(இணையத்தள செய்தி பிரிவு)சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி கொழும்பில் உள்ள நீதி அமைச்சிற்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சிவில் அமைப்புகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய அரசியல் அழுத்தமாக அமைந்தது.போராட்டத்தின் போது, “அடக்குமுறைச் சட்டங்கள் ஜனநாயகத்தின் எதிரிகள்” என்றும், “மக்களை ஒடுக்கும் எந்தவொரு சட்டமூலமும் நாட்டிற்குத் தேவையில்லை” என்றும் போராட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் முழக்கமிட்டனர்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட் தந்தை சக்திவேல், ‘ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாக NPP அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை மறந்து, அவர்களினால் தற்போது கொண்டுவரப்படும் PSTA சட்டமூலமானது பழைய PTA சட்டத்தை விடவும் ஆபத்தானது என்று குற்றம் சாட்டினார்.இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் கைகோர்த்து நின்றமை, இந்தச் சட்டங்களுக்கு எதிராக நிலவும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தியது.போராட்டத்தில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது தனிப்பட்ட வலிகளையும் கோரிக்கைகளையும் பதாகைகள் மூலம் வெளிப்படுத்தினர். 2009ஆம் ஆண்டு மட்டக்குளிப் பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ‘முகமது ஹக்கிம்’ என்ற இளைஞனின் தாயார், தனது மகனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கோரி ஏந்தியிருந்த பதாகை காண்போரை நெகிழச் செய்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள PTA சட்டமானது சிறுபான்மையினருக்கும், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், புதிய பெயரில் மீண்டும் ஒரு கருப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். நீதி அமைச்சிற்கு முன்னால் திரண்டிருந்த மக்கள், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், அடிப்படை உரிமைகளையும் முடக்கும் இத்தகைய சட்டமுயற்சிகளை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒருமித்த குரலில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.