அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்தது.கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்த போராட்டம், இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதனால் நேற்றைய தினமும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்குச் சென்ற நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். எனினும் இன்று காலை 8 மணியுடன் போராட்டம் நிறைவுக்கு வந்தது.எவ்வாறிருப்பினும் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ தென்னகோன் தெரிவித்தார். எமது கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றுக்காவது அரசாங்கம் வாய்ப்பளித்திருந்தால் எமக்கு இவ்வாறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டியேற்பட்டிருக்காது.ஏனைய அரச உத்தியோகத்தர்களை போன்று கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை எம்மால் பெற முடியாது.எனவே தான் அரச வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகள், சலுகைகள் குறித்து யோசனையொன்றை முன்வைத்துள்ளோம். அதற்கமைய மருத்துவ சேவையை பொது சேவையிலிருந்து வேறுபடுத்துமாறு கோரியுள்ளோம். அதனை சுகாதார அமைச்சர் ஏற்றுக் கொண்டதோடு மாத்திரமின்றி, பாராளுமன்றத்திலும் அது குறித்து தெரிவித்திருந்தார்.எவ்வாறிருப்பினும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று இடமாற்றங்கள் வழங்கப்படும் போது எமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதிலுள்ள சிக்கல் உள்ளிட்டவை தொடர்பில் தீர்வினைக் கோரியிருந்தோம். ஆனால் அதற்கும் நியாயமான பதில் கிடைக்கவில்லை.இனியாவது பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம். எமக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை நாம் மதிக்கின்றோம். எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்று விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் இன்றுடன் நிறைவு
2