← முகப்பு செய்திகள்

‘அச்சுறுத்தியவரை பல ஆண்டு நினைவில் வைத்திருக்கும்’ – அபார அறிவாற்றலுடன் செயல்படும் காகங்கள்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 2 பார்வைகள்
‘அச்சுறுத்தியவரை பல ஆண்டு நினைவில் வைத்திருக்கும்’ – அபார அறிவாற்றலுடன் செயல்படும் காகங்கள்

பட மூலாதாரம், Getty Images

காகங்கள் மனிதர்களின் கற்பனையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளன. நாட்டுப்புறக் கதைகளில் அவை தந்திரக்காரர்களாக, தூதர்களாக, திருடர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கலாசாரங்களில் இந்தப் பளபளப்பான கருநிறப் பறவை பெரும்பாலும் அசாதாரணமான புத்திசாலித்தனத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

காகம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளில், அவற்றால் தமது பயன்பாட்டிற்கு உரிய கருவிகளை உருவாக்க, சிக்கலான புதிர்களைத் தீர்க்க, முகங்களை நினைவில் கொள்ள, தனது தேவைக்கு ஏற்ப சுற்றியிருக்கும் சூழலை மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

காகங்கள் தமது கூர்மையான அறிவாற்றலை எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன? உண்மையில் இந்தப் பறவையினம் எப்படி இவ்வளவு புத்திசாலியாக மாறியது?

வால்நட் அளவு மூளைகொண்ட காகங்களின் சாதுர்யம்

காகங்கள் வெளிப்படுத்தும் நுண்ணறிவின் மிகவும் வியக்கத்தக்க அம்சங்களில் ஒன்று, அது மனித மூளையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு மூளை வடிவத்தில் இருந்து அந்த நுண்ணறிவு உருவாகிறது என்பதுதான்.

மனித மூளை, பெரிய, பல அடுக்குகளைக் கொண்ட பெருமூளைப் புறணிகளைக் கொண்டது. இது நீண்ட காலமாகச் சிறுகச் சிறுக மேம்பட்டு வந்த அறிவாற்றலின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.

இத்தகைய அமைப்பு பறவைகளின் மூளையில் முழுமையாக இல்லை. இதனால் பல்லாண்டுக் காலமாக, பறவைகள் பாலூட்டி உயிரினங்களை விடவும் குறைந்த அறிவாற்றலையே கொண்டவை என்று ஆய்வாளர்கள் கருதி வந்தனர்.

அந்தக் கருதுகோளைக் கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த அறிவியல் ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகள் கேள்விக்குட்படுத்தியுள்ளன.. பறவைகளின் மூளையில் நுட்பமான தகவல் செயலாக்கத்திற்கு உதவக்கூடிய அடர்த்தியாக அமைந்த நரம்பணுக்கள் இருப்பதை ஆய்வுகள் காட்டியுள்ளன.

காகம் அபாரமான அறிவாற்றலை கொண்டிருப்பது எப்படி? அறிவியல் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

முடிவெடுத்தல், சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் போன்றவற்றுக்குக் காரணமான காகத்தின் மூளையின் சில பகுதிகள், பிரைமேட் உயிரினங்களுக்கு நிகரான செயல்திறனைக் கொண்டிருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தின.

ஒரு காகத்தின் மூளையில், சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், முடிவெடுத்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மூளைப் பகுதியான நிடோபல்லியம் காடோலேட்டரேல் (NCL), பிரைமேட் உயிரினங்களின் முன்மூளைப் புறணியின் செயல்பாடுகளை ஒத்த செயல்பாடுகளை மேற்கொள்வதாகக் கடந்த 2016ஆம் ஆண்டு பி.என்.ஏ.எஸ் ஆய்விதழில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காகங்களின் நுண்ணறிவுக்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக, தென் பசிபிக் தீவான நியூ கலிடோனியாவை பூர்வீகமாகக் கொண்ட ஓர் இனமான நியூ கலிடோனியன் காகத்தைக் குறிப்பிடலாம்.

இந்தக் காகங்கள் வெறுமனே தமக்குக் கிடைக்கும் கருவிகளை பயன்படுத்துவது மட்டுமின்றி, தமக்கான கருவிகளை அவையே உருவாக்கவும் செய்கின்றன.

நியூ கலிடோனியன் காகங்கள் சிறு கிளைகளை வைத்து கொக்கிகளை உருவாக்குவதையும், இலைகளை தனித்துவமான துழாவும் கருவிகளாக வடிவமைப்பதையும், குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ற வகையிலான பொருட்களைத் தேர்வு செய்வதையும் விஞ்ஞானிகள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

அலெக்ஸ் கசெல்னிக், கிறிஸ்டியன் ரூட்ஸ், ஜாக்கி சாப்பல் ஆகிய ஆய்வாளர்கள் பல ஆண்டுகள் செலவழித்து இந்தப் பழக்க வழக்கங்களின் நுட்பங்களை ஆவணப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, நியூ கலிடோனியன் காகங்கள் கருவிகளை வியக்கத்தக்க துல்லியத்துடன் பயன்படுத்த உதவும் அசாதாரணமான உடல் தகவமைப்பைக் கொண்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அந்த ஆய்வின் முடிவில், "அவற்றின் அலகுகள் பிற காக இனங்களைவிட நேராகவும், பார்வை அமைப்பு வழக்கத்திற்கு மாறாகப் பெரிய இருகண் பார்வைப் பகுதியுடன் பொருட்களைக் கையாளும்போது கருவிகளின் முனைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த உடற்கூறியல் அம்சங்கள், மேம்பட்ட கருவிப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் பரிணமித்து இருக்கலாம்" என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

காகம் அபாரமான அறிவாற்றலை கொண்டிருப்பது எப்படி? அறிவியல் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

மனித முகங்களை அடையாளம் காணும் காகங்கள்

நியூ கலிடோனியன் காகம் போன்ற அயல்நாட்டு இனங்கள் போலவே, இந்தியாவில் காணப்படும், நமக்கு நன்கு பரிச்சயமான இந்திய காகங்களும் வியக்க வைக்கும் அறிவாற்றல் திறன்களைக் கொண்டிருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில், மேம்பட்ட சிக்கல் தீர்க்கும் திறன்கள், சமூக நுண்ணறிவு, சுய விழிப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நடத்தைகளை இந்திய காகங்களில் ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, லக்னௌ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 2020இல் நடத்திய ஓர் ஆய்வில், சுய-அடையாளத்தை அளவிட பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பரிசோதனையான 'கண்ணாடி-அடையாளச் சோதனை'யைப் பயன்படுத்தி இந்திய காகங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்தனர்.

அந்த ஆய்வில், அவற்றால் கண்ணாடியில் மட்டுமே பார்க்கக்கூடிய அவற்றின் உடல் பாகங்களில் பூசப்பட்ட வண்ண அடையாளங்களை அவை கவனித்து அகற்ற முயல்வது பதிவு செய்யப்பட்டது.

குரங்குகள், டால்பின்கள், யானைகள் என சில குறிப்பிட்ட உயிரினக் குழுக்களில் மட்டுமே நிரூபிக்கப்பட்ட சுய-அடையாளம் குறித்த இந்த அறிவாற்றல் பண்பு காகங்களுக்கும் இருப்பதை இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.

இதேபோல, கடந்த 2023இல் ஏவியன் பயாலஜி ரிசர்ச் என்ற ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு, கேரளாவை சேர்ந்த ஆய்வாளர்கள் காகங்கள் விரும்பிய விளைவை அடைவதற்காகத் தன்னைச் சுற்றியிருக்கும் சூழலை மாற்றியமைக்கும் திறனைக் கொண்டிருப்பதை ஆவணப்படுத்தியது.

அந்த ஆய்வின்படி, காகங்கள் எரியும் எண்ணெய் விளக்குகளில் சுடரை அணைத்துவிட்டு, பருத்தித் திரிகளை அகற்றி உட்கொண்டன. ஆய்வுக் குழுவின் கூற்றுப்படி, "இந்த நடத்தை ஆபத்தை அடையாளம் காணும் திறன், பொருட்களைக் கவனமாகக் கையாளுதல், தான் விரும்பும் பலன்களை அடைவதற்காகத் தன்னைச் சுற்றியிருக்கும் சூழலை மாற்றியமைக்க வழிவகுக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றைக் குறிப்பதாக இருந்தது."

ஆய்வாளர்கள் இந்தக் கண்டுபிடிப்புகளை, காகங்களின் புதுமையான சிக்கல் தீர்க்கும் திறனுக்கான ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் என்று விவரித்தனர்.

ரிக்‌ஷா தொழிலாளி செல்வராஜ் மற்றும் அவரிடம் நெருங்கிப் பழகும் அவரால் மீட்கப்பட்ட காகம்

இதே போன்றதொரு உதாரணத்தை பிபிசி தமிழ் கடந்த 2019ஆம் ஆண்டில் பதிவு செய்தது. புதுச்சேரியில் காயமுற்றுக் கிடந்த காகம் ஒன்றை ரிக்‌ஷா தொழிலாளி ஒருவர் மீட்டு, சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்தார்.

அதன் பிறகு, அவரைச் சரியாக இனங்கண்டு, அவரது ரிக்‌ஷா வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலேயே தனது கூட்டை இடம் மாற்றிக் கொண்ட அந்தக் காகம், அவருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, மிகுந்த நேசத்துடன் வாழத் தொடங்கியது.

காகங்களின் இத்தகைய தனித்துவமான அறிவாற்றலில் சமூக வாழ்வு முறை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் பறவை ஆராய்ச்சியாளர் முனைவர் கிருபாநந்தினி. கடந்த 2025ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியான ஆய்வு ஒன்றில், தனித்து வாழும் பறவைகளைவிட, குழுக்களாக வாழும் காகங்கள் வெளிப்புற அழுத்தத்திற்கு மத்தியில் சிறப்பாகச் செயலாற்றுவது கண்டறியப்பட்டது.

இது, "சிக்கலான சமூக உறவுகளின் தேவைகளுக்கு உரிய வகையில் எதிர்செயலாற்றும் விதமாகவே காகங்களின் நுண்ணறிவுத் திறன் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம்" என்ற கருத்தை ஆதரிப்பதாக முனைவர் கிருபாநந்தினி குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, "மனித வாழ்விடத்திற்கு மத்தியில் பல்வேறு இடையூறுகளைக் கடந்து தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காகங்கள் பல்லாண்டு காலமாகவே வாழ்ந்து வருகின்றன. இது, அவைதம் வாழ்விடச் சூழலில் இருக்கும் விஷயங்களை தங்களுக்குச் சாதகமான அம்சங்களாக மாற்றிக்கொள்ள ஏதுவான வகையில் தம்மைத் தகவமைத்துக் கொள்ள வித்திட்டிருக்கலாம்." என்று கிருபாநந்தினி விளக்கினார்.

அதேவேளையில், காகங்களால் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் காண முடியும், அவற்றைப் பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்க முடியும், கடந்த காலத் தொடர்புகளின் அடிப்படையில் அவற்றால் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள முடியும் என்பனவற்றை பரந்த சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உதாரணமாக, வாஷிங்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு நீண்ட ஆய்வு, காகங்கள் தங்களை முன்பு பிடித்த அல்லது அச்சுறுத்திய நபர்களின் முகங்களை நினைவில் வைத்திருந்ததைக் காட்டியது. பல ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, அவை அந்த நபர்களிடம் வித்தியாசமாக, எச்சரிக்கையுடன் நடந்து கொண்டதையும், இத்தகைய அபாயகரமான மனிதர்கள் பற்றிய தகவல்கள் காகங்களின் சமூகக் கூட்டங்களில் பரவியது போலத் தோன்றியதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இத்தகைய கண்டுபிடிப்புகள், அவற்றின் நுட்பமான சமூகக் கற்றலையும் நீண்டகால நினைவாற்றலையும் சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net