மறுமலர்ச்சிப் பாதை நோக்கிய மக்கள் கலை இலக்கியப் பயணத்தில் ஆய்வாளராக, மக்களோடு இணைந்த கலை இலக்கியச் செயற்பாட்டாளராக வாழ்ந்து மறைந்த தமிழருவி த. சண்முகசுந்தரத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்றாவதுகண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்பில் தேசிய ஆய்வு மாநாடு, பேராசிரியர் சி. ஜெய்சங்கர் தலைமையில் 24, 25 ஆகிய இரு தினங்களில் மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இருநாள் அமர்வுகளில் 12 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழருவி சண்முகசுந்தரம் நாட்டார் கலைகளை முன்னெடுப்பதிலும், மீளுருவாக்குவதிலும் மக்களோடு இணைந்து செயல்பட்டார். நவீனத்துவத்திற்கும் காலனியத்துவத்திற்கும் மாற்றான தமிழ் அறிவு மரபை வளர்த்தெடுக்கப் பாடுபட்டார். மேற்கைரோப்பிய அதிகாரத்திற்கு எதிரான அறிவுருவாக்கம் குறித்துச் சுதந்திர காலப் பிரிவிலேயே சிந்தித்தார். ஆசியா, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் மேற்கைரோப்பிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகப் புதிய சுதேசிய அறிவிருவாக்கங்களில், சிந்தனைகளில் முனைப்புக் காட்டுவதைப் போல, நாமும் நமது உள்ளூர் அறிவு மரபை மீளுருவாக்க வேண்டும் எனச் சுதந்திர காலப் பிரிவிலேயே குரல் கொடுத்தவராக த. சண்முகசுந்தரம் திகழ்கிறார், எனப் பேராசிரியர் சி. ஜெய்சங்கர் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். ஈழத்துக் கலை மரபின் அடையாள இருப்பு, காலனியநீக்கத்தின் முதற்படியான மீளுருவாக்கம், அதில் சண்முகசுந்தரத்தின் வகிபாகம், அவரது வாழ்வியல் பின்னணி மற்றும் சமூக ஆய்வுச் செயற்பாடு என்பவற்றின் வழியாக அவரது கருத்துகளை ஆய்வாளர் சி. ரமேஷ் முன்வைத்தார். கலைகளைக் காலனியநீக்கம் செய்தல் என்கிற பெருந்திட்டத்தில் சண்முகசுந்தரம் எவ்வாறு கூத்தை அணுகினார் என்பதை, அவரது மிகச் சிறிய கூத்தாய்வுப் பனுவலைக் கொண்டு நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு சு.சந்திரகுமார் நுண்ணாய்வுக்கு உட்படுத்தினார். கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன், தமிழருவியின் நாடகங்களில் ஒன்றான ‘இறுதி மூச்சில்’ இடம்பெறும் வைரவன் பாத்திர உருவாக்கம், இன்றைய கலைப் பண்பாட்டுச் சூழலில் வைத்துப் பார்க்கும்போது மிகுந்த முற்போக்கான பாத்திர உருவாக்கமாகவும், விளிம்புநிலை பாத்திரம் ஒன்றை மையத்திற்கு சமாந்தரமாகக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதாகவும், தனது ஆய்வுரையில் குறிப்பிட்டார். அடுத்து, இதே நாடகத்தைத் திரைப்பிரதி அணுகுமுறைக்கு உட்படுத்திய பல்லூடகப் புத்தாக்குனர் நௌபர் ஒல்லாந்தரின் கொடுமை, தமிழரின் எழுச்சி, உள்நாட்டுப் போர், இறுதித் தியாகம் என நாடகப் பிரதியின் காட்சிக் களங்களை விவரித்ததோடு; நாடகத்தின் அக்கூறுகளான பருவகால மாற்றங்கள், நிலவியல் குறியீடுகளை தெளிவாகியதோடு, எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிவித்த நாடகத் தீர்க்கதரிசி எனவும், வரலாறு திரும்புகிறது என்பதையே இதுவும் உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார். அரபு மொழி இலக்கியத் திறனாய்வுகளில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவரான ஹஸ்மத்துல்லாஹ், சண்முகசுந்தரத்தின் ஐந்து சிறுகதைகளில் உள்ள விளிம்புநிலை கதாபாத்திரங்களின் நிலவரங்களை, ஒரு சிறுகதைக்குரிய சுவாரசியத்துடன் அணுகும் தனது ஆய்வினை முன்வைத்தார். ஈழத்துச் சுற்றுச்சூழலியலாளரும் பசுமைப் பந்து செயற்பாட்டாளருமான ரியாஸ் அஹ்மட், தமிழருவி பெருந்தொகுப்பு முழுவதிலும் இடம்பெறும் உயிர்க்கோளத்தையும் உயிர்ப்பல்வகைமையையும் எடுத்துக்காட்டி ஒரு சூழலியல் திறனாய்வைச் செய்ததோடு, தமிழருவியை ஒரு சூழலியல் இலக்கியப் படைப்பாளர் எனவும் குறிப்பிட்டார். “பெண்களின் உணர்வுகளையும் கொந்தளிப்புகளையும் ஆண் எழுத்தாளர்களால் எவ்வாறு இவ்வளவு நுட்பமாகப் படைப்புக்குள் கொண்டுவர முடிகிறது?” என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு முகநூல் பதிவாளரும், ஆங்கில ஆசிரியருமான றிஹானா நௌபர், ‘மீனாட்சி’ நாவலில் வரும் பெண் பாத்திரங்களின் வார்ப்பு குறித்துத் தனது அனுபவங்களையும் ஆய்வுக் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். சோழர் காலத்தில் தொடங்கி நாயக்கர் கால தெலுங்கு மற்றும் தமிழர் மேலாளர்கள் ஊடாகத் தற்கால அரசியல் நிலவரங்களைத் தெளிவுபடுத்தி இசை மற்றும் தேவதாசி மரபு வழியான இசை, நடன வரலாற்றுப் பின்புலத்தில், சண்முகசுந்தரத்தின் இசை வேளாளர் இசை ஆய்வுப் பனுவலைத் தனக்கே உரிய எடுத்துரைப்பு முறையில் சத்தியதேவன் விளக்கினார். ஈழத் தமிழியலில் மறைக்கப்பட்ட மீளுருவாக்கத் தமிழ் அறிவு மரபின் எடுத்துரைஞர் தமிழருவி சண்முகசுந்தரம் என்ற தலைப்பில் எனது உரை அமைந்திருந்தது. நூல் தொகுப்பாளரும், சண்முகசுந்தரத்தின் மருமகனும், கதாசிரியருமான மகாலிங்கசிவம், தமிழருவியின் வரலாற்று ஆய்வு முறைகளை மிகுந்த அங்கதச் சுவையுடன், துள்ளல் மொழிநடையில், வித்தியாசமான குரல் நிகழ்த்துகையுடன் ஆற்றிய உரை அனைவரின் ரசிப்பையும் பெற்றது. பேராசிரியர் சி. ஜெயசங்கர், ஆய்வாளர் சி. ரமேஷ், துரைராஜா கௌரீஸ்வரன், சத்தியதேவன் போன்றோர் சூடான விவாதங்களை உருவாக்கி கரு த்தரங்கைக் களைகட்டச் செய்தனர். கருத்தரங்கு சுறுசுறுப்பாக நடைபெற, சுவையான உணவுகளைப் பரிமாறுவதற்குப் பொறுப்பாக நின்று செயல்பட்டவர்களில்: கலைஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரிசிலா, நீதிக்கான பறை மற்றும் கலாசார உத்தியோகத்தர் சிந்து உஷா ஆகியோர் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். “உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகின்ற, நவகாலனித்துவத்தின் கீழ் இன்றுவரை சிக்கியுள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் பண்பாட்டுக் குழுமங்களுடனும் சண்முகசுந்தரத்தின் ஆய்வும் பணியும் சேர்ந்து பயணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்,” எனப் பேராசிரியர் தனது தொகுப்புரையில் குறிப்பிட்டார். ஏபிஎம். இதிரீஸ்