மோதி சர்ச்சை பேச்சு: எதிர்க்கட்சிகளின் புகார் மீது நடவடிக்கை என்ன? தேர்தல் ஆணையம் மீது எழும் கேள்விகள்

பாஜக, நரேந்திர மோதி, காங்கிரஸ், தேர்தல் ஆணையம், மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், வினீத் கரே
  • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரைக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

பிரதமர் மோதியின் கூற்றுகளை ராகுல் காந்தி உட்பட பல கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மோதியின் கூற்றுகள் பொய்யானவை என்று கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக மீது காங்கிரஸ் 16 புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோதி கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் அவர்களை ‘நாட்டில் ஊடுருவியவர்கள்` என்றும் ‘அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள்’ என்றும் கூறியிருந்தார்.

பாஜக, நரேந்திர மோதி, காங்கிரஸ், தேர்தல் ஆணையம், மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

மன்மோகன் சிங் என்ன பேசியிருந்தார்?

ஆனால், பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங்கின் 18 ஆண்டுகால பழைய உரையில், இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை வழங்குவது குறித்து மன்மோகன் சிங் பேசவில்லை.

2006-இல் மன்மோகன் சிங், `பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்` என்று கூறியிருந்தார். புதிய திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவும், வளர்ச்சியின் பலன்களை பெறவும் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வளங்கள் மீதான முதல் உரிமை கோரல் இருக்க வேண்டும்` என்றார்.

மன்மோகன் சிங் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையில் `க்ளைம்` என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார்.

நாட்டில் உள்ள சுமார் 20 கோடி முஸ்லிம்களுக்கு ‘ஊடுருவல்’ என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்த முடியும் என்றும் பிரதமர் மோதியின் அறிக்கை விமர்சிக்கப்படுகிறது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்கள் சந்திப்பில், “இந்தியா கூட்டணிக்கு, நாட்டு மக்களை விட சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்கள்தான் முக்கியம். தயக்கமில்லாமல் அதைச் சொல்ல தைரியம் வேண்டும்,` என்றார்.

அரசியல் புகார்களைத் தவிர, 17,000 மேற்பட்ட சாமானிய குடிமக்களும் இந்த ‘வெறுக்கத்தக்க பேச்சு’க்காக பிரதமர் மோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அனைத்து விமர்சனங்களுக்கும் மையமாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து மீண்டும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

பாஜக, நரேந்திர மோதி, காங்கிரஸ், தேர்தல் ஆணையம், மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரசு திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் பிரதமர் மோதியின் படத்தைப் பயன்படுத்துவது குறித்து புகாரளிக்கப்பட்டது

மோதி மீதான புகார்கள்

நடந்துவரும் மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

அதன்படி, தேர்தல் பிரசாரத்தின் போது மதச் சின்னங்களையோ, மதம், மதம், சாதி அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவோ கூடாது.

நடத்தை நெறிமுறைகளின்படி, எந்தவொரு மத அல்லது இனம் சார்ந்த சமூகத்திற்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேசுவது அல்லது முழக்கங்களை எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் சிலர் பிரதமர் மோதி மீது நடவடிக்கை எடுக்கக் கோருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் திங்கள்கிழமை மாலை தேர்தல் ஆணையத்தை அணுகிப் புகார் அளித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 16 புகார்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறினார்.

இந்தப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பாஜக மீதான முக்கிய புகார்கள் என்ன?

  • நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது பல்கலைக்கழக மானியக் குழு நியமனம்
  • பாஜக வேட்பாளர் தபன் சிங் கோகோய் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது
  • உத்தரபிரதேசத்தில் அரசு திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் பிரதமர் மோதியின் படத்தைப் பயன்படுத்துவது
  • தேர்தல் பிரசாரத்தில் மதம் சார்ந்த படங்களையும் ராமர் கோயிலையும் பயன்படுத்துவது
  • கேரளாவில் மாதிரி வாக்குப்பதின் போது இயந்திரங்கள் பழுதடைந்தது
  • ராணுவத்தின் படங்களை பாஜக தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துகிறது.
பாஜக, நரேந்திர மோதி, காங்கிரஸ், தேர்தல் ஆணையம், மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், ANI

தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறதா?

இந்தப் புகார்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. பிரதமர் மோதியின் அறிக்கைகள் மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் கொடுத்தது பற்றியோ, நடவடிக்கை எடுத்தது பற்றியோ எந்த தகவலும் இல்லை.

கடந்த மார்ச் மாதம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகாய், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோதிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

தேர்தல் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோதி விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக சாகேத் கோகலே கூறியிருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸின் இந்த புகாரின் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுத்ததா என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பா.ஜ.க தொடர்பான விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மையையும், எதிர்க்கட்சி விவகாரங்களில் தீவிரமாக செயலாற்றுவதையும் சிலர் ஒப்பிடுகின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, நவம்பர் 2023-இல், பிரதமர் மோதியின் பெயரை குறிப்பிடாமல் ‘பனவ்தி’ என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியதால், தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

சமீபத்தில், ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறிய ஆட்சேபகரமான கருத்து குறித்து புகார் எழுந்ததையடுத்து, தேர்தல் ஆணையம் அவருக்கு 48 மணி நேரம் தடை விதித்தது.

ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அதுபற்றி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் சுமார் 200 புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 169 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் 51 புகார்கள் அளிக்கப்பட்டு, அதில் 38 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸிடம் இருந்து 59 புகார்கள் பெறப்பட்டன, அவற்றில் 51 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து 90 புகார்கள் பெறப்பட்டு, அதில் 80 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இவற்றில், தேர்தல் அறிவிப்புக்கு பின், காங்கிரஸ் கட்சியின் புகாரின் பேரில், `வளர்ந்த இந்தியா` மெசேஜ்களை, வாட்ஸ்அப்பில் பா.ஜ.க அனுப்ப அரசு தடை விதிப்பது, நெடுஞ்சாலைகள், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் விதிப்படி பிரசாரம் செய்வது பற்றிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பாஜக, நரேந்திர மோதி, காங்கிரஸ், தேர்தல் ஆணையம், மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் ஆணையம் கண்டிப்பு காட்டிய வரலாறு

கடந்த 1987-இல், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தனது ஆவேசமான தேர்தல் பேச்சுக்காக ஆறு ஆண்டுகள் போட்டியிடவும் வாக்களிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில், அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் 1999-ஆம் ஆண்டு பால் தாக்கரேவின் வாக்குரிமையை 6 ஆண்டுகள் தடை செய்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, ​​’எனக்கு இஸ்லாமியர்களின் ஓட்டுகள் வேண்டாம்’ என, பால் தாக்கரே கூறியிருந்தார்.

அதற்காகவே அவருக்கு இந்த தண்டனை வழங்க்கப்பட்டது.

பிரதமர் மோதி பேச்சு குறித்து நிபுணர்களின் சொல்வது என்ன?

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான `ஏடிஆர்`-இன் பேராசிரியர் ஜக்தீப் சோக்கர், தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், பிரதமர் மோதியின் பேச்சு நடத்தை விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1995 மற்றும் 123(3), 123(3 ஏ) மற்றும் 125 ஆகிய பிரிவுகளை மீறுவதாக உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 (A) சட்டத்தை மீறுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் கோரியுள்ளார்.

சி.எஸ்.டி.எஸ் அமைப்பின் ஹிலால் அகமது கூறுகையில், இந்த பேச்சு பிரதமரின் முந்தைய உரைகள் போல் இல்லை என்றார்.

அவர் கூறும்போது, ​​“பிரதமர் மோதி கடந்த காலங்களில் இந்து, இந்துத்வா, முஸ்லீம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். அவர் தனது 10 ஆண்டுகால ஆட்சியில் இந்துத்துவா அல்லது முஸ்லீம் என்ற வார்த்தையை மூன்று அல்லது நான்கு முறை பயன்படுத்தியிருக்கிறார், ஆனால் அவர் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்பது குறித்து அவர் தனது வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பைக் கொடுக்கவில்லை.

பா.ஜ.க-வுக்கு மூன்று வகையான வாக்காளர்கள் உள்ளனர். முதலில் நிரந்தர வாக்காளர்கள், இரண்டாவது முன்பு மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள், இப்போது பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பவர்கள், மூன்றாவது யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கும் `தத்தளிக்கும் மனநிலை கொண்ட வாக்காளர்கள்`. இப்படித்தான் மோதி தம்மை உருவாக்கிக் கொண்டார். வாக்கு சதவீதம் குறைந்துள்ள இந்த நேரத்தில், பிரதமர் மோதியின் இந்த பேச்சு, கட்சி அதன் அடிப்படை அரசியலை நோக்கி செல்கிறது என்பதை காட்டுகிறது,~ என்றார்.

ஹிலால் அகமதுவின் கூற்றுப்படி, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை உள்ளன. ஆனால் இந்துத்துவா பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை. இந்த சமீபத்திய பேச்சு மீதமுள்ள வாக்குகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாஜக, நரேந்திர மோதி, காங்கிரஸ், தேர்தல் ஆணையம், மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், ANI

எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்வது என்ன?

பிரதமர் மோதியின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “மோதி ஜி பேசியது வெறுப்புப் பேச்சு. வேண்டுமென்றே கவனத்தை திசை திருப்பும் தந்திரம். எங்கள் தேர்தல் அறிக்கை அனைவருக்கும் சமத்துவம் பற்றி பேசுகிறது, உண்மையின் அடித்தளத்தில் உள்ளது,” என்றார்.

மோதியின் பேச்சு `பயங்கரமானது’ என்று இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார். `தேர்தல் ஆணையத்தின் மௌனம் மேலும் அச்சமூட்டுகிறது` என்றார்.

மேலும், மோதியின் ஆத்திரமூட்டும் பேச்சு தேர்தல் நடத்தை விதிமுறைகளையும், வெறுப்புப் பேச்சு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் முற்றிலும் மீறுவதாகும், என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்.), `பிரதமரின் பேச்சு மிகவும் விஷமமானது, வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு நிறைந்தது, இதன் நோக்கம் இந்திய மக்களிடையே மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதாகும்`, என்று கூறியிருக்கிறது.