
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்றைய தினம் புதன்கிழமை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்மும்பையிலிருந்து புறப்பட்ட குறித்த விமானம்,பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோதே விபத்து சம்பவித்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜில்லா பரிஷத் தேர்தல் தொடர்பான நான்கு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக, அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதிக்குச் சென்றுகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானத்தில் அஜித் பவார் உட்பட விமானிகள் மற்றும் உதவியாளர்கள் என 6 பேர் இருந்துள்ளனர். விமான நிலையப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.