இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்பிலான பாரிய ஆயுத விற்பனைக்கு அமெரிக்க அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது நட்பு நாடுகளின் தற்காப்புத் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான அதிநவீன போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் இதில் அடங்கும். மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் துல்லியமாக இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் இஸ்ரேலுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை தற்காப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் வான்வழிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் கருவிகள் சவுதிக்கு வழங்கப்படவுள்ளன. பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும், ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதும் இந்த ஆயுத விற்பனையின் முக்கிய நோக்கமாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகம் (Pentagon) தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, காசா மற்றும் ஏமன் பகுதிகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த ஆயுத விற்பனை தேவையற்றது என மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. அதேவேளை, இது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் வருவாயை அதிகரிப்பதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலுக்கு சுமார் 50 புதிய போர் விமானங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள விமானங்களுக்கான நவீனமயமாக்கல் கருவிகள் அதாவது இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க வழிகாட்டும் கருவிகள் வழங்கப்படவுள்ளன. ‘அயர்ன் டோம்’ (Iron Dome) அமைப்பிற்கான கூடுதல் ஏவுகணைகள் வழங்கப்படவுள்ளது. சவுதி அரேபியாவிற்கு வான் மண்டலத்திற்கு அப்பால் வரும் ஏவுகணைகளைத் தடுக்கும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வான்வழித் தாக்குதல்களை முறியடிக்க உதவும் பாதுகாப்பு ஏவுகணைகள், எதிரி நாடுகளின் நடமாட்டத்தைக் கண்டறியும் உயர் ரக ரேடார்கள் என்பன வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவை ஈரான் “மத்திய கிழக்கைப் பாதுகாப்பற்றதாக மாற்றும் செயல்” எனக் கடுமையாகச் சாடியுள்ளது. பிராந்தியத்தில் தேவையற்ற ஆயுதப் போட்டியை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஒப்பந்தம் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என்றும், பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. Tag Words: #USArmsSale #IsraelSaudiArabia #DefenseDeal2026 #MiddleEastPolitics #Pentagon #BreakingNews2026 #LKA #GlobalSecurity #FighterJets #InternationalRelations