புதிய கல்வி சீர்திருத்தம் நாட்டிற்கு அவசியமானது.அது எந்தவகையிலும் பிற்போடப்படக் கூடாது – கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!கல்வி சீர்திருத்தம் நாட்டிற்கு மிக அவசியமான ஒன்று என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மிகத் தெளிவான தீர்மானத்தை எடுத்துள்ளதைப் பாராட்டுவதுடன் எந்த வகையிலும் அது பிற்போடப்படக் கூடாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.உள்வாங்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பிலேயே பிரச்சினை காணப்படுகின்றது என சபையில் குறிப்பிட்ட அவர், அதில் உள்வாங்கப்பட்டுள்ள பாலினம் தொடர்பான, சில அம்சங்கள் தொடர்பில் தான் மத, சமய கலாசாரங்களுக்கு மத்தியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.அந்த விடயங்கள் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றதே தவிர, இந்தக் கல்வி சீர்திருத்தம் நிறுத்தப்பட வேண்டும் என எவரும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இடம் பெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஆளும் தரப்பு எம்பிக்கள் சபையில் உரையாற்றும் போது எதிர்க்கட்சினராகிய நாம் பிரதமரை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை முன் வைப்பதாக தெரிவிக்கின்றார்கள். நாம் பிரதமர் தொடர்பில் சிறந்த மரியாதை வைத்துள்ளோம். அவர் சிறந்த குடும்ப பின்னணியைச் சேர்ந்த கல்விமான் என்ற வகையில் அவர் தொடர்பில் நாம் பெருமைப்படுகிறோம். அந்த வகையில் பிரதமருக்கு எதிராக எந்த ஒரு வார்த்தையையும் கூட நாம் பிரயோகிக்கவில்லை. அனைவரும் அதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.கல்வி சீர்திருத்தம் நாட்டிற்கு மிக அவசியமான ஒன்று. எப்போதோ மேற்கொண்டிருக்க வேண்டிய இந்த பணியை எதிர்ப்புகள் காரணமாகவும் அரசியல் ரீதியான காரணங்களுக்காகவும் செய்திருக்காத நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மிகத் தெளிவான தீர்மானத்தை எடுத்துள்ளதைப் பாராட்ட வேண்டும். எந்த வகையிலும் அது பிற்போடப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.