மகாராஷ்டிராவில் பாஜக அணி 48-ல் 41 இடங்களை மீண்டும் வெல்வது சாத்தியமா? பிபிசி கள ஆய்வு

மகாராஷ்டிராவில் பாஜக நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், வினீத் காரே
  • பதவி, பிபிசி செய்தியாளர்

குழப்பம், கூச்சல், சலசலப்பு … மஹாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி ) ஆகிய கட்சிகளில் பிளவு ஏற்பட்ட பிறகு அங்கு அதிகம் ஒலிக்கும் வார்த்தைகள் இவை. மகாராஷ்டிராவில் இரு கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிரிவினை குழப்பங்களுக்கு மத்தியில் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து தற்போது இரண்டு சிவசேனா மற்றும் இரண்டு என்சிபி என நான்கு கட்சிகள் உள்ளன. ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும், பிரசார களத்தில் செயல்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களால், மக்கள் விரக்தியடைந்த மனநிலையில் உள்ளனர்.

புனேவின் நான்டெட் நகரத்தில் வசிக்கும் ஷோபா கார்லே தேர்தல் பற்றி கூறுகையில், “எங்கு பணம் இருக்கிறதோ, அங்கு தலைவர்கள் சென்றுவிடுகிறார்கள். சாமானியர்களோ விரக்தியில் வாக்களிக்க செல்ல விரும்பாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்கிறார்.

புனேவைச் சேர்ந்த மற்றொரு வாக்காளர், “ஊழல் செய்பவர்களை ஏன் கட்சிக்குள் சேர்க்கிறீர்கள்? கட்சிக்குள் நுழையும் ஊழல் தலைவர்கள் அமைச்சர்கள் ஆகிவிடுகிறார்கள். இது எப்படி நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்” என்றார்.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற சிவாஜி பூங்காவிற்கு வெளியே தனது நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற எஸ்பி வேலங்கர், “கட்சி பிளவுக்கு லோக் பக்‌ஷா எதிரானது’’ என்கிறார்.

அவர் அருகில் நின்ற தர்ஷன் பாட்டீல், “பாஜக உங்கள் கட்சியை உடைக்கிறது. உங்கள் செயல்பாட்டில் குறை இருப்பதால், கட்சியில் பிளவு ஏற்படுத்துவது பாஜக-வுக்கு சுலபமாகிறது’’ என்றார்.

“ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது’’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த தர்ஷன் பாட்டீல், “யாருடைய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது? இந்துக்களின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதா அல்லது சாதாரண பாமரனின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

2019 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 இடங்களில் 41 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது. பாஜக 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன.

2024 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்நிலையில், 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை, இம்முறையும் மகாராஷ்டிராவில் பாஜக நிகழ்த்துமா?

மகாராஷ்டிராவில் பாஜக நிலை என்ன?

மகாராஷ்டிராவில் அனுதாப அலை வீசுகிறதா?

2019ல் சிவசேனாவின் முழு பலமாக பாஜக இருந்தது. கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் நடந்த சில நிகழ்வுகளுக்குப் பிறகு, சிவசேனாவின் ஒரு தரப்பும், என்சிபியின் ஒரு தரப்பும் பாஜகவில் இணைந்தன. மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கட்சி பிளவுக்குப் பிறகு சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே மீது ‘அனுதாப அலை’ வீசுவதாகக் கூறப்படுகிறது.

ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சாரதி என்னும் கிராமத்தில், மராத்தா இடஒதுக்கீடு கோரி மனோஜ்-ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அக்கிராமத்தில் பாஜக மீது வெறுப்புணர்வு இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களை போலவே, பாஜக ஆளும் மகாராஷ்டிராவும் வேலையின்மை, பணவீக்கம், விவசாயிகள் பிரச்னைகள் போன்ற சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் பிரதமர் மோதியால் இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிபிசியிடம் பேசிய வல்லுநர்கள், பல்வேறு காரணங்களால் இம்முறை பாஜக முன்னிலை வகிக்கும் இடங்களின் எண்ணிக்கை குறையலாம் என்று கூறியுள்ளனர். பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 41 இடங்கள் கிடைக்கும் என்று ஒரு கருத்து கணிப்பும், 37 இடங்கள் கிடைக்கும் என்று மற்றொரு கருத்து கணிப்பும் குறிப்பிட்டுள்ளது.

மகா விகாஸ் அகாடி (MAVIA ) அரசியல் கூட்டணி 28 இடங்களை கைப்பற்றும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த (ஷரத் பவார்) ஜிதேந்திர அவாத் கூறினார். மற்றொரு புறம் அமராவதியில் உள்ள தனது சொந்த தொகுதியில் பத்திரிகையாளர்களால் சூழப்பட்ட பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா,“ பாஜக தலைமையிலான மகா கூட்டணி மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெற்றி பெறும்’’ என்று கூறினார்.

இந்தத் தேர்தலில், ஒருபுறம் சிவசேனாவும் (உத்தவ் தாக்கரே) என்சிபியும் (சரத் பவார்) சாமானிய மக்கள் மத்தியில் தங்கள் வாக்குறுதிகளை வலுவாக முன்வைக்கும் கட்டாயத்தில் உள்ளனர். மறுபுறம் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் அவர்களுடன் செல்லும் தலைவர்கள் அவர்களின் முடிவு குறித்து மகாராஷ்டிரா மக்களின் கருத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக மகாராஷ்டிரா இருந்தது. ஆனால் உட்கட்சி மோதலின் விளைவாக காங்கிரஸ் பலத்தை இழந்தது. அப்படி இருந்தும், மராத்வாடா, விதர்பாவில் சில பகுதிகளில் காங்கிரசுக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது.

பிருத்விராஜ் சவான் கருத்தின்படி, இந்த தேர்தலில் மேற்கு வங்கம், பிகார், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இடங்களிலும் பாஜக சரிவை சந்திக்கும் என்று உறுதியாக நம்புகிறார்.

உத்தரபிரதேசத்தில் பாஜக அதன் செல்வாக்கின் உச்சத்தை எட்டியுள்ளது. அதே சமயம் மகாராஷ்டிரா எவ்வளவு முக்கியம் என்பதை கட்சி உணர்ந்துள்ளது.

ஆனால் தற்போது பாஜகவின் முன் பல சவால்கள் உள்ளன.

மகாராஷ்டிராவில் பாஜக நிலை என்ன?

பாஜக மீண்டும் வெற்றி பெறுமா?

ஒரு காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கும் சிவசேனா/பாஜகவுக்கும் இடையே பெரிய மோதல் நிலவியது. 1984ல் காங்கிரஸ் அல்லாத கட்சி (non-Congressism) என்ற பெயரில் சிவசேனாவும் பாஜகவும் முதன்முதலில் கைக்கோர்த்தன.

1987-ல் சரத் பவார் காங்கிரஸில் மீண்டும் இணைந்தபோது, சிவசேனா மராத்தி மக்களின் உரிமைகளுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுத்தது, அந்த நிலைபாடு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலின் மையமாக மாறியது. அதுதான் சிவசேனாவின் விரிவாக்கத்தின் ஆரம்ப புள்ளி.

அந்த நேரத்தில் மராத்தி மக்களின் பிரச்னை இந்து மதம் என்பது போன்று திசை திருப்பப்பட்டது. அதே சமயம் வேறு சில காரணங்களால் கூட்டணியில் பாஜக ஆதிக்கம் செலுத்தியது. 2012ல், சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் மரணம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் சிவசேனாவை மேலும் பலவீனப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு வீசிய நரேந்திர மோதியின் அலையால் மகாராஷ்டிராவில் பாஜக 23 இடங்களில் வெற்றி பெற்றது.

2019-ல் பாஜக-சிவசேனா கூட்டணி 41 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியது. பிரதமர் மோதியின் பிம்பம், புல்வாமா நிகழ்வு போன்றவை இந்த வெற்றிக்கு வழிவகுத்ததாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மும்பையில் நாரிமன் பாயிண்டில் இயங்கும் லோக்சத்தாஎன்ற செய்தித்தாளின் எடிட்டர் கிரிஷ் குபேர் பேசுகையில், “கட்சிகளுக்கு இடையிலான பிளவு இந்த தேர்தலில் பிரதிபலிக்கும். 2019 ஆம் ஆண்டின் வெற்றியை பாஜக / தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை நிகழ்த்துவது கடினம்’’ என்கிறார்.

மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் தாமதமானது, அரசின் மீதான நம்பிக்கையின்மையின் அடையாளம் என்று அவர் கருதுகிறார். கிரிஷ் குபேரின் கூற்றுப்படி, “உத்தவ் தாக்கரேவுடன் ஒப்பிடும்போது, மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு செல்வாக்கு சற்று குறைவாகவே உள்ளது. தாக்கரே ஆதரவாளர்கள் அனைவரும் ஷிண்டேவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று பாஜக நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை.

அஜித் பவாரின் செல்வாக்கு புனே மாவட்டத்தில் மட்டுமே பலனளிக்கும் என்பதை பாஜக உணர்ந்துள்ளது. மேலும் கட்சி பிரிவினைகள் சற்று அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றுவரை ஊழல்வாதிகள் என்று அக்கட்சியால் குற்றம்சாட்டப்பட்டவர்கள், இன்று அக்கட்சியுடன் நிற்பதை பாஜக தொண்டர்களும் கவனிக்கிறார்கள்.

பாஜக தொண்டர் ஒருவர் பேசுகையில், “இது சிந்திக்க வேண்டிய விஷயம். ஆனால் அரசியலில் இதுபோன்ற குழப்பங்கள் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் ஒரு தொகுதியின் சீட்டு கூட ஆட்சியை கவிழ்த்துவிடும்.’’ என்றார்

மூத்த பத்திரிகையாளரும், ‘செக்மேட்: ஹவ் பிஜேபி ஒன் அண்ட் லாஸ்ட் மகாராஷ்டிரா’-வின் ஆசிரியருமான சுதிர் சூர்யவன்ஷி கூறுகையில், பாஜகவை விட ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் மீது மக்கள் அதிக கோபத்தில் உள்ளனர். ஏனென்றால், சிவசேனா, என்சிபி ஆகிய கட்சிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவருக்கும் பங்குள்ளது.

இந்த சர்ச்சைகள் அனைத்தும் பாஜகவுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக சூர்யவன்ஷி குறிப்பிடுகிறார்.

அரசியல் ஆய்வாளர் சுஹாஸ் பலஷிகர், “என்சிபி மற்றும் சிவசேனா சார்பு வாக்காளர்களிடையே குழப்பமான மனநிலை நீடிக்கிறது. அவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். ஒருபுறம், பிரதமர் மோதியை பாஜக நம்பியுள்ளது., மறுபுறம் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே மீது மக்கள் அனுதாபம் கொண்டுள்ளனர்.

இந்த அனுதாபத்தின் ஆழம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ஏக்நாத் ஷிண்டேவுடன் கைக்கோர்த்த தானே முன்னாள் மேயர் நரேஷ் மஸ்கே, தேர்தலில் சரத் பவாருக்கோ அல்லது உத்தவ் தாக்கரேவுக்கோ எந்த அனுதாபமும் கிடைக்காது என்று கருதுகிறார்.

தானேயில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து பேசிய அவர், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாருடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்திருந்தார்? பாஜகவுடன். அவர் யாருடன் இருக்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்டார்? பாஜகவுடன். இருப்பினும், எண்ணிக்கை சற்று முன்னும் பின்னுமாக இருந்ததால், அவர் காங்கிரஸ் பக்கம் சென்றார். எனவே இந்த பிரச்னை அவருக்கும் பொருந்தும். ” என்றார்.

மேலும் பேசுய நரேஷ் மாஸ்கே, “ஆரம்பத்தில் உத்தவ் தாக்கரே மீது அனுதாபம் இருந்தது, ஆனால் பின்னர் அது குறையத் தொடங்கியது. முதல்வர் (ஏக்நாத் ஷிண்டே) 24 மணி நேரமும் உழைக்கிறார் என்பதை மக்கள் கவனிக்கத் தொடங்கினர், அவர் மக்களுக்காக சேவையாற்றுவதாக மக்கள் உணர்கிறார்கள். அவர் தரப்பில் பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டன, அதனால் மக்கள் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கிறார்கள்.’’ என்றார்.

மகாராஷ்டிராவில் பாஜக நிலை என்ன?

பாஜக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

கடுமையான வெயிலிலும், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, புனேவின் பரபரப்பான நான்டெட் நகரில் ஆதரவாளர்களுடன் வீடுவீடாக சென்று மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அவரது ஆதரவாளர் ஒருவர் சிவப்பு அங்கி மற்றும் தலைப்பாகை அணிந்திருந்தார். சிறிது நேரம் கழித்து அவர் மகிழ்ச்சியுடன் டிரம்பட் வாசிக்கத் தொடங்கினார். ஏனெனில் லோக்சபா தேர்தலுக்காக என்சிபியின் சரத்பவார் அணிக்கு தேர்தல் ஆணையம் ‘ட்ரம்பட்’யை தேர்தல் சின்னமாக வழங்கியுள்ளது.

ஷோபா கார்லேவை அங்கு ஒரு வீட்டில் சந்தித்தோம். “கட்சியை உடைப்பது தவறு. கட்சியை வைத்திருந்தவர்களிடம் இருந்து பறித்தது மிகவும் தவறு” என்கிறார்.

என்சிபியை உடைத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு எதிராக பாராமதி எம்பி சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். சுப்ரியா சுலே, “இது துரதிர்ஷ்டவசமானது அல்லவா? எல்லாம் சுமூகமாகத் தொடங்கியது ஆனால் இப்போது மாநிலம் பிளவுபட்டது. ஏனென்றால் உங்கள் சொந்த பலத்தில் இங்கு வெற்றிபெறுவது கடினம்” என்று கூறுகிறார்.

சிவசேனா மற்றும் என்சிபியை உடைத்ததற்கு வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவை சுப்ரியா சுலே குற்றம் சாட்டினார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, மகாராஷ்டிராவில் தனித்து ஆட்சி அமைக்க, சிவசேனா மற்றும் என்சிபியின் பலத்தை பாஜக குறைக்க வேண்டியது அவசியமானது. இதுவே கட்சி பிளவுக்கு காரணம். ஆனால் இப்போது விஷயம் என்னவென்றால், கட்சி பிளவை ஏற்படுத்தியதால், புதிய சவால்கள் உருவாகியுள்ளன.

இன்று மகாராஷ்டிராவில் சிவசேனாவின் இரு அணிகள் மற்றும் என்சிபி, பாஜக, காங்கிரஸ், பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, ஏஐஎம்ஐஎம் அடங்கிய இரு அணிகள் உள்ளன. சீட்டு கிடைக்காத காரணத்தினாலோ அல்லது அரசியல் லட்சியம் காரணமாகவோ பல தலைவர்கள் கட்சி மாறுகிறார்கள். மேலும் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள்.

சிவசேனாவின் (உத்தவ் தாக்கரே) அனில் தேசாய் கருத்துப்படி, “வாக்காளர்கள் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அப்படி இருக்காது.” கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால், பாஜக கட்சி மற்றும் குடும்பத்தை உடைக்கும் கட்சி என்ற பிம்பம், பலரது மனதில் உருவாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பிம்பம் பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது.

என்சிபி-இன் (ஷரத் பவார்) ஜிதேந்திர அவாத் பேசுகையில், “நாங்கள் தேர்தல் களத்தை விட்டு ஓட மாட்டோம், நாங்கள் அனைவரும் சரத் பவாருடன் நிற்கிறோம். இந்த தேர்தல் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான யுத்தம்.” என்கிறார்.

லோக்சத்தாவின் ஆசிரியர் கிரீஷ் குபேரின் கருத்துப்படி, கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து கட்சியில் இணைந்த தலைவர்களின் அரசியல் ஆசைகள் மற்றும் லட்சியங்களைக் கையாளும் சவாலை பாஜக எதிர்கொள்கிறது.

இது குறித்து அவர் பேசுகையில், “பாஜகவில் இணைந்தவர்கள் பாஜகவிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். நீங்கள் பாஜகவில் சேரும் வரை கட்சி உங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் என்ற கருத்து நிலவுகிறது, ஆனால் அதன் பிறகு கண்டுக் கொள்ளமாட்டார்கள்” என்கிறார்.

சிவசேனாவின் நரேஷ் மஸ்கே, இந்த நிலைக்கு உத்தவ் தாக்கரே முன்வைத்த ‘தோல்வி’ கொள்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸுடன் போராடி முன்னேறியது நமது சிவசேனா. சிவசேனாவுக்கு வந்தவர்கள் சாமானியர்கள். அப்போது, காங்கிரசின் பெரிய தலைவர்களுடன் அவர்கள் போட்டியிட்டனர். இதனால் பலரது வாழ்க்கை அழிக்கப்பட்டது.

பொய் வழக்குகள் போடப்பட்டன. ஆனால் இவை சிவசேனாவின் செயல் என்று மக்கள் கூறினர். இப்போது நீங்கள் காங்கிரஸுடன் கைக்கோர்த்து விட்டீர்கள். ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராகப் பேச உங்களுக்கு உரிமை இல்லை.’’ என்கிறார்.

பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா கூறுகையில், ”யாருடைய கட்சிகள் பிளவுபட்டதோ, அவர்களே அதற்கு பொறுப்பு. ’’ என்கிறார்.

மூத்த அரசியல் ஆய்வாளர் சுஹாஸ் பலஷிகர் கூறுகையில், “கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படும் இடங்களை வெல்வது பாஜகவுக்கு சவாலாக இருக்கும். மும்பையில் அக்கட்சி சிறப்பாக செயல்படுவது முக்கியம்.” என்றார்.

பாஜகவுக்கு ராஜ் தாக்கரே நிபந்தனையற்ற ஆதரவளிப்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வட இந்திய வாக்குகள் குறைவது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. சுதிர் சூர்யவன்ஷி கூறுகையில், “ராஜ் தாக்கரேவால் வட இந்தியர்கள் பிளவுபட்டுள்ளனர். பீகார் மக்கள் தேஜஸ்வி யாதவுடன் உள்ளனர், இதனால் மகாவிகாஸ் அகாடிக்கு ஆதரவளிக்கின்றனர். இது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.” என்கிறார்.

மகாராஷ்டிராவில் பாஜகவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவரான தேவேந்திர ஃபட்னாவிஸ், பிராமண சமூகத்தின் ஒப்பீட்டளவில் சிறிய சமூகத்தை சேர்ந்தவர் என்று கிரீஷ் குபேர் கருதுகிறார், இது பாஜக எதிர்கொள்ளும் மற்றொரு சவாலாகும்.

மாநிலத்திற்கு வரும் பெரும் முதலீடுகள் அரசியல் காரணங்களால் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்படுவதாக மகாராஷ்டிராவில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.

மகாராஷ்டிராவில் பாஜக நிலை என்ன?

மராத்தா இட ஒதுக்கீட்டில் உள்ள சவால்

மகாராஷ்டிராவில் சுமார் 28 சதவீத மராத்தா வாக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை அண்மையில் தீவிரமடைந்துள்ளது.

மராத்வாடாவில் உள்ள ஜல்னா மாவட்டத்தின் அந்தர்வாலி சாரதி கிராமத்தில் மனோஜ்-ஜரங்கே பாட்டீலின் போராட்டக் களத்திலிருந்து சற்று தொலைவில் வசிக்கும் மனிஷா சச்சின் தாரக்கிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனிஷா ஒரு மராத்தியர். வேலையில்லா திண்டாட்டத்தில் சிறு பண்ணைகளில் இருந்து வாழ்வாதாரத்தை சம்பாதிப்பது கடினம் என்று கூறுகிறார். இடஒதுக்கீடு தங்கள் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அவரது மாமனார் மதுகர் தாரக் கூறும்போது, ‘‘மராட்டியர்களின் நிலை முன்பு போல் இல்லை. முன்பு அவர்களுக்கு நிறைய விவசாய நிலங்கள் இருந்தன. இப்போது பணவீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. விவசாயம் கூட நல்ல வருமானம் தருவதில்லை. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலையடைந்துள்ளோம்,” என்றார்.

யாருக்கு வாக்களிப்பது என்று கேட்டால், மனோஜ் ஜாரங்கே என்ன சொன்னாலும் செய்வோம் என்கிறார். மராத்தா சமூகத்தின் பொருளாதாரச் சிக்கல்களால், இடஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு குறித்த இயக்கத்தைத் தொடங்கிய மெலிதாக இருக்கும் மனோஜ்-ஜாரங்கே பாட்டீல், போராட்டத்திற்காக உண்ணாவிரதம் இருந்ததாகவும், அவர்களின் இயக்கம் தீவிரமாக செயல்படுவதாகவும் கூறினார். தேவேந்திர ஃபட்னாவிஸ் மீதான அவரது கடுமையான விமர்சனம் அதிகம் விவாதிக்கப்பட்டது.

அகோலாவைச் சேர்ந்த ஆய்வாளர் சஞ்சீவ் உன்ஹலே கூறுகையில், “ஜரங்கே பாட்டீல் பாஜகவின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறார். ஜரங்கே பாட்டீலுக்கு நிறைய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.”

போராட்டத்தின் போது நடந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற விஷயங்களை விசாரிக்க ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது மற்றும் புனேவில் ஜாரங்கே பாட்டீலுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக செய்தி வந்தது.

மராத்தா சமூகத்திற்கு முதலில் 2014ல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது, பின்னர் 2018ல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் அது நீடிக்கவில்லை. ஏக்நாத் ஷிண்டே அரசு மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க முயற்சித்தது, ஆனால் ஜாரங்கே பாட்டீல் அதில் திருப்தி அடையவில்லை.

மகாராஷ்டிராவில் பாஜக நிலை என்ன?

50 சதவீத வரம்பை காரணம் காட்டி மீண்டும் இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்யும் என்று நினைக்கிறார்கள். மராத்தா சமூகத்தினரை ஓபிசி இடஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். இதனால் ஓபிசி சமூகத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.

தேர்தலில் மராத்தா இடஒதுக்கீட்டின் தாக்கம் குறித்து ஜரங்கே பாட்டீல் கூறுகையில், “மகாவிகாஸ் அகாடி மற்றும் மஹாயுதி (பாஜக தலைமையிலான கூட்டணி) இரு பிரிவினரும் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.’’ என்கிறார்.

பாட்டீலின் கூற்றுப்படி, “நாங்கள் யாரையும் தேர்தலில் நிறுத்தவில்லை. மராட்டிய சமூகம் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று மகாவிகாஸ் அகாதி மற்றும் மகாயுதி இருவரும் இப்போது கவலைப்படுகிறார்கள். மராத்தா இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இல்லாத வேட்பாளர் 100 சதவீதம் தோல்வி அடைவார். இப்போது மராட்டிய வாக்குகளில் பிளவு ஏற்படாது.

கிராமத்தைச் சேர்ந்த ஜராங்கே பாட்டீல் ஆதரவாளர் பாஜக மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார், தேர்தலுக்கு முன்பு மராத்தா சமூகம் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம் என்று கூறினார்.

பாஜக சார்பு மராட்டிய நபர் ஒருவர், ஜாரங்கே பாட்டீல் வாக்களிக்கும் வேட்பாளருக்கு மராத்தா சமூகம் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சுதிர் சூர்யவன்ஷி கூறும்போது, “பாஜக தற்காலிக நிவாரணம் அளித்ததாக மராத்தா சமூகம் கருதுகிறது. இந்த இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் சட்டச் சோதனையில் பிழைக்காது. மராட்டிய சமுதாயம் இதில் திருப்தி அடையவில்லை. மராத்தா சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு ஓபிசி குன்பி ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் ஓபிசியினரும் கலக்கமடைந்துள்ளனர். இது மோதலை அதிகரிக்கும் என நினைக்கின்றனர். இது பாஜகவுக்கு இரட்டை அடியாக அமையும்.

ஷிண்டே சேனா தலைவர் ஒருவர் கூறுகையில், “எங்கள் தலைவர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஓபிசிக்கு நாங்கள் இடஒதுக்கீடு வழங்கவில்லை. உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இடஒதுக்கீடு கொடுக்கிறார்களா? மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் என்சிபி தலைவர்கள் நேரடியாக பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தனர்.’’ என்கிறார்.

மகாராஷ்டிராவில் பாஜக நிலை என்ன?

பாஜகவின் பதிலடி

கிராமமோ, நகரமோ, வேட்பாளர் யாராக இருந்தாலும், பிரதமர் மோதியின் ஆட்சிக் காலத்தில் நடந்த வளர்ச்சியை முன்வைத்து பாஜக ஓட்டு கேட்கிறது.

பிரதமர் மோதியின் பெயர் அனைத்து அரசியல் சவால்களையும் சமாளிக்கும் என்று பாஜக தொண்டர்கள் நம்புகிறார்கள். விதர்பாவின் அமராவதி தொகுதியின் பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா, பிரதமர் மோதியின் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, சுகாதார சேவைகள் ஆகிய துறைகளில் அரசு செய்த பணிகள் குறித்த நீண்ட பட்டியலை வழங்கினார்.

75 ஆண்டுகள் பழமையான குறைகளை நிரப்ப கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்கிறார்.

அனைத்து அரசியல் சவால்களையும் எதிர்கொள்ள பாஜக, பிரதமர் மோதியை மட்டுமே நம்பியிருப்பதாக ஆய்வாளர் சுஹாஸ் பலஷிகர் கருதுகிறார்.

பிரதமர் மோதி மகாராஷ்டிராவில் எத்தனை பிரசார கூட்டங்களை நடத்துகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சுஹாஸ் பலாஷிகரின் கூற்றுப்படி, பாஜகவுக்கு ஆதரவாக ஏராளமான வாக்காளர்கள் உள்ளனர். பிரதமர் மோதி மீது வாக்காளர்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரை தாக்கி பேசி எதிர்க்கட்சிகள் தவறு செய்கின்றன. இது பாஜகவுக்கு மட்டுமே சாதகமாக அமையும். எதிர்க்கட்சிகள் உள்ளூர் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் என நினைக்கிறேன். ‘’ என்றார்.

விதர்பா விவசாயிகளின் தற்கொலை நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. உதாரணமாக அமராவதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜய் சிங் தாக்கூர். விலைவாசி உயர்வு, சரியான நேரத்தில் மழை பெய்யாதது, அரசின் உதவி கிடைக்காதது போன்ற காரணங்களால் அவர்கள் தவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் இந்தப் பகுதியில் தான் ஆரஞ்சு, மாம்பழம், பருத்தி, துவரை, பருப்பு போன்ற பயிர்கள் விளைகின்றன.

அவர் மேலும் கூறுகையில், “அரசியலில் இருப்பவர்களுக்கு விவசாயம் புரியாது. சமூகம் எந்தளவு விவசாயத்தை நம்பி உள்ளது என்பது தெரியவில்லை. நீர் ஆதாரங்கள் என்ன, நிலத்தின் அமைப்பு என்ன, இங்கு என்னென்ன பயிர்கள் விளையலாம், என்னென்ன தொழில்கள் தொடங்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியாது.’’ என்கிறார்.

லோக்சத்தாவின் ஆசிரியர் கிரிஷ் குபேரின் கூற்றுப்படி, பாஜகவிடம் அபரிமிதமான வளங்கள் உள்ளன. அவர்களின் அமைப்பு நல்ல நிலையில் உள்ளது. அதே சமயம், சூழ்நிலை சாதகமாக இல்லை என கட்சி கருதினால், வேறு உத்தியை பயன்படுத்தலாம்.’’ என்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, ஐந்து கட்டத் தேர்தலில் பாஜக தனது வியூகத்தை மாற்ற போதுமான அவகாசம் உள்ளதாக கருதுகிறார்.

இந்தியா கூட்டணி மற்றும் மகாவிகாஸ் அகாடி எதிர்கொள்ளும் சவால்கள்

ஆய்வாளர் சுஹாஸ் பலஷிகர் கருத்துப்படி, மகாவிகாஸ் அகாடியில் உள்ள கட்சிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், அவர்களின் ஆதரவாளர்களின் வாக்குகள் ஒன்றிணைய வேண்டும், மேலும் அவர்களின் அனைத்து வாக்குகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைக்கப்பட வேண்டும். ‘’ என்றார்.

பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி வேட்பாளர், மகா விகாஸ் அகாடியின் வாக்குகளை பெறலாம் என்று நம்பப்படுகிறது. 2019 லோக்சபா தேர்தலின் போது, வஞ்சித் பகுஜன் அகாடி 47 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றது. இதனால் காங்கிரஸ் பல இடங்களை இழந்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் கூறும்போது, “வஞ்சித் பகுஜன் அகாடி 10-15 வேட்பாளர்களை நிறுத்தினால், அவர்களுக்கு 2-2, 3-3, 4-4 சதவீத வாக்குகள் கிடைக்கும். வஞ்சித் பகுஜன் அகாடி நமக்கு பிரச்னை விளைவிக்க கூடும்.

சுஹாஸ் பலாஷிகரின் கூற்றுப்படி, மகாவிகாஸ் அகாடி வஞ்சித் பகுஜன் அகாடியை அவர்களுடன் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். நிச்சயமாக, உள்ளூர் நிபுணர்களின் கூற்றுப்படி, தொகுதி ஒதுக்கீட்டில் ஒருமித்த கருத்து இல்லாததால், வாஞ்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறது. வஞ்சித் பகுஜன் அகாடியின் வாக்காளர்கள் நம்பகமானவர்கள், அவர்கள் அவர்களுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். ’’

புனேவின் தண்டேகர் பூர் பகுதியில் ஏராளமான தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ரிக்ஷாக்காரரான மனோஜ் நாகு பயார், வஞ்சித் பகுஜன் அகாடிக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறினார்.

“ஏனென்றால் பிரகாஷ் அம்பேத்கர் மிகவும் நல்ல மனிதர் மற்றும் அவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பேரன். அவர்கள் யாருக்கும் தலைவணங்குவதில்லை.’’ என்கிறார்

அகோலா மாவட்டத்தில் உள்ள மஜ்லாபூர் கிராமத்தில் பிரசாரத்திற்காக வந்த பிரகாஷ் அம்பேத்கர், யாருடைய வாக்குகளையும் தங்கள் கட்சி எடுத்துக் கொள்ளாது என்று கூறினார். நிச்சயமாக, வாஞ்சித் பகுஜன் அகாடியின் அலுவலகப் பொறுப்பாளர், வாக்குகளைப் பிரிப்பது மகாவிகாஸ் அகாடிக்கு தீங்கு விளைவிக்கும் என்று பெயர் தெரியாத வேட்பாளர் ஒப்புக்கொண்டார்.

மகாராஷ்டிராவில் பாஜக நிலை என்ன?

பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், “காங்கிரஸ்காரர்களுக்கு சொந்த கட்சியினரையே தெரியாது. சாமானியர்கள் பாஜகவுடன் போராட விரும்புகிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். மகாராஷ்டிராவில் பாஜகவை முழுமையாக தோற்கடிக்கத்தான் மக்களாகிய நாங்கள் போராடுகிறோம்.” என்றார்.

டாக்டர் விஸ்வம்பர் சவுத்ரி நிர்பய் பானோ இயக்கத்தை நடத்தி வருகிறார்.

மாநிலத்தில் அரசின் கொள்கைகள், மத வெறுப்பு, வரலாறு போன்றவற்றைப் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார்) ஆகியோர் தங்கள் தேர்தல் செய்தியை சாமானிய மக்களிடம் தெரிவிப்பது சவாலாக உள்ளது என்று அவர் கூறுகிறார். அதே நேரத்தில், “காங்கிரஸின் முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுகின்றன, சில முடிவுகளை எடுக்க அவர்கள் மாநிலத்தில் உள்ள தலைமைக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். தற்போது அது நடப்பதாகத் தெரியவில்லை. அனுமதிக்கு அனைத்து முடிவுகளும் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து அனுமதி அல்லது முடிவைப் பெறுவதற்கு நேரம் எடுக்கும்.’’

மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதன் தாக்கம் உறுதியாகி விடும்.