சோழர்கள்: வறட்சி, பஞ்சத்தால் உணவின்றி மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

சோழர்கள்: பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள சுவரோவியம் (சித்தரிப்புப் படம்)
  • எழுதியவர், க. மாயகிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் நாட்டின் அதிக வெப்பநிலை நிலவும் மாவட்டங்களில் ஈரோடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஈரோடு மற்றும் சேலத்தில் வெப்ப அலை வீசியதாகவும், அதிகபட்ச வெப்பமாக 108.14° வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தருமபுரி, அரூர், வேலூர், திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி தாண்டி வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தார் சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

சோழர்கள்: பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

கடந்த சில தினங்களாக 104, 105, 106 டிகிரி என வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருப்பதால் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் தங்களது பணிகளை மேற்கொள்வதில் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதேபோன்ற கடும் வெப்பம், வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டபோது பழங்கால தமிழ் மன்னர்களின் ஆட்சியில் அது எப்படி சமாளிக்கப்பட்டது? இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

இதேபோல் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவும் கடும் வெயில் தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆட்சி செய்த சோழர்கள், நாயக்கர்கள் கால அரசர்கள் எவ்வாறு வெப்பத்தால் ஏற்பட்ட வறட்சியை சமாளித்தார்கள், விவசாயிகளுக்கு என்ன சலுகைகள் வழங்கினார்கள் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

சோழர்கள் காலத்தில் சூழல் காலநிலை மாற்றத்தால் நிலத்தில் ஏற்பட்ட வறட்சி குறித்து இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் க.பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

800 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் அருகே ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட வறட்சி

சோழர்கள்: பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

தண்ணீர் தட்டுப்பாடு தற்போது பல இடங்களில் காணப்படுகிறது. இதே நிலை 800 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் ராஜராஜ சோழரின் 14ஆம் ஆட்சியாண்டில் (கி.பி .1160) கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள எறும்பூர் கிராமத்தில் ஏற்பட்டதாக முனைவர் க.பன்னீர்செல்வம் விவரித்தார்.

இதை எறும்பூரில் உள்ள கடம்பவனேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள கல்வெட்டு மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறிய அவர் அதைப் படித்தும் காண்பித்தார்.

“எங்களூர் இவ்வாண்டு ஆவணி மாசத்தும் புரட்டாசி மாசத்தும் நீர் தட்டுப்பட்டு ஒரு பூ நடைபெறாமையாலும், நட்டவையும் பயிர்- பாழாய் தட்டுப் பட்டமையில் இத்தட்டுக்கு உடலாக” எனத் தொடங்கும் கல்வெட்டு இந்த ஊரில் ஏற்பட்ட வறட்சி நிலை குறித்து தெளிவாகப் பதிவு செய்துள்ளது என்று கூறினார்.

அவரது கூற்றின்படி, ஜெயங்கொண்ட சோழ வளநாட்டில் உள்ள ஆக்கூர் நாட்டில் இருக்கும் தளச்சங்காட்டில் இந்த ஆண்டு எறும்பூரில் ஆவணி மாதத்திலும், புரட்டாசி மாதத்திலும் ஏற்பட்ட பஞ்சத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருபோகம் நடவு நடுவதற்கு முடியாமலும், நட்டுள்ள பயிர்கள் பாழாய்ப் போகின்ற நிலையிலும் இருந்துள்ளன என்று கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோழர்கள்: பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள சுவரோவியம் (சித்தரிப்புப் படம்)

மாற்றுப் பயிர் செய்து வரியில்லா நிலத்தை வழங்கியது

மேலும், “இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அந்த ஊரைச் சேர்ந்த முதலிகளும் கூட்டப் பெருமக்களும், வேலி நாயகம் செய்வோரும் ‘அரைவேலி நான்குமா’ நிலத்தை வெற்றிலைத் தோட்டமாக மாற்றிக் கொடுத்துள்ளனர்.”

அந்தத் தோட்டப் பகுதியை வரியில்லா நிலமாகவும் மாற்றிக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஊரில் ஏற்பட்டுள்ள பஞ்சத்திற்கு நிவர்த்தி செய்வதற்கு அரசு நிலம் தந்து, வரி நீக்கி சலுகை வழங்கியதை அறிந்துகொள்ள முடிவதாகக் கூறுகிறார் முனைவர் பன்னீர்செல்வம்.

தஞ்சாவூரில் ஏற்பட்ட வறட்சி

சோழர்கள்: பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

இரண்டாம் ராஜராஜ சோழனின் 16ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1162) தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் வட்டத்தில் உள்ள திருக்கடையூர் கோயிலில் உள்ள கல்வெட்டு பஞ்சம் பற்றிய செய்தியைத் தெளிவாக உணர்த்துகின்றது.

“இந்த ஆண்டு ஆவணி மாதத்திலும், புரட்டாசி மாசத்திலும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஒரு பூவும் நடைபெறவில்லை, நட்டுள்ள பயிர்களும் பாழாய்ப் போயின” எனத் தொடங்கும் கல்வெட்டு தண்ணீர் இல்லாமல் வறட்சியால் பயிர்கள் பாழாய்ப் போனதைத் தெரிவிக்கின்றது.

இவற்றைச் சரி செய்வதற்குக் கருவறை சபையார்கள் உட்பட்டுள்ள அடைப்பு முதலிகள், கூட்டப் பெருமக்கள் உள்ளிட்டோர் அனைவரும் திருகடவூர் உடையார் ஸ்ரீ காலகால தேவர் கோவிலின் மூலஸ்தான முடையார்களிடம் இறையிளியாக (முழுமானியம் பெற்று) வெற்றிலைத் தோட்டம் அமைத்துக் கொள்வதற்கு நிலம் வழங்கியதையும் கல்வெட்டுச் செய்தி தெளிவாக உணர்த்துவதாகக் கூறுகிறார் பன்னீர்செல்வம்.

பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் சாகும் நிலை

சோழர்கள்: பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில் தெற்குச் சுவரில் உள்ள மூன்றாம் குலோத்துங்க சோழரின் 23ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1201) கல்வெட்டில் பஞ்சத்தின் கொடூர தன்மை பற்றிய செய்தி உள்ளது.

“காலம் பொல்லாத காலமாக காசுக்கு முன்னாழி நெல்லு விற்று” என்று தொடங்கும் அந்தக் கல்வெட்டில் அந்த ஊரில் வசித்து வந்த வெள்ளாளன் காட்டுடையானும் அவனது இரண்டு மகள்களும் பஞ்சத்தால் உணவு கிடைக்காமல் சாகும் நிலை ஏற்பட்டதை விவரிக்கிறது.

இதனால் “அவர் திருப்பாம்புரம் திருக்கோவிலுக்குத் தம்மையும் தமது இரண்டு மகள்களையும் ஒரு காசுக்கு 3 நாழி என்று மதிப்பிட்டு 120 காசுகளுக்கு மூன்று பேர்களையும் ஆதி சண்டேஸ்வரர் பாதத்தில் நீர் வார்த்து ஸ்ரீ பண்டாரத்தில் கொண்ட காசு 120 பெற்று கொண்டுள்ளார்.

இதன்மூலம் ஊரில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால் மக்கள் உணவின்றி உயிர்விடும் நிலையில் இருந்துள்ளதையும் அறிய முடியும்.

மேலும் “தங்களைக் காப்பாற்றிக்கொள்ள திருக்கோவிலுக்கு குடும்பத்தோடு அவர்கள் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டுள்ளதையும் தெரிந்துகொள்ள முடிகின்றது.”

விவசாயத்திற்காக கோவில் நகைகளை அடகு வைத்தல்

சோழர்கள்: பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஆபத் சகாயேஸ்வரர் கோவில் தெற்கு சுவற்றில் உள்ள இரண்டாம் ராஜராஜ சோழனின் ஆறாம் ஆட்சி ஆண்டு (கி.பி.1152) கல்வெட்டில் பஞ்சம் பற்றிய குறிப்பு உள்ளது.

அதில் சுத்தமல்லி வள நாட்டில் உள்ள பிரம்மதேயம் ஆலங்குடியான ஸ்ரீ ஜனநாத சதுர்வேதி மங்களத்து சபையார்கள், சதுர சாலை செம்பியன் மாதேவியில் கூட்டம் கூடியிருந்து இவ்வூர் உடையார் திருவம்பூளை உடையார் கோவில் தொடர்பான முடிவை எடுத்தனர்.

இதேபோல் மற்றொரு கல்வெட்டில் இரண்டாம் ராஜேந்திர சோழரின் 3வது ஆட்சி ஆண்டில் ((கி.பி. 1055) உருவான பஞ்சம் பற்றிய குறிப்பு உள்ளது. அப்போது “ஆலங்குடியில் விவசாயம் செய்வதற்கு விதை நெல் இல்லை, உணவுக்கு அரிசியும் இல்லை. அதனால் நெல் வாங்குவதற்காக கோவிலின் பண்டாரத்தில் இருந்து (தற்போதைய கூட்டுறவு பண்டக சாலை போன்ற அமைப்பு) ஊரவர்கள் கடனாகப் பொற்காசுகளை பெற்றுள்ளனர்.”

“கூத்தாடும் தேவர், திருச்சரி, திரு உதரபந்தனம், நாகபானம், திருச்சிலம்பு ஆகிய ஆபரணங்கள் மூலம் பெற்றுக்கொண்டிருந்த பொன், இவற்றுடன் இஷப தேவர், திருச்சேரி, திரு மகறகுழை மற்றும் ஆளுடையார் பொன் உட்பட ஒட்டுமொத்தமாக திருக்கோவிலின் பண்டாரத்தில் இருந்து 1011 கழஞ்சுகளை கடனாகப் பெற்றுள்ளனர்.”

அதற்கு ஈடாக ஆலங்குடி திருக்கோயில் வெள்ளிப் பாத்திரங்களையும் ஆபரணங்களையும் அடகு வைத்துள்ளனர் என்று அந்தக் கல்வெட்டு விளக்குவதாகக் கூறுகிறார் முனைவர் பன்னீர்செல்வம்.

இந்தக் கல்வெட்டு ஆதாரங்கள் பஞ்சத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை அப்போதைய அரசு சரி செய்ய உதவியதைத் தெரிவிக்கிறது.

மதுரையில் பஞ்சம் ஏற்பட்டதால் புதிதாக விதித்த வரிகளை தள்ளுபடி செய்த அரசு

சோழர்கள்: பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

சோழர்கள் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போல் நாயக்கர்கள் காலத்திலும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பஞ்சம் ஏற்பட்டது என்று கூறி அதையும் முனைவர் பன்னீர்செல்வம் விளக்கினார்.

மதுரையில் உள்ள சுந்தரேசர் திருக்கோவிலின் முதல் பிரகாரத்தின் தூணில் பொறிக்கப்பட்டுள்ள விஜய ரங்க சொக்கநாதர் நாயக்கரின் கி.பி.1710ஆம் ஆண்டு கல்வெட்டில் பஞ்சம் பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் விஜயரங்க சொக்கநாதர் ஆட்சிக்கு உட்பட்ட சாமநத்தம், சிக்கலை, புங்கங்குளம் மற்றும் செங்குளம் ஆகிய நான்கு கிராமங்களில் வசிப்பவர்களில் கோவிலின் சுவாமி பாதம் தாங்கியாகப் பணியாற்றிய 64 பேர்களுக்கு ஜீவனத்திற்காக மானியத்தில் நிலம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலங்களுக்கு அரண்மனை அதிகாரிகள் அப்போது அதிக வரியை விதித்தததாகக் கூறுகிறார் பன்னீர்செல்வம்.

இதை அறிந்த பாதம் தாங்கிகள் 64 பேரும் (சுவாமியை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்பவர்கள் பாதம் தாங்கிகள் எனப்படுவர்) அதிக வரியை அரசாங்கத்திற்குச் செலுத்த முடியாது என்று மறுத்து “மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் முன்பு கூட்டமாகத் தற்கொலை செய்வதற்கு முடிவு செய்தனர். அப்போது ஒருவர் திடீரென்று கோவிலின் திருக்கோபுரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.”

அப்போது அரண்மனைப் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக வந்து பாதம் தாங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்படி, “பழையபடியே உங்களுக்குக் கொடுத்துள்ள நிலங்களை மானியமாக அனுபவித்துக் கொள்ளலாம் என்றும், பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் புதிதாக விதித்த வரிகளை அந்நிலங்களுக்கு அரசாங்கம் முழுமையாகத் தள்ளுபடி செய்துள்ளது என்றும்” கூறியுள்ளனர்.

இப்படி அரசாங்கம் வரி தள்ளுபடி செய்வதற்குக் காரணம் அப்போது நிலவிய கொடிய பஞ்சம் என்பது இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பஞ்ச வாரியம்

சோழர்கள்: பஞ்சத்தால் சோறு கிடைக்காமல் மக்கள் சாகும் நிலை ஏற்பட்டபோது செய்தது என்ன?

மேலும் சோழர்கள் காலத்தில் பஞ்ச வாரியம் என்ற நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஒவ்வோர் ஊரிலும் அது மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளதாகவும் வரலாற்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பஞ்சம் வரும் போதெல்லாம் மக்களைக் காப்பதற்கு இது செயல்பட்டுள்ளது. நாட்டில் எப்போதெல்லாம் பஞ்சம் ஏற்பட்டதோ அப்போதெல்லாம் ஆறுகளும், ஏரிகளும் குளங்களும், நீர்நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் காண முடிகிறது.

விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டதை நம்மால் அறிய முடிவதாகக் கூறுகிறார் இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் க.பன்னீர்செல்வம்.

சோழர்கள் காலத்தில் (கி.பி.846 முதல் 1275) அதீத வெப்பத்தால் ஏற்பட் பஞ்சம் பற்றிய செய்திகளை சுமார் 30 கல்வெட்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்துள்ள சொற்களைக் கொண்டு அறிய முடிவதாகவும் அவர் விளக்கினார்.