உக்ரைன் போருக்குப் பிறகு ஓய்வுபெறும் இலட்சக்கணக்கான ரஷ்ய வீரர்களைப் பயன்படுத்தி, ஐரோப்பா முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்த விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக எஸ்தோனிய வெளியுறவு அமைச்சர் மார்கஸ் தசக்னா (Margus Tsahkna) ‘தி டெலிகிராப்’ இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். போர்க்களத்தில் இருந்த முன்னாள் கைதிகள், குற்றவாளிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ஷெங்கன்’ (Schengen) எல்லைக்குள் அனுப்பி, அங்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க கிரெம்ளின் திட்டமிட்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் சுமார் 10 இலட்சம் (1 Million) போர் வீரர்கள் உள்ளனர். உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், இவர்கள் ஐரோப்பாவிற்குள் நுழையக்கூடும் என அஞ்சப்படுகிறது. இவர்கள் வேலை தேடியோ அல்லது வரி செலுத்தவோ வரப்போவதில்லை; மாறாக, ரஷ்ய உளவு அமைப்புகளின் வழிகாட்டுதலில் ஐரோப்பிய சமூகத்தின் மீது தாக்குதல்களை நடத்தவே வருவார்கள் என தசக்னா எச்சரித்துள்ளார். உக்ரைன் போரில் பங்கேற்ற அனைத்து ரஷ்ய வீரர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ஷெங்கன்’ நாடுகளுக்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்கப்பட வேண்டும் என தசக்னா முன்மொழிந்துள்ளார். இந்த பாதுகாப்புத் திட்டத்தில் பிரித்தானியாவும் இணைய வேண்டும் என்றும், இதன் மூலம் கண்டத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஒருவேளை அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அதன் பிறகு ஐரோப்பா “மிகவும் திடீரென” ஒரு பாதுகாப்பு நெருக்கடியைச் சந்திக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எஸ்தோனியாவின் முன்மொழிவை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் தனது எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. உக்ரைன் போரில் பங்கேற்ற ரஷ்ய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவது குறித்து ‘ஷெங்கன்’ நாடுகள் ஆலோசித்து வருகின்றன. ரஷ்யா மற்றும் பெலாரஸ் உடனான எல்லைகளில் ‘பிரான்டெக்ஸ்’ (Frontex) எனப்படும் ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிற்குள் நுழையும் ரஷ்யப் பிரஜைகளின் பின்புலத்தை (Background check) ஆராய, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தரவுத்தளத்தை EU உருவாக்கி வருகிறது. ரஷ்யாவின் ‘ஹைப்ரிட் வார்’ (Hybrid War) மற்றும் உளவுத் தகவல்களை எதிர்கொள்ள பின்லாந்தில் உள்ள “ஐரோப்பிய கலப்பு அச்சுறுத்தல் எதிர்ப்பு மையத்தின்” (European Centre of Excellence for Countering Hybrid Threats) செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை எஸ்தோனியாவின் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்தோனிய அமைச்சரின் பேச்சு வெறும் ‘ரஷ்யா மீதான பயத்தை’ பரப்பும் நோக்கம் கொண்டது என்றும், இது அடிப்படை ஆதாரமற்றது என்றும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய வீரர்களுக்குத் தடை விதித்தால், ரஷ்யாவும் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு எதிராகப் பதிலடி நடவடிக்கைகளை (Counter-measures) எடுக்கும் என மொஸ்கோ எச்சரித்துள்ளது. உக்ரைன் போரில் மேலைநாடுகள் அடைந்து வரும் தோல்விகளைத் திசைதிருப்பவே இது போன்ற “கற்பனையான அச்சங்களை” ஐரோப்பியத் தலைவர்கள் உருவாக்கி வருவதாக ரஷ்யா கூறியுள்ளது.