பாலியல் அத்துமீறல்: மகளுக்கு தந்தை செய்த கொடுமைகளை நேரலையில் பகிர்ந்த நெறியாளர் – ஏன்?

வான் பெட்ரோ

பட மூலாதாரம், ELTRESTV

படக்குறிப்பு, நேரலை நிகழ்ச்சியில் வான் பெட்ரோ

அர்ஜென்டினாவில் பத்திரிகையாளரான வான் பெட்ரோ கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், பரபரப்பான செய்தி ஒன்றை கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

வழக்கமாக அரசியல், பொருளாதாரம் என நாட்டின் முக்கிய நிகழ்வுகளை வாசிக்கும் வான், இந்த முறை தனது வாழ்வில் நடந்த மோசமான நிகழ்வை கூறி செய்தி வாசிப்பை தொடங்கினார்.

அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 3 செய்தி நிகழ்ச்சியில் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் வான் பெட்ரோ.

இதனைத் தொடர்ந்து இந்த விஷயம் வைரலாகப் பரவி தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளும் இவரிடம் நேர்காணல் எடுக்க வரிசை கட்டி நிற்கின்றன.

சேனல் 3 இன் மற்றொரு பெயர் எல்டர்ஸ் டிவி. தொகுப்பாளர் வான் பெட்ரோ இந்த செய்தி நிறுவனத்தின் முக்கிய முகங்களில் ஒருவர். பிற்பகலில் ஒளிபரப்பாகும் ‘டி12 ஏ 14’ என்ற செய்தித் தொகுப்பில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் இவர், அதே நிகழ்ச்சியில் தனது கதையை 27 நிமிடங்கள் பார்வையாளர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அதில் எப்படி தன்னுடைய சிறு வயதில் தனது மோசமான தந்தையால் கஷ்டங்களை அனுபவித்தார் என்பதை விளக்கியுள்ளார்.

அவர் கூறியது என்ன?

“உங்கள் அனைவரையும் எனக்கு தெரியும். நான் 18 வருடங்களாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். இதுவரை எத்தனையோ செய்திகளை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன். ஆனால், முதல் முறையாக எனது சொந்த வாழ்க்கை கதையை கூற உள்ளேன்” என்று அவர் தொடங்கினார்.

“என்னைப் போன்ற கஷ்டங்களை எதிர்கொள்பவர்களுக்கும், கடினமான சூழல்களை அனுபவித்தவர்களுக்கும் நான் உதவ விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் தந்தையை விட்டு விலக முடிவு செய்தேன். மெல்லமெல்ல என் குடும்பத்தை விட்டும் விலகிவிட்டேன். எங்கள் வீட்டில் நடந்த சில விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அது என்னை மிகவும் காயப்படுத்தியது.”

“அப்போதிருந்து எங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க விரும்பினேன். நான் பிரச்னை என்ன என்பதை பார்க்க தொடங்கினேன். உண்மைகளை வெளியே கொண்டு வர முயற்சி செய்தேன். ஒருநாள் எனது கேள்விகளுக்கு விடை கிடைத்தது. உண்மையும் வெளியே வந்தது.”

“என் தந்தை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எங்களிடம் மோசமாக நடந்து கொண்டார். என்னையும் சேர்த்து எங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் பயமுறுத்தினார். நான் அவர் மீது குடும்ப வன்முறை வழக்கை பதிவு செய்தேன்” என்று கூறினார் வான்.

வான் பெட்ரோ

பட மூலாதாரம், juanpedroaleart / Instagram

படக்குறிப்பு, வான் பெட்ரோ பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு

“எங்கள் குடும்பத்தில் உள்ள மூன்று குழந்தைகளில் நான்தான் மூத்தவன். எனது தந்தைக்கு எதிராக நானும், எனது தங்கையும் புகார் செய்தோம். எனது தங்கை நிம்மதியாக வாழ வேண்டும் என்பது மட்டுமே எனது ஆசை. எப்போதெல்லாம் அவர் தந்தையை பார்க்கிறாரோ அப்போதெல்லாம் அவர் பயத்தில் நடுங்குவார். ஒரு துளி ரத்தமும் இன்றி அவரது முகம் வெளிறி விடும்.” என்று தெரிவித்தார் அவர்.

தனது சகோதரியை, அதாவது பெற்ற மகளையே தங்களது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உக்கிரமாக நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

“எனது சகோதரிக்கு மூன்று வயது இருந்த போது என் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். எனது தந்தைக்கு எச்.ஐ.வி இருந்தது. இருப்பினும் தனது சொந்த மகளையே அவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.”

“இதனால் எனது சகோதரிக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை. ஆனால், அவர் பயம் , பதற்றம் , தூக்கமின்மை, முடி உதிர்தல், எடை இழப்பு என பல்வேறு பாதிப்புகளால் வலியை அனுபவித்ததை நான் என் கண்களால் பார்த்தேன்.”

என் தந்தையின் நடத்தையால் விரக்தியடைந்த சகோதரி, தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக என்னிடம் பலமுறை கூறினார்.

தந்தை மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி சகோதரியிடம் வற்புறுத்தினேன். வழக்கறிஞர் கட்டணத்தை நான் பார்த்துக் கொண்டேன்.

இறுதியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்தோம். உளவியல் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என் தந்தையின் தவறுகளுக்கு நானே சாட்சி. காரணம், எங்களது சிறு வயதில் என் கண் முன்னேயே அவர் எனது சகோதரியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். ஆனால் அதெல்லாம் வெறும் விளையாட்டுக்காக என்று என்னை நம்ப வைத்தார்.

“நானும், எனது சகோதரரும் எங்களது சகோதரியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்புமளவுக்கு எங்களை ஏமாற்றி நம்பவைத்தார் எங்களது தந்தை” என்று அவர் கூறினார்.

வான் பெட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வான் பெட்ரோவின் சகோதரியை 3 வயதில் இருந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் அவர்களது தந்தை.

‘என்னுடைய அம்மாவும் எங்கள் தந்தையால் பாதிக்கப்பட்டவர் தான். நாங்கள் பதிவு செய்த குற்றவழக்கு குறித்து மூன்று வாரங்களுக்கு முன்புதான் எங்கள் தந்தைக்கு தெரிய வந்தது.

தான் செய்த குற்றங்கள் மற்றும் தவறுகளை எதிர்கொள்ள அவர் விரும்பவில்லை. அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எச்.ஐ.வி நோயுடன் தனது மூன்று வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்யத் தொடங்கிய நாளில் இருந்தே அவர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

முகநூல் , ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அவர் கடைசியாக பகிர்ந்துள்ள பதிவுகளில் கூட எனது சகோதரியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றே குறிப்பிட்டுள்ளார்.

தற்போது என் சகோதரியிடம் நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சோஃபி, நான் உனக்கு சொல்ல விரும்புவது உனது வாழ்க்கையின் அந்த திகிலூட்டும் கட்டம் முடிந்துவிட்டது. அந்த அரக்கன் உன்னை விட்டு ஒட்டுமொத்தமாக விலகிவிட்டான். இனி உன்னை யாரும் காயப்படுத்த மாட்டார்கள்.

இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம், உனக்காக ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க வேண்டும். நீ இதுவரை உன் வாழ்க்கையில் நிறையவே போராட்டங்களை சந்தித்திருக்கிறாய். தற்போது பறந்து சென்று சுதந்திரமாக, நிம்மதியாக மகிழ்ச்சியுடன் ஒரு வாழ்க்கையை தொடங்கு” என்று அவர் கூறினார்.

தனது சகோதரி எதிர்கொண்ட வேறு சில துன்புறுத்தல்கள் குறித்தும் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

வான் பெட்ரோ

பட மூலாதாரம், elTresTV / X

படக்குறிப்பு, தொலைக்காட்சி நேரலையில் தானும், தனது சகோதரர்களும் தங்களது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவலை கூறிய வான் பெட்ரோ.

“வன்முறையான சூழல், பாலியல் துன்புறுத்தல் செய்யும் தந்தை, பாதிக்கப்பட்ட மற்றும் குழப்பமான தாய், இயல்பாக தவறுகள் நிகழும் வீடு என்று வாழ்க்கை இருந்தபோது எனது உறவினர் ஒருவரை நான் ஆழமாக நம்பினேன். பல சமயங்களில் அவர் எனக்கு அப்பா போல அன்பாக நடந்துக்கொண்டார். ஆனால், அவரும் எங்கள் வீட்டில் உள்ள சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு என்னையும், என் சகோதரனையும் பாலியல் துன்புறுத்தல் செய்தார். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது அவர் இந்த கொடூரத்தை தொடங்கினார்.”

எனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும் போது, வீட்டில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன். எனது பெற்றோரிடம் இதுகுறித்து எச்சரித்தும் கூட எந்த பலனும் இல்லை.

அந்த உறவினர் என்னையும் என் சகோதரனையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.

இறுதியாக 2022 இல் இந்த கொடூரத்தை நான் வெளிக்கொண்டு வந்தேன். இதுபோன்ற பிரச்னைகளை வெளியில் சொல்வது கடினம். ஆனாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் அதை செய்தேன்.

பல மாதங்கள் நான் மன உளைச்சலில் இருந்தேன். இதையெல்லாம் மனதிற்குள் வைத்துக்கொண்டு இங்கு வந்து செய்தி வாசிப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

வான் பெட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வான் பெட்ரோவும் உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

நான் காரில் அழுது கொண்டே அலுவலகத்திற்கு வருவேன். தொண்டை வலியை மறைத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துவேன். யாருக்கும் தெரியாமல் ஒரு அறையில் பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பேன். யாருக்கும் இது தெரிவதை நான் விரும்பவில்லை.

வாழ்க்கை வெறுப்பானதாக இருந்தது. என்னால் சிரிக்க முடியவில்லை. இது எனது தனிப்பட்ட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. ஆனால், இன்று முன்பை விட மனதளவில் நான் வலுவாக இருக்கிறேன்.

எத்தனை சிகிச்சை தேவைப்பட்டாலும், நான் தொடர்ந்து அதை எடுத்துக்கொள்வேன்.

“எனது சிறிய நண்பர்கள் குழுவும், அவர்கள் என்னிடம் காட்டும் அன்பும் தான் என்னை இன்னும் இயக்குகிறது,” என்று கூறினார் அவர்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஆண்கள் குறித்து அவர் பேசினார்.

“இந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். உங்களில் பெரும்பாலானோர் இதை உங்கள் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உளவியல் நிபுணர்களிடம் கூட சொல்வதில்லை.

ஆனால், அதை பற்றி வெளியே பேசுவதுதான் இதிலிருந்து வெளியேறும் ஒரே வழி.

நீங்கள் அமைதியாக இருந்தால், அது நம்மை துன்புறுத்துபவர்களுக்கு சாதகமாக அமையும். உங்களுக்கு தைரியம் இல்லையென்றால், இது போன்ற பிரச்னைகளில் வெளியே வந்து தைரியமாக பேசும் பெண்களிடம் இருந்து உந்துசக்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.

“மற்றவரிடம் உரையாடுங்கள், உதவி கேளுங்கள், ஒருவருக்கொருவர் துணையாக இருங்கள். அது மட்டுமே இதிலிருந்து வெளியேற ஒரே வழி” என்று அவர் கூறுகிறார்.