அநுராதபுரம் மாவட்டத்தில் யானை மனித மோதல் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் தினணைக்களத்தின் அநுராதபுரம் வலய உதவிப் பணிப்பாளர் சந்ரத்ன தெரிவித்தார்.
வனஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் வலய பணிப்பாளர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக மாவட்டத்தில் 20 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அநுராதபுர மாவட்டத்தின் மஹாவிலச்சிய, தலாவை, மிஹிந்தலை, தம்புத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே அதிகளவான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பொதுவாக மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2025 ஆண்டில் யானை மனித மோதலினால் அநுராதபுரம் மாவட்டத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு மனித செயற்பாடுகளினால் 92 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் வலய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.