Category - யாழ்ப்பாணம்

1
திருமலையில் ஒருநாளில் மூவரை காணவில்லை – பீதியடைய வேண்டாம் என பிரதி அமைச்சர் தெரிவிப்பு
2
சுதந்திர தினம் கரிநாள் – மக்களை திரட்டும் நடவடிக்கையில் யாழ்.பல்கலை மாணவர்கள்
3
தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்
4
யாழ். கோட்டைக்குள் உள்ள அற்புத மாதா ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு – நேரில் சென்ற சுமந்திரன்
5
சீவீகே வெளியே ; மறவன்புலோ !
6
விமானம் கவனம்!
7
மீண்டும் களத்தில் மாணவர் ஒன்றியம்!
8
யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
9
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
10
எழுவைதீவில் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருட்டு

திருமலையில் ஒருநாளில் மூவரை காணவில்லை – பீதியடைய வேண்டாம் என பிரதி அமைச்சர் தெரிவிப்பு


திருகோணமலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மூவர் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.​மாவட்ட பொது வைத்தியசாலை முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திலிருந்து நேற்றைய தினம் காணாமல் போயிருந்த சாரதி, இன்று படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.​நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் மாணவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற சமயம் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.​திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்றைய தினம் விடுமுறையில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.​இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,​இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸார் தனித்தனியாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும்.  இச்சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டு வரப்படும் ​பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவும், மாயமான ஏனைய இருவரையும் பாதுகாப்பாக மீட்க சகல பாதுகாப்புப் பிரிவினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.

சுதந்திர தினம் கரிநாள் – மக்களை திரட்டும் நடவடிக்கையில் யாழ்.பல்கலை மாணவர்கள்


சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளனர்.தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாத தீயிலிருந்து தமிழர் தாயகத்தை காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பிற்காகவும் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை தொழில் செய்ய தம்மை அனுமதிக்க வேண்டும் என கடற்தொழிலாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள கடந்த காலத்தில் நீரியல்வளத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் , உழவு இயந்திரம் உள்ளிட்ட தொழில் உபகரணங்களை தாம் பல இலட்ச ரூபாய் செலவில் வாங்கியுள்ளமையால் , தமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை  விடுத்துள்ளனர். அதேவேளை , வடமராட்சி கடற்பகுதியில் , வெளிமாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து தங்கி நின்று, உழவு இயந்திரங்களை பயன்படுத்தி , கரை வலை தொழில் செய்வதனால் , வடமராட்சி கிழக்கு பூர்வீக கடற்தொழிலாளர்கள் பலர் கரைவலை இழுக்கும் தொழில் இழந்துள்ளனர் உழவு இயந்திரங்கள் ஊடாக கரை வலை தொழில் செய்யும் போது , அனுமதிக்கப்பட்ட தூரத்தினை விட அதிக தூரம் சென்று வலைகள் இடப்படுவதால் , அப்பகுதியில் தொழில் செய்யும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன் , இயந்திரம் மூலமான கரை வலை தொழிலால் , கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் , கடற்கரையில் உள்ள தாவரங்கள் கூட அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , இம்முறையே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதற்கு தடை விதித்து  அதனை இறுக்கமாக கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் இந்நிலையிலேயே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதனை நிறுத்த கால அவகாசம் கோரி சில கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கோட்டைக்குள் உள்ள அற்புத மாதா ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு – நேரில் சென்ற சுமந்திரன்


யாழ்ப்பாண கோட்டைக்குள் காணப்பட்ட அற்புத மாதா ஆலயம் சிதிலமடைந்துள்ள நிலையில் , அதனை அதன் வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க தொல்லியல் துறையால் இதுவரை எந்தச் சரியான முயற்சியும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் , யாழ்ப்பாண கோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் , கோட்டை பகுதியில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொல்லியல் திணைக்கள உத்தியோகஸ்தர்களுடனும் கலந்துரையாடினார் அதேவேளை கோட்டை பகுதியை சுற்றியுள்ள தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சுற்றி தொல்லியல் திணைக்களத்தினால் , எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளது. எல்லை கற்கள் நாட்டுவது குறித்து , எந்த தரப்புடனும் கலந்துரையாடாது , அவற்றை நாட்டியுள்ளமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , அவற்றினையும் சுமந்திரன் பார்வையிட்டார். முற்றவெளி மைதானம் தொல்லியல் திணைக்களத்திற்குள் வருவதனால் , அவற்றினையும் சுற்றி எல்லை கற்கள் நடப்பட்டுள்ளமையால் , இம்முறை நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது வாகன தரிப்பிடத்திற்கு இடம் இல்லாது , வீதிகளிலையே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டமையால் , அவ்வீதி ஊடான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சீவீகே வெளியே ; மறவன்புலோ !


தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனையும் சிவஞானத்தையும் நீக்குக என அழைப்பு விடுத்துள்ளார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.1961 பங்குனி  யாழ்ப்பாணத்தில் நடந்த அறப்போருக்காக தமிழகத் தலைவர்களிடம் ஆதரவு கேட்டேன்.1961 சித்திரை  யாழ்ப்பாணம் கச்சேரி முன் அறப்போர். மல்லாகம் நடராஜா அவர்கள் நடத்திய அஞ்சலகத்தில் தொண்டனாகப் பணிபுரி பணிபுரிய வாய்ப்பு.தமிழரசுக் கட்சியோடு அன்று தொடங்கிய தொடர்புகள் இன்று வரை இடையீடு இன்றி தொய்வின்றி தளர்வின்றி தொடர்கின்றன.65 ஆண்டுகள் நான் தமிழரசு கட்சியின் தொண்டன். 1977க்குப் பின் வாழ்நாள் உறுப்பினர். நடுவண் குழு உறுப்பினர். அரசியல் குழு உறுப்பினர். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளர். கட்சியைக் கண்ணை இமை போல் காத்து வந்த கடமை வீரர்கள் நடுவே நான் களங்கமின்றி வாழ்ந்தேன்.தந்தை செல்வா என்னை அரவணைத்தவர்.  அமிர்தலிங்கம் என்னை இணைத்து அணைத்துப் போற்றியவர். தொண்டனாக இருந்தேன். பதவிகளைக் கேட்கவில்லை. பொறுப்புகளைக் கேட்கவில்லை. எனினும் பதவி வழி செய்ய முடியாத பொறுப்பு வழி செய்ய முடியாத பல பணிகளைக் கட்சிக்காக நான் 65 ஆண்டு காலமாக ஆற்றி வருகிறேன். அயோக்கியத்தனமாக நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் காலப் படுகொலைகளுக்கு நான் துணை போகவில்லை.மதமாற்றிச் சபையான international fellowship of evangelical students அமைப்பில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களைப் பெற்று இலங்கையிலும் தெற்காசியாவிலும் மதமாற்றப் பணிகளில் நான் ஈடுபடவில்லை.மெதடித்த திருச்சபையின் இணை ஆயராகப் பதவியேற்ற பின்பு பாதிரியாகவே நான் தொடர்ந்து மதமாற்றத்திற்காக 52க்கும் அதிகமான தொண்டர்கள் வைக்கும் பணியில் நான் எப்பொழுதும் ஈடுபடவில்லைகனடாவில் இருந்து வந்த தொகைகளை ஏமாற்றிக் கையகப்படுத்தவில்லை. அதற்காகக் குதாசனோடு நான் முரண்படவில்லை.மதமாற்றச் சபைகள் வழி என்னைத்  தோற்கடித்தார் என மாவை சேணாதிராசா என்னைக் குற்றச்சாட்டவில்லை.சயந்தனை அனுப்பி நான் அருந்தவபாலனை ஓரம் கட்டவில்லை.பொது வேட்பாளரான என்பதற்காக அரியநேந்திரனை நான் வெளியேற்றவில்லை.கருத்து ஒன்றை ஊடகத்தில் தெரிவித்ததற்காக மன்னார் சிவகரனை அகற்றவில்லை.ஊழல்வாதி இரவிகரனுக்காக நான் சிவமோகனைக் கலைக்கவில்லை.முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்த விக்னேசுவரனை அடக்க முடக்க இரணிலோடு நான் கூட்டுச் சேரவில்லை.தேசத்தின் நலனைக் கருத்தாக கூறிய அனந்தி சசிதரனை நான் வெளியேற்றவில்லை.சிறையில் வாடும் தமிழ் இளைஞரை விடுவிப்பதே வாழ்வாகக் கொண்ட தவராசாவை நான் விரட்டவில்லை.உதயன் நாளிதழ் சரணவபவனை நான் கலைக்கவில்லை.சசிகலா இரவிராசருக்கு மாறாகத் துரும்பைக் கூட நான் எடுக்கவில்லை.சுரேஸ் பிரேமசந்திரன், சித்தார்த்தன், அடைக்கலநாதன் குழுக்கள் தமிழர் கட்சியோடு இணைந்து போவதை முறித்துக் கூட்டமைப்பை உடைக்கவில்லை.மாவை சேனாதிராசாவை அறுவான் என ஒரு பொழுதும் நினைக்கேன், நினைத்தால் அன்றோ அச்சொல் வாயில் வரும். அல்பிரட் துரையப்பாவோடு கூட்டு வைத்த அயோக்கியன் நான் அல்லன்.முழங்காலின் கீழ் சூடு வாங்கிய அயோக்கியன் நான் அல்லன்.கூட்டுறவு ஊழலில் விடுதலைப் புலிகள் சிறையில் அடைத்த அயோக்கியன் நான் அல்லன்.கூட்டுறவுக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கி கொள்ளையடித்த அயோக்கியன் நான் அல்லன்.தேசத்தை தேசியத்தை தேசியத்தைக் காக்க எழுந்த மாவீரர்களை காட்டிக் கொடுத்தேன் எனச் சுண்டு விரலாலும் சுட்ட முடியாத களங்கமற்ற 65 ஆண்டுகாலத் தமிழரசு கட்சியின் தொண்டன் நான்.தமிழரசு கட்சியை மதமாற்றுச் சபையாக்கி தமிழினத்தை ஆபிரகாமிய மயமாக்கும் முயற்சியில் ஈடுபடும் சுமந்திரனையும் அயோக்கிய மனம் கொண்டு அறுவான் என அழைக்கும் சிவஞானத்தையும் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கத் தமிழரசு கட்சியினரை அழைக்கிறேன் என மறவன்புலோ சச்சிதானந்தன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அழைப்புவிடுத்துள்ளார்.

விமானம் கவனம்!


கடந்த வாரம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் ,  அதனால் பாரிய விபத்து ஏற்பட விருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்புடைய அறிவுறுத்தல்கள் மற்றும் சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் , அப்பகுதிகளில்; ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பறப்புக்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் களத்தில் மாணவர் ஒன்றியம்!


இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கு பொது மக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை (26) சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இதனிடையே வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போராட்டம் நடைபெறவுள்ளது.அநுர அரசு ஆட்சிப்பீடமேறிய பின்னராக இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி


யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணத்தில் 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் , அது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னையில் யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் ,  அதனால் பாரிய விபத்து ஏற்பட விருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுவைதீவில் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருட்டு


யாழ்ப்பாணம், எழுவைதீவில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன. எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் காணப்பட்ட வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி அம்மன் ஆகிய ஐம்பொன்களால் ஆனா இரு எழுந்தருளி விக்கிரகங்களும் களவாடப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் , பொலிஸார் எழுவை தீவுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடல் கடந்த தீவான எழுவை தீவுக்கு படகில் மாத்திரமே பயணம் செய்ய கூடிய நிலைமை உள்ளமையால் , களவாடப்பட்ட விக்கிரகங்கள் எழுவைதீவை விட்டு வெளியே எடுத்து செல்லப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாக காணப்படுவதனால் , குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை விரைவில் கைது செய்து சிலைகளை மீட்க முடியும் என ஊர்காவற்துறை பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Copyright © 2026. Created by Meks. Powered by WordPress.