர் ஜனார்த்தன் நஞ்சுண்டன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘அரேபியன் வரையாட்டில் இருந்து ஹிமாலயன் வரையாடு வந்துள்ளதாகவும் அதன்பின் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி வரையாடு உருவாகியதாகவும், உயிர்களுக்கு இடையேயான பரிணாம பகுப்பாய்வில் (Phylogenetic) கண்டறியப்பட்டு உள்ளது. அதிலும், நீலகிரி வரையாடு நீலகிரி, ஆனைமலை காடுகளில் 15 லட்சம் ஆண்டுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது,” என்றார்.

“பல லட்சம் ஆண்டுகள் கழித்தும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தற்போது அதிக நீலகிரி வரையாடு இருப்பது என்பது தமிழ்நாட்டின் பெருமைக்குரியவற்றுள் ஒன்று. வரையாடுகள் பெரும்பாலும் ஆரோக்கியமான, ஈரப்பதம் நிறைந்த சோலைக்காடுகள், மலைமுகடுகளில் தான் வாழ்கின்றன,” என்றார் அவர்.

மேலும் பேசிய அவர், “வரையாடுகள் வாழும் பகுதிகள் அருகே மனித நடமாட்டம், சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகரிப்பதால் அவை கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன. குறிப்பாக சூழல் சுற்றுலாவின் பெயர்களில் வனப்பகுதிகளில் அதிக சுற்றுலா அதிகரிப்பது வரையாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது,’’ என்கிறார் அவர்.

வரையாடுகளின் வாழ்வியலை முழுமையாகப் பதிவு செய்வது, அறிவியல் ரீதியிலான – உயிரியில் ரீதியிலான தரவுகளை சேகரித்து, வரையாடுகளின் என்னென்ன நோய் பாதிப்புகளை எதிர்கொள்கிறது என வனத்துறை கண்டறிய வேண்டும் என்கிறார் ஜனார்த்தன் நஞ்சுண்டன்.

வரையாடு, தமிழ்நாடு, கேரளா, மேற்குத்தொடர்ச்சி மலை, வன விலங்குகள், காடுகள்

பட மூலாதாரம், Dhanarupan

படக்குறிப்பு, பருவநிலை மாற்றம், சோலைக்காடுகள், புல்வெளிகள் பாதிப்பு என பல காரணங்களால் வரையாடுகள் அழிந்து, அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது,என்கின்றனர் வல்லுநர்கள்

‘வரையாடுகளை காப்பது சோலைக்காடுகளை காக்கும் செயல்’

மேலும் தொடர்ந்த ஜனார்த்தன் நஞ்சுண்டன், “வரையாடுகள் அழிந்து வருவது என்பதை, வனம் ஆரோக்கியத்தை இழந்து அடுத்தடுத்து மற்ற காட்டுயிர்கள் மரணிக்கப் போவதாகவும், இயற்கை அழிவதாகத்தான் நாம் பார்க்க வேண்டும்,” என்றார்.

“வரையாடுகளின் நடமாட்டத்தை முழுமையாக பதிவு செய்து, அங்குள்ள சோலைக்காடுகளின் உண்மை நிலையை அறிந்து மீட்க வேண்டும். வரையாடுகளை காப்பது என்பது அவற்றின் வாழ்வாதாரமான அனைத்து உயிர்களுக்குமான உயிர்நாடியான சோலைக்காடுகளை காப்பதற்கு சமமாகும்.

“அவற்றின் வழித்தடத்தில் மனிதர்களின் நடமாட்டம் இருந்தாலோ அல்லது ஆக்கிரமிப்புகள் இருந்தாலோ அவற்றைக் களைவது மிக முக்கியம். குறிப்பாக வரையாடுகளின் வாழ்விடங்களை கண்டறிந்து அங்கு சுற்றுலாவிற்கு தடை விதிக்க வேண்டும் அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

“வால்பாறை, நீலகிரி மலைரோட்டிலும், வனப்பகுதியிலும் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், அங்கு உலாவும் வரையாடுகளுக்கு மனிதர்களின் உணவுகளை வழங்கி அவற்றின் இயற்கை சமநிலையை மாற்றுவதையும் நாம் பார்க்க முடிகிறது. வரையாடுகள் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

“வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை ஒரு குறுகிய கால திட்டமாக கருதாமல், புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், நீண்ட கால நோக்கில் பாதுகாப்பு திட்டங்களை வகுத்தால் மட்டுமே, எஞ்சியிருக்கும் வரையாடுகளையாவது காக்க முடியும்,” என்கிறார் அவர்.

வரையாடு, தமிழ்நாடு, கேரளா, மேற்குத்தொடர்ச்சி மலை, வன விலங்குகள், காடுகள்

பட மூலாதாரம், Supriya Sahu

படக்குறிப்பு, தமிழக வனத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹு

‘அறிவியல் ரீதியில் தரவுகள் தயார் செய்கிறோம்’

சூழலியலாளர்களின் கோரிக்கைகளுக்கு, தமிழக வனத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய சுப்ரியா சாஹு, “வரையாடு போன்ற ஒரே ஒரு காட்டுயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து, தனித்திட்டம் அதற்கென ஆய்வு மையம் உருவாக்கியது இந்தியாவில் இதுவே முதல் முறை. வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல், நீண்ட கால அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “தற்போது, ‘ரேடியோ காலர்’ பொருத்தி அவை எங்கெல்லாம் பயணிக்கின்றன, மற்ற கூட்டத்துடன் இணைந்து தகவல் பரிமாற்றம் மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றனவா போன்றவற்றை பதிவு செய்கிறோம். அவை ஆண்டு முழுவதும் கோடை மற்றும் மழைக்காலம் என பருவம் வாரியாக பயணிக்கும் பகுதிகளை ‘ஜியோ டேக்’ செய்து ‘டிஜிட்டல்’ வரைபடமாக தயாரிக்கிறோம்,” என்றார்.

“வரையாடுகளின் நோய்கள், அவற்றின் வாழ்விடத்தின் நிலை, அங்குள்ள ஆக்கிரமிப்பு அல்லது மனித நடமாட்டம், அங்கு அவற்றின் உணவான தாவரங்களின் அடர்த்தியைப் பதிவு செய்கிறோம்.

“வரையாடுகள் வாழ்வதற்குத் தகுதியாக உள்ள வனப்பகுதிகளைத் தேர்வு செய்து அங்கு வரையாடுகளை விட்டால் அவை வாழுமா, அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்குமா என, அறிவியல் ரீதியில் ஆய்வு செய்கிறோம். இதற்கென தனியாக விஞ்ஞானிகள், மருத்துவர் குழுவை நியமித்துள்ளோம். மேலும், ஒரு வனப்பகுதியில் உள்ள கூட்டத்தை மாறுபட்ட மற்றொரு வனத்திலுள்ள கூட்டத்துடன் இணைக்கும் பணியை செய்கிறோம்,” என்கிறார் அவர்.

வரையாடு, தமிழ்நாடு, கேரளா, மேற்குத்தொடர்ச்சி மலை, வன விலங்குகள், காடுகள்

பட மூலாதாரம், Tamil Nadu Forest Department

படக்குறிப்பு, ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வரையாடு

‘இருமாநிலம் இணைந்து செய்யும் கணக்கெடுப்பு’

வரையாடுகள் வாழத்தகுதியான இடங்களை தேர்வு செய்து அங்கு மீண்டும் வரையாடுகளை அறிமுகம் செய்யவும் ஆய்வு நடத்துவதாக சுப்ரியா சாகு தெரிவிக்கிறார்.

“இதுவரை வரையாடுகளின் எண்ணிக்கை குறித்த துல்லியமான அல்லது நம்பத்தகுந்த தரவுகள் வனத்துறையில் இல்லை. இதை அறிய, நாட்டில் முதல் முறையாக, கேரள மாநிலத்துடன் இணைந்து வரையாடுகளுக்காக வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி கணக்கெடுப்பும் நடத்தவுள்ளோம். இருக்கின்ற வரையாடுகளை காத்து, எண்ணிக்கையை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். வரையாடுகள் வாழிடத்தில் மனித நடமாட்டத்தைக் களைவோம். ஆனால், அங்கு சுற்றுலாவை தடை செய்வது பல துறைகளுடன் ஆலோசித்து தான் முடிவெடுக்க முடியும்,” என சுப்ரியா சாஹு கூறினார்.