Monday, August 25, 2025
Home tamil newsபடகுகளை மீட்க கடல் வழியாக யாழ் . சென்றுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள்! – Global Tamil News

படகுகளை மீட்க கடல் வழியாக யாழ் . சென்றுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள்! – Global Tamil News

by ilankai
0 comments

இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு , அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக  தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.

கடந்த 2022 – 2023ஆம் ஆண்டு கால பகுதிகளில் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகள் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவுற்று , நீதிமன்றினால் , படகுகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் , அவற்றை மீண்டும் தமிழகம் எடுத்து செல்வதில் சிக்கல் நிலைமைகள் காணப்பட்டமையால் , அது தொடர்பில் படகு உரிமையாளர்கள் , இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் தமது படகுகளை தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருந்தனர்.

இந்நிலையில் , இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு கடந்த வாரம் படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்டு இந்தியாவிற்கு எடுத்து செல்ல அனுமதி அளித்தனர்.

banner

அதனை அடுத்து, இன்றைய தினம் திங்கட்கிழமை இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழு விசைப்படகு ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றனர்.

அவர்களை இலங்கை – இந்திய கடல் எல்லையில் வைத்து , இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்று , காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று , அங்கிருந்து அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து செல்லவுள்ளனர்.

அங்கு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஏழு படகுகளையும் பார்வையிட்டு , அவற்றின் தரங்களை பரிசோதித்து, மீட்டு செல்ல கூடிய படகுகளை மீட்டு செல்லவும் , ஏனைய படகுகளை மீட்பது தொடர்பில் ஆராய்ந்து செல்லவுள்ளனர்.

குறித்த குழுவினர் நாளைய தினம் மீண்டும் இராமேஸ்வரம் நோக்கி பயணிக்கவுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர் , இலங்கை – இந்திய கடல் எல்லை வரையில் அழைத்து சென்று இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைப்பார்கள்

You may also like