அகமதாபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை 100 ரன்களுக்கு மேல் தொடக்கக் கூட்டணி அமைத்த ஜோடி என்ற பெருமையை தட்டிச் சென்றனர்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், களம் இறங்கிய குஜராத் கேப்டன் சுப்மன் கில் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் இருவரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தனர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி, 125 ரன்களைச் சேர்த்தது. இது இந்த ஜோடி ஐபிஎல் தொடரில் அமைக்கும் 7-வது 'செஞ்சுரி' பார்ட்னர்ஷிப் ஆகும்.

இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா ஜோடி மற்றும் ஷிகர் தவான் – டேவிட் வார்னர் ஜோடி தலா 6 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததே சாதனையாக இருந்தது. 7-வது முறையாக இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஜோடி அந்தச் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்தது. கடந்த 2024 முதல் 2026 வரையிலான 3 சீசன்களிலேயே இந்த ஜோடி 1938 ரன்களைச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் வெறும் 23 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். மறுபுறம் சாய் சுதர்சன் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அணியின் ஸ்கோர் 125 ரன்களை எட்டியபோது, ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீச்சில் சுப்மன் கில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த பந்தை சிவம் துபே சிறப்பான கேட்ச் மூலம் பிடித்தார்.
IPL 2026: சிஎஸ்கே பந்துவீச்சை சிதறடித்து.. மெகா ஸ்கோர் எடுத்த குஜராத்.. டாப் 3 வீரர்கள் அரைசதம்
சாய் சுதர்சன் 53 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். ஜோஸ் பட்லர் 27 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது.