இந்நாட்டு சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை வினைத்திறனான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுக்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வீதம் ‘மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக’ நியமிக்கப்படவுள்ளனர்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் முன்வைக்கப்பட்ட இந்த விசேட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படும் சுகாதார நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதும், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் வினைத்திறனாகப் பயன்படுத்துவதும் இந்த புதிய நியமனங்களின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, பிரதேச மட்டத்திலான சுகாதாரப் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தேசிய திட்டமிடலில் உள்வாங்குவதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்குப் பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, மக்கள் பங்களிப்புடன் மாவட்டத்தின் சுகாதாரத் தேவைகளை இனங்கண்டு அவற்றை வகைப்படுத்துதல், அந்தத் தேவைகளை தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் இணைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மத்திய – மாகாண சுகாதார நிறுவனங்களுக்கு இடையே வளங்களைச் சரியாகப் பகிர்ந்தளித்தல் போன்றவை இவர்களில் பிரதான பணிகளாக அமையும்.
மேலும், அமைச்சின் கொள்கைகளுக்கு அமைவாக பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைத்தல், முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய திட்டங்களைப் பரிந்துரைத்தல் மற்றும் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களைக் கண்காணித்து அவற்றை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற பொறுப்புகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பு தற்போது மத்திய அமைச்சின் கீழான வைத்தியசாலைகள் மற்றும் மாகாண சபைகளின் கீழான வைத்தியசாலைகள் என இரு வேறு பிரிவுகளாகச் செயற்படுகின்றன. நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகள் என இவை வகைப்படுத்தப்பட்டாலும், நிர்வாகக் கட்டமைப்புக்கள் வெவ்வேறாக இருப்பதனால் ஒருங்கிணைப்பில் பலவீனங்கள் காணப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் வளப் பயன்பாட்டில் வினைத்திறன் குறைவதோடு, பிரதேச தேவைகள் தேசிய ரீதியாகப் பிரதிபலிக்கப்படுவதில்லை என்றும் அவர் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய பொறிமுறையூடாக சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்தவும், மக்களுக்கு மிகவும் இலகுவான மற்றும் நம்பகமான சுகாதார சேவையை வழங்கவும் எதிர்பார்ப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.