Category - இலங்கை

1
கோட்டா விசாரரணக்கு?
2
புலம்பெயர்ந்தவர்களிற்கு வாக்களிக்க உரிமையில்லையா?
3
3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
4
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்
5
பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

கோட்டா விசாரரணக்கு?


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் வழக்கறிஞர் மோகன் பீரிஸ் ஆகியோர் எதிர்வரும் நாட்களில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்திற்கு அழைக்கப்பட உள்ளனர்.இந்த நடவடிக்கைகள் ஆணைக்குழுவால் நடத்தப்படும் சிறப்பு விசாரணையின் ஒரு பகுதியாகும்,.கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் பல வீட்டு அலகுகளை ஒதுக்க சட்டவிரோத பரிந்துரைகளை கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றும் காலத்தில் பிறப்பித்துள்ளார்.லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையத்திற்கு கிடைத்த புகாரின்படி, விசாரணை தொடங்கப்பட்டது. நடந்து வரும் விசாரணையின் கீழ், தேசிய வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பாக பல அதிகாரிகளிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த அதிகாரிகளை விசாரித்தபோது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் வழக்கறிஞரிடமிருந்து விளக்கங்களைப் பெற ஆணையம் முடிவு செய்துள்ளது.

புலம்பெயர்ந்தவர்களிற்கு வாக்களிக்க உரிமையில்லையா?


வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் வாக்களிக்க முடியுமென்ற இலங்கை அமைச்சரவை அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்களோ ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா என்பது தொடர்பில் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை.வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக செப்டெம்பர் மாதத்தில் இடம்பெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. தீர்மானம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதத்தை குழு அனுப்பியுள்ளது.தங்கள் பிரதேசங்களில் இருந்து, வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றிய விபரங்களை வழங்குமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை கூட்டம் முடிவடைந்து, இரண்டரை மாதங்களின் பின்னர் அதுவும், முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தான், கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்களை குழு அனுப்பியிருக்கிறது.அதாவது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க முடியும் என்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானம் விளக்கமாக கடிதத்தில் இல்லை.  அவை பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் இதுவரை விளக்கம் கோரவுமில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர், 3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 16 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் 2 தராசுகள், அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்த ஐஸ் போதைப்பொருள் தொகையின் பெறுமதி 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போதே இந்த ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏனைய உபகரணங்களை பொலிஸார் மீட்டெடுத்தனர். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்


அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. 05 தொழிற்சங்க வழிமுறைகளின் ஊடாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். அதற்கமைய, 01.கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) இல்லாத மருந்துகளை, வெளி மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை (பரிந்துரைச் சீட்டு) வழங்காமை. 02.வைத்தியசாலை அமைப்பிற்குள் இல்லாத ஆய்வுகூட பரிசோதனைகளை, வெளி ஆய்வுகூடங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் செய்துகொள்வதற்காக துண்டுச் சீட்டுகள் அல்லது பரிந்துரைகளை வழங்காமை. 03.தற்போது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை வழங்க முடியாவிடின் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படாதவிடத்து, வைத்தியசாலை அமைப்பிற்குள் புதிய பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமை. 04.சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் நடத்தப்படும் சில கிளினிக்குகள் மற்றும் சுகாதார முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமை. 05.ஏதேனும் ஒரு வைத்தியசாலையில், கிளினிக்கில் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளியை பரிசோதிக்கும் போது வைத்தியருக்கு உதவியாக, உதவி உத்தியோகத்தர் ஒருவரை வழங்காவிடின் வைத்தியர்கள் அந்த இடங்களில் கடமையிலிருந்து விலகுதல். ஆகிய 05 வழிமுறைகளின் கீழ் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, “நாங்கள் ஆரம்பிக்கும் இந்த ஐந்து தொழிற்சங்க நடவடிக்கைகளும் வேலை செய்யாமல் இருப்பதற்காக அல்ல. நாளை முதல் நாங்கள் வேலை செய்வோம், ஆனால் வேலை செய்யக்கூடிய சூழலுக்குள்ளேயே செய்வோம். நீங்கள் தேவையான வசதிகளை வழங்காவிடின், உங்களாலேயே இந்த இலவச சுகாதார சேவை சீர்குலைகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படியாயின் அதற்கான பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சரும், அரசாங்கமும் தயாராக இருக்க வேண்டும். அதேபோன்று ஜனவரி மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை நாங்கள் மத்திய செயற்குழுவைக் கூட்டுகிறோம். இந்த மத்திய செயற்குழு கூட்டத்தில், இதற்கு அப்பால் சென்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான தீர்மானங்களை நாங்கள் எடுப்போம். அதனால், இந்தத் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும். நினைவில் கொள்ளுங்கள், இதற்கு அப்பால் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஏதேனும் ஒரு இடத்தில் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்தால், ஏதேனும் ஒரு இடத்தில் நோயாளர் பராமரிப்பு சேவைகள் சீர்குலைந்தால், அதற்கான முழுப் பொறுப்பையும் இந்த சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சரும், அரசாங்கமுமே ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்


மோட்டார் சைக்கிளில் பயணித்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலுக்கு இலக்கான மதகுரு, நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ள நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 06 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் மன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

Copyright © 2026. Created by Meks. Powered by WordPress.