இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலான தேடுதலின் பின்னர் கடந்த சனிக்கிழமை (24) மத்துகம, வெலிகந்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை (25) லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி தலவாக்கலை தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலை பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடனும் இவர் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேகநபரின் தொலைபேசி தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கிடைத்த இரகசிய தகவல்களின் பேரில் அவரை கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் லிந்துலை மற்றும் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.