← முகப்பு செய்திகள்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று அதனை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 36 பார்வைகள்
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று அதனை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்
மின் கட்டண அதிகரிப்புச் சுமையை சகல மக்களும் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று அதனை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, அதன் பாரிய சுமையை சாதாரண மக்கள் மீதே சுமத்த முற்படுகின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார விசனம் வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மின்சாரக் கட்டணத்தை எப்படியாவது அதிகரிப்பதே இன்று அதிகாரிகளின் ஒரே நோக்கமாக உள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன ஒன்றிணைந்து இதற்கான ஒரு ஒத்திகையையே தற்போது முன்னெடுத்து வருகின்றன. மின்சார சபையானது பல துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஒவ்வொரு பிரிவுகளும் தமது தனிப்பட்ட செலவுகளை ஈடுசெய்ய முற்படும் போது ஒட்டுமொத்த மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது.

அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகார சபைகளோ என்ன கூறினாலும், இறுதியில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதுதான் இவர்களின் உண்மையான இலக்காகும். நாட்டின் தற்போதைய சூழலில் மின்சாரக் கட்டணக் குறைப்பு என்பது மக்களுக்கு வெறும் கானல் நீராகவே உள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பானது வசதி படைத்த மற்றும் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் மேல்தட்டு மக்களை மாத்திரமே பாதிக்கும் என்றும், ஏழை எளிய மக்களைப் பாதிக்காது என்றும் ஜனாதிபதி ஒரு கருத்தைக் கூறுகின்றார். இது முற்றிலும் யதார்த்தத்துக்கு புறம்பான பேச்சாகும்.

மின்சாரப் பயன்பாட்டில் ஒரு அடிப்படை அறவீடு உள்ளது. அந்த அடிப்படை கட்டணத்தில் இருந்து எவரும் தப்பிவிட முடியாது.

கட்டணங்கள் அதிகரிக்கப்படும் போது அதன் தாக்கம் மறைமுகமாக சகல பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். எனவே, குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது மக்களைத் திசைதிருப்பும் செயலாகும்.

மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் தரமின்மை காரணமாக, தற்போது அதிக செலவு மிக்க எண்ணெயைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யவே கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

தேர்தல் காலத்தில் மின்சாரக் கட்டணத்தை மூன்று மடங்காகக் குறைப்போம் என்று பாரிய வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்துக்க வந்தவர்களுக்கு இன்று ஒரு விசித்திரமான நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அவர்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டியேற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் மக்கள் தமது மின்சாரக் கட்டணப் பட்டியலைப் பார்க்கும் போதுதான் அரசாங்கத்தின் வாக்குறுதிகளின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்வார்கள் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net