ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது

by ilankai

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.’நேர்மையான தேசத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்:மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து எங்கள் சேவைகள் அமையக் கூடாது. நேர்மையின்றிய தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது.மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப்பிணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களாகும். எனவே, இப்பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தெளிவான அறிவு அவசியம். சில சந்தர்ப்பங்களில் ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்கள் கூட இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.கட்டட அனுமதி, வியாபார அனுமதி, சோலை வரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்க முடியும். ஆனால், சில இடங்களில் இவை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன. இத்தகைய இழுத்தடிப்புக்கள் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செய்யப்படுவதாகவே கருதப்படும். இவ்வாறான செயற்பாடுகளுக்குத் தற்போதைய நிர்வாகத்தில் இடமில்லை.கடந்த காலங்களில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு நீங்கள் தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும், என்றார்.வடக்கு மாகாணத்தில் மூன்று நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்றிட்டத்தின் முதல் நாளான இன்றைய தினம், யாழ். மாநகர சபை மற்றும் யாழ். மாவட்டத்தின் 7 பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.வளவாளர்களாகக் கலந்து கொண்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி செத்திய குணசேகர மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் ஆகியோர், ‘ஊழலற்ற உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டியெழுப்புதல்’, ‘ஊழலை எதிர்ப்பதில் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளின் பங்கு’ மற்றும் ‘சட்டப் பின்னணி’ ஆகிய தலைப்புகளில் விரிவுரையாற்றினர். சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் – வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகள் மற்றும் யாழ். மாவட்டத்தின் ஏனைய பிரதேச சபைகளுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நாளை செவ்வாய்கிழமை நடைபெறும்.வவுனியா மாநகர சபை மண்டபத்தில் – வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நாளை மறுதினம் புதன்கிழமை  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts