பாதாள உலகக்குழு தலைவன் என அறியப்படும் சமரத்ன சஞ்சீவ என்னும் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியானது ‘கம்பஹா ஒஸ்மன்’ என்பவரால் வழங்கப்பட்டது என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வெள்ளிக்கிழமை (15) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விடயங்களை முன்வைத்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் 44 ஆவது சந்தேகநபராக ‘கம்பஹா ஒஸ்மன்’ என்பவரைப் பெயரிடுவதாக நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தேகநபரான கம்பஹா ஒஸ்மன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு 72 மணித்தியால தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அந்த காலப்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 90 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, இந்தக் கொலைச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபரான துப்பாக்கிதாரிக்கு, கொலையைச் செய்வதற்குத் தேவையான துப்பாக்கியை கம்பஹா ஒஸ்மன் வேறொரு இடத்திற்குச் சென்று கையளித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மன்றுக்குத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.