இவ்வாண்டில் கடந்த 22 நாட்களில் மாத்திரம் 135 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 142 பேர் உயிரிழந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.கொழும்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், நாளொன்றுக்கு வீதி விபத்துக்களால் சுமார் 8 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 22 நாட்களில் மாத்திரம் நாட்டில் 135 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களினால் 142 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 15 பேர் சாரதிகள், 50 பேர் பாதசாரிகள் ஏனையோர் பயணிகளாவர்.சராசரியாக ஒரு நாளைக்கு 8 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றமையானது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த 22 நாட்களில் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களைச் செலுத்திய 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.தனியார் பேருந்துகளில் நடத்தப்பட்ட மாதிரியான சோதனைகளில் 59 பேருந்துகளில் 10 பேருந்துகளின் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சுமார் 22 சதவீதமாகும். இவ்வாண்டிலிருந்து அனைத்து சாரதிகளையும் முறையாகச் சோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் நடமாடும் ஆய்வகங்கள் மூலம் இந்தச் சோதனைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும். சாரதிகளின் உமிழ் நீரைப் பயன்படுத்தி போதைப்பொருள் பாவனையைக் கண்டறியும் புதிய கருவிகள் பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளன. தற்போது இதற்கான முன்னோடித் திட்டம் நடைபெற்று வருகிறது.தேவைப்படின், தண்டனைகளை கடுமையாக்குவதற்கு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பேருந்து உரிமையாளர்கள் தங்களது சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நடத்தை குறித்து அவதானமாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகள் கண்டறியப்பட்டால், அந்தப் பேருந்தின் வீதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்படலாம். இது உரிமையாளர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்படுகிறது. மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதும், விபத்துக்களைக் குறைப்பதும், வீதி ஒழுக்கத்தை நிலைநாட்டுவதுமே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.
22 நாட்களில் 135 வீதி விபத்துக்களால் 142 பேர் உயிரிழப்பு
10