இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் (Biopic) குறித்த நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரபல பாலிவுட் இயக்குனர் லவ் ரஞ்சன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாலிவுட்டில் காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படங்களுக்குப் பெயர் பெற்ற லவ் ரஞ்சன், முதன்முறையாக ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையைத் திரையில் கொண்டுவரவுள்ளார். கிரிக்கெட் உலகில் ‘தாதா’ என்று அழைக்கப்படும் கங்குலியின் போராட்டங்கள், வெற்றிகள் மற்றும் இந்திய கிரிக்கெட்டை அவர் மாற்றிய விதம் போன்றவற்றை இந்தப் படம் மையமாகக் கொண்டிருக்கும்.
தற்போது இந்தப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கங்குலியின் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகர் யார் என்பது குறித்த ஊகங்கள் நீடித்து வந்தாலும், அண்மைய தகவல்களின்படி ஆயுஷ்மான் குரானா இதற்காகத் தயார் படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் லவ் ரஞ்சன் பேசுகையில், “இது ஒரு சாதாரண விளையாட்டுப் படம் மட்டுமல்ல, கங்குலி எனும் தனிமனிதனின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் ஒரு காவியமாக இருக்கும். இதற்காக பல மாதங்கள் ஆராய்ச்சி செய்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார். கிரிக்கெட்டை உயிராகக் கருதும் இலங்கை இரசிகர்களுக்கும் கங்குலியின் கதை ஒரு ஊக்கமளிக்கும் படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தை இந்தப் படம் மீள நினைவூட்டும் என்று சினிமா விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.