நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட சிவப்பு பட்டியல் குற்றவாளி

by ilankai

சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்தியாவிலிருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சந்தேகநபர் அழைத்து வரப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய கெசல்வத்தே தினுக்கஎனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபருக்கு எதிராக பல கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 2015 இல் கெசல்வத்தே பொலிஸ் பிரிவுக்குள் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கொலை,2018 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்கு உதவி செய்தல்,2021 ஆம் ஆண்டு மட்டக்குளி பொலிஸ் பிரிவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்,2021 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் கையெறி குண்டு வைத்திருந்தல் மற்றும் கெசல்வத்த, வெள்ளவத்தை மற்றும் புளூமெண்டல் பொலிஸ்  பிரிவுகளில் கொள்ளை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Posts