சூடானின் தங்கத்தை சூடாக கொள்முதல் செய்யத் தொடங்கும் சவுதி அரேபியா! by admin January 29, 2026 written by admin January 29, 2026 யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டிடமிருந்து நேரடியாகத் தங்கத்தை இறக்குமதி செய்ய சவூதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த அதிரடி மாற்றமானது ஆப்பிரிக்காவின் தங்க வர்த்தகத்தில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த டுபாயின் பிடியை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூடானின் கனிம வளத்துறை அமைச்சர் நூர் அல்-தாயேம் தஹா மற்றும் சவூதி கனிம வளத்துறை அமைச்சர் பந்தர் அல்கொரயேஃப் ஆகியோருக்கு இடையே ரியாத்தில் நடைபெற்ற ‘Future Minerals Forum’ (ஜனவரி 2026) மாநாட்டில் இதற்கான பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டது. சவூதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான தங்கம் சுத்திகரிப்பு ஆலை (Saudi Gold Refinery) சூடானியத் தங்கத்தை உடனடியாகப் பெற்று, நவீன ஆய்வகங்கள் மூலம் தரம் பிரித்து சுத்திகரிக்கத் தயாராக உள்ளது. கடத்தல் மற்றும் முறையற்ற ஏற்றுமதியால் சூடானுக்கு ஆண்டுதோறும் சுமார் 5 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம் சூடான் தனது தங்கத்தை வெளிப்படையான முறையில் சந்தைப்படுத்தி அரசு வருவாயை அதிகரிக்க முடியும். ஐக்கிய அரபு அமீரகத்துடனான (UAE) அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சூடான் தனது முக்கிய ஏற்றுமதி சந்தையை டுபாயிலிருந்து சவூதிக்கு மாற்றத் தொடங்கியுள்ளது ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் சூடானின் பொருளாதார மீட்சிக்கு சவூதி அரேபியா ஒரு பலமான தூணாக உருவெடுத்துள்ளது. ________________________________________ Related News