ஹட்டனில் தங்க நெக்லஸ் கொள்ளை; மனைவியின் வீட்டில் மறைந்திருந்த குடும்பஸ்தர் கைது

by ilankai

ஹட்டன் நகரிலுள்ள ஒரு நகைக் கடையிலிருந்து 2,89,000  ரூபா மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடிச் சென்ற சந்தேக நபர், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஹட்டன் நீதிவான் எஸ். ராம்மூர்த்தி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இந்த மாதம்  27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தின் மேற்பகுதியில் வசிக்கும், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் வீரய்யா ராதாகிருஷ்ணன் என்பவரே கைது செய்யப்பட்ட நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவ தினத்தில், தங்க நெக்லஸை வாங்குவதாகக் கூறிய சந்தேக நபர், அதன் மதிப்பை செலுத்த தனது மனைவி வங்கிக்குச் சென்றுள்ளதாக நகைக்கடை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் திரும்பி வரும் வரை நெக்லஸிற்கான பில்லைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில், நெக்லஸை ஆய்வு செய்வதாக கூறி திடீரென அதனை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.ஹட்டன் தலைமையக பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் மறைந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், தலைமையக தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.மேலும், சந்தேக நபர் தங்க நெக்லஸுடன் ஹட்டன் முதல் வட்டவளை வரை ரயில் பாதையோரமாக நடந்து சென்று, பின்னர் நாவலப்பிட்டியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் அந்த நகையை  1,69,000 ரூபாய்க்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை கொழும்பில் கல்வி பயிலும் தனது மகனுக்கும், மீதமுள்ள தொகையில் ஒரு பகுதியை கடனாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும்போது சந்தேகநபரிடமிருந்து  10,000 ரூபா மட்டுமே மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts