கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக, ரூ.197 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை தோஹாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் 2025ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டதாக தூதரகம் அறிவித்துள்ளது.தூதரகத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.197,719,710.36 ஆகும். இதில், ரூ.23,641,182.00 தொகை தூதரகத்தின் ஊடாக நேரடியாக சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், மீதமுள்ள ரூ.174,078,528.36 தொகை, இலங்கையில் உள்ள குடும்ப உறவினர்களுக்கு ஒப்படைப்பதற்காக கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விசேடமாக, 2014ஆம் ஆண்டு முதல் தீர்வு காணப்படாமல் இருந்த சில வழக்குகள் தொடர்பான இழப்பீட்டுத் தொகைகளையும் இம்முறை பெற்றுக்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இதனுடன், கடந்த 2024ஆம் ஆண்டிலும் தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம், ரூ.172 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை இலங்கை குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு ரூ.197 மில்லியனுக்கும் அதிக இழப்பீடு
7