வரலாறு காணாத வகையில் காங்கிரஸ் மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி – வெற்றிக்கான வியூகமா? பலவீனமா?

காங்கிரஸ் வியூகம் என்ன?

பட மூலாதாரம், ANI

  • எழுதியவர், சல்மான் ரவி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

அது 2009 மக்களவை தேர்தல். கடைசி முறையாக காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்ட தேர்தல் அது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 440 வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 209 இடங்களில் வெற்றி பெற்றது.

மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை விட இது குறைவு. மத்தியில் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் அமைந்தது.

அதற்கு முன் 2004 மக்களவைத் தேர்தலில் 417 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 145 இடங்களை மட்டுமே பெற்றது. 1996 இல் காங்கிரஸ் அதிகபட்சமாக 529 இடங்களில் போட்டியிட்டது.

18-வது மக்களவைக்கான முதல் கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த முறை காங்கிரஸ் ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கிறது

காங்கிரஸ் இதுவரை 301 இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இறுதியாக அக்கட்சி 320 இடங்கள் வரையில் போட்டியிட வாய்ப்புள்ளது. 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது இதுவே முதல்முறை.

2014 தேர்தலில் 464 வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸ், 2019 தேர்தலில் 421 இடங்களில் போட்டியிட்டது. அதில் 52 இடங்களில் மட்டுமே அது வெற்றி பெற்றது.

காங்கிரஸ் வியூகம் என்ன?

பட மூலாதாரம், @KHARGE/X

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயுடன் ராகுல் காந்தி

காங்கிரஸின் நிலை எப்படி இருக்கிறது?

இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸின் நிலை குறித்து கேள்விகள் எழுவது நியாயமானதே. பழம் பெரும் தேசியக் கட்சியான காங்கிரஸ் ஏன் இப்படிச் செய்ய வேண்டி வந்தது என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அமைப்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலைமை அதே திசையைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

நீண்ட காலமாக காங்கிரஸை உன்னிப்பாக கவனித்து வரும் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான ரஷீத் கித்வாய் ’தற்போது காங்கிரஸ் தன்னை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறது’ என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

”இந்த முறை மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை குறிப்பாக பிரதமர் நரேந்திர மோதியை தன் சொந்த பலத்தில் எதிர்கொள்ளும் நிலையில் தான் இல்லை என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ளத் தொடங்கியது. அதனால் காங்கிரஸ் பிராந்திய கட்சிகளையே அதிகம் நம்பியிருக்கிறது. ஒருவகையில் தியாக உணர்வுடன் காங்கிரஸ் இப்படி செய்திருக்கிறது என்றும் சொல்லலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

”பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மட்டுப்படுத்த பிராந்தியக் கட்சிகளின் உதவியைப் பெறுவதைத் தவிர காங்கிரஸுக்கு வேறு வழி இருக்கவில்லை,” என்று கித்வாய் தெரிவித்தார்.

காங்கிரஸ் வியூகம் என்ன?

பட மூலாதாரம், @INCINDIA/X

இந்த முறை காங்கிரஸ் தனது வெற்றி இலக்கை மிகக் குறைவாகவே நிர்ணயித்துள்ளது. பாதி இடங்களையாவது வென்றால் அது அக்கட்சிக்கு பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் பிராந்தியக் கட்சிகளுடன் காங்கிரஸின் கூட்டணி எந்த அளவுக்கு வலுவாக இருக்கும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

“காங்கிரஸ், கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் அதனுடன் கூட்டு சேர்ந்துள்ள கட்சிகள் தத்தமது தேர்தல் அறிக்கைகளை கொண்டு வந்துள்ளன. அந்தக் கட்சிகள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை முழுமையாக உள்வாங்கவில்லை.

எனவே, காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பதை தேர்தல் முடிவுகள்தான் சொல்லும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியா கூட்டணியின் கூட்டு அறிக்கையாக இருந்திருக்க வேண்டும். இங்கும் காங்கிரஸின் குறி தவறிவிட்டது,” என்று ரஷீத் கித்வாய் விளக்கினார்.

பிராந்தியக் கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடுகின்றன?

காங்கிரஸ் வியூகம் என்ன?

பட மூலாதாரம், @INCINDIA/X

படக்குறிப்பு, சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவுடன் ராகுல் காந்தி

மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில், சுமார் 200 இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும், பிராந்தியக் கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதிலும் காங்கிரஸுக்கு இதை விட சிறந்த வழி இருக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவிழந்து வருகிறது. அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளில் அக்கட்சியின் பெரிய மற்றும் சிறிய தலைவர்கள் ஒவ்வொருவராக பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இந்த நிலையில் காங்கிரஸுக்கு இதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை என்று மூத்த செய்தியாளர் என்.கே. சிங் கூறினார்.

என்.கே.சிங் தற்போது பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன்போது, பாக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து தொலைபேசியில் பேசிய அவர் தகுதியான வேட்பாளர்களின் பற்றாக்குறையை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டுள்ளது என்று கூறினார்.

”தற்போதைய சூழ்நிலையில் எல்லா தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸிடம் வேட்பாளர்கள் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிராந்தியக் கட்சிகளை ஆதரிப்பதும், அவர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவதும்தான் அக்கட்சிக்கு இருந்த ஒரே வழி,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வரிசையில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிராந்திய கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகபட்ச இடங்களை வழங்கியுள்ளது. உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பிகார் மற்றும் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 201 இடங்கள் உள்ளன. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் 20 அல்லது அதற்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்.

இதேபோல் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனை 21 இடங்களிலும், ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

காங்கிரஸின் பாதையை பாஜக பின்பற்றியதா?

காங்கிரஸ் வியூகம் என்ன?

பட மூலாதாரம், @BJP4INDIA/X

”காங்கிரஸ் செய்வது அரசியலில் புதிதல்ல. ஏனென்றால் பாரதிய ஜனதாவும் இதை முன்னரே செய்திருக்கிறது. பல கட்சி கூட்டணியே, எதிர்கால அரசியலின் வடிவமாக இருக்கும்,” என்று அரசியல் விமர்சகர் வித்யா பூஷண் ராவத் தெரிவித்தார்.

“அரசியலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது பிராந்தியவாதமும் அதிகரித்து வருகிறது. பிராந்திய லட்சியங்களும் அதிகரித்து வருகின்றன. தற்போதைய அரசியல் சூழல் நிறைய மாறப்போகிறது. வரும் ஆண்டுகளில் தேசிய கட்சிகளின் வாக்கு சதவிகிதமும் குறையும். வாக்குகளை பிரிப்பதற்கு பதிலாக பிராந்தியக் கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைப்பதே காங்கிரஸுக்கு சிறந்த தேர்வாக இருந்தது. அதையேதான் அது செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களை தியாகம் செய்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தற்போது இருக்கும் சூழலில், குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளருக்கு சவால் விடக்கூடிய வேட்பாளர்களை ஆதரிப்பதே அதன் அரசியல் எதிர்காலத்திற்கான சிறந்த வழி என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது பாரதிய ஜனதா கட்சி எப்படி அரசியல் செய்கிறதோ, முன்பு காங்கிரஸும் அதைத்தான் செய்து வந்தது என்கிறார் ராவத். சினிமா நட்சத்திரங்களை களமிறக்குவது, மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களை தங்கள் பக்கம் இழுப்பது போன்றவை இதில் அடங்கும்.

அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் ராஜேஷ் கன்னா ஆகியோரின் உதாரணங்களை மேற்கோள் காட்டிய அவர், அக்கால மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக இந்த பெரிய சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் களமிறக்கியது என்று கூறினார்.

“முன்பு சமூகம் மற்றும் நிர்வாகத்துறையின் ’உயர் தட்டு’ காங்கிரஸுடன் இருந்தது. இப்போது பாரதிய ஜனதா கட்சியுடன் அது இருக்கிறது. இந்த மக்களவை தேர்தலில் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு எந்த அளவுக்கு சவால் கொடுக்க முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காங்கிரஸின் எதிர்காலமும் இதைப் பொருத்தே அமையும்,” என்று ராவத் குறிப்பிட்டார்.