by admin January 30, 2026 written by admin January 30, 2026 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில், வீடுகளில் சூட்சுமமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு வகையான போதைப்பொருட்களை சம்மாந்துறை காவற்துறையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாமா மற்றும் மருமகன் ஆகிய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (29) அதிகாலை கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்றை பெரிய நீலாவணை காவற்துறையினர் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்மாந்துறை காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் படியும் சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கல்முனை பிராந்திய உதவிக் காவற்துறை அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்தச் சோதனையில் குஷ் (Kush) கேரளா கஞ்சா ஐஸ் (ICE) ஹெரோயின் கைத்தொலைபேசிகள் மற்றும் பணம் ஆகியன மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 47 மற்றும் 68 வயதுடைய இரு சந்தேக நபர்களும் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களது வீடுகளில் பாதுகாப்புக்காகவும் கண்காணிப்புக்காகவும் அதிகளவான சிசிடிவி (CCTV) கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக்காவற்துறை மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அதிகாரிகள் சம்மாந்துறை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, சுற்றிவளைப்பில் ஈடுபட்ட காவற்துறை ழுவினரைப் பாராட்டியதுடன் மேலதிக ஆலோசனைகளையும் வழங்கினர். சந்தேக நபர்கள் இன்று (30) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். ________________________________________ Related News