ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் 23 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது. இதற்கு முன்னர் இவ்வழக்கு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், இவ்வழக்கை விசாரிப்பதற்கான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் பெயரிடப்படாத காரணத்தினால், வழக்கு மார்ச் 23 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் என மேல் நீதிமன்றப் பதிவாளர் அறிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களைக் கோராமல் விடுவித்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. அந்தத் தீர்ப்பிற்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதிவாதிகள் விடுவித்து விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்து, உரிய வழக்கை மீண்டும் அழைத்து, பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைத்த பின்னர் தீர்ப்பொன்றை வழங்குமாறு குறித்த வழக்கை விசாரித்த மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமுக்கு உத்தரவிட்டிருந்தது. அதற்கமையவே இவ்வழக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு – கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு அழைப்பு!
1