காணொளி: தமிழ்நாட்டின் கலைப்பொக்கிஷம் ‘ராமலிங்க விலாசம்’காணொளிக் குறிப்பு, காணொளி: ராமலிங்க விலாசம்; தென்னிந்தியாவிலேயே மிக அற்புதமான சுவரோவியங்களை தாங்கி நிற்கும் மாளிகைகாணொளி: தமிழ்நாட்டின் கலைப்பொக்கிஷம் ‘ராமலிங்க விலாசம்’
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ராமலிங்க விலாசம்… ராமநாதபுரம் அரண்மனையின் ஒரு பகுதியான இந்த மாளிகை தென்னிந்தியாவிலேயே மிக அற்புதமான சுவரோவியங்களைக் கொண்டிருக்கிறது. இந்த மாளிகைக்குப் பின்னால் பல சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.
ராமநாதபுரம் மன்னர்களில் குறிப்பிடத்தகுந்த மன்னர்களில் ஒருவரான ரகுநாத கிழவன் சேதுபதிதான், ராமநாதபுரம் கோட்டையையும் அரண்மனையையும் கட்டியவர். அந்த அரண்மனையின் முக்கியப் பகுதியாக, அரசர் கொலு வீற்றிருக்கும் மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டது. அந்த மண்டபம்தான் ராமலிங்க விலாசம்.
இந்த மாளிகை கி.பி. 1790க்கும் கி.பி. 1793க்கும் இடையில் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுவதாக தனது ‘சேதுபதி மன்னர் வரலாறு’ நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்றாசிரியரான எஸ்.எம். கமால்.
ராமலிங்க விலாசத்தின் கட்டட பாணி ஒரு கோவிலின் கட்டட பாணியை ஒத்ததாக இருக்கிறது. இந்த மாளிகையின் நுழைவாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் வரும் பகுதி, கோவில்களின் மகா மண்டபத்தை ஒத்திருக்கிறது. இந்த மண்டபத்தை 24 உயரமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. பிரம்மாண்டமான இந்த தூண்களை அலங்காரமான வளைவுகள் இணைக்கின்றன. இந்தக் கட்டமைப்பு மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையை நினைவுபடுத்துகிறது.
இதற்கடுத்ததாக, 10க்கும் மேற்பட்ட தூண்களுடன் அர்த்த மண்டபத்தைப் போன்ற அமைப்பு இருக்கிறது. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் கருவறை போன்ற விசாலமான அறை இருக்கிறது. இந்த கருவறை போன்ற மண்டபத்திற்கு மேலே உள்ள மாடியில் அதே அளவிலான ஒரு அழகு மிகுந்த மண்டபம் அமைந்திருக்கிறது. அதற்கும் மேலே ஒரு மொட்டை மாடியும் அதில் ஒரு மேடையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இது அரசரும் அரசியும் நிலாக் கால இரவுகளை ரசிப்பதற்காக கட்டப்பட்டது என தொல்லியல் துறை குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த ராமலிங்க விலாசம் அரண்மனையின் முக்கியத்துவம் என்பது என்பது இதன் கட்டடக் கலையோ அல்லது இதில் உள்ள சுரங்கமோ அல்ல. மாறாக இந்த ராமலிங்க விலாசத்தின் சுவர் முழுக்கத் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள்தான் இந்த மாளிகையை பிற மாளிகைகளிலிருந்து தனித்துக் காட்டுகின்றன. இந்த மாளிகையின் கீழ் தளத்திலும் முதல் தளத்திலும் உள்ள சுவர்களில் ஒரு அங்குல இடைவெளிகூட இல்லாமல் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்களின் பெரும் பகுதி முத்து விஜய ரகுநாத சேதுபதியின் (கி.பி. 1713 – கி.பி. 1725) காலத்தில் தீட்டப்பட்டதாகவே வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த ஓவியங்களைப் பொறுத்தவரை, அரண்மனையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கருத்தை மையமாக வைத்து தீட்டப்பட்டுள்ளன. மகாமண்டபத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னருக்கும் சேதுபதி மன்னருக்கும் இடையில் அறந்தாங்கிக்கு வடக்கே நிகழ்ந்த போரின் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் உருவமும் பெருமாளின் பல தோற்றங்களும் தீட்டப்பட்டுள்ளன. தெற்குச் சுவற்றில் சைவ சமயக் காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன.
அதேபோல, அர்த்த மண்டபம் போன்றுள்ள இடைப்பட்ட மண்டபத்தில் கிருஷ்ணனின் பிறப்பை விளக்கும் காட்சிகள், ஆயர்பாடியில் கிருஷ்ணன் புரிந்த வீரச் செயல்கள் ஆகியவை ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன. கருவறை மண்டபத்தில் பாகவதக் கதைக் காட்சிகள், ராமாயணக் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ராமாயணக் காட்சிகளின் அடியில் பெரும்பாலும் தமிழிலும் சில இடங்களில் தெலுங்கிலும் விளக்கக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் மேல் விதானங்களில் அந்தப்புர காட்சிகள், ராதஜராஜேஸ்வரியிடம் செங்கோல் பெறுவது, மதுரை நாயக்க மன்னரான முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கர், முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு ரத்தினாபிசேகம் செய்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் மாடியில் உள்ள மண்டபம் முழுக்க, மன்னரின் அக வாழ்க்கை தொடர்பான, அந்தரங்க வாழ்க்கை தொடர்பான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இசை கேட்டல், நடனம் காணுதல், தேவியர் குழாமோடு நீராடுதல், பல்வேறு வடிவம் கொண்ட குடுவைகளின் மத்தியில் சேதுபதியும் ராணியும் இருத்தல், தேவியரோடு கூடி மகிழ்தல் போன்ற காட்சிகள் இந்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஓவியங்களில் தெலுங்கு மற்றும் முகலாய ஓவியங்களின் சாயல் தென்படுவதாக வெ. வேதாச்சலம் எழுதிய ‘ராமநாதபுரம் அரண்மனை’ நூல் தெரிவிக்கிறது. “முகலாய ஓவியங்களில் இருப்பதைப்போல உள்ளாடைகள் தெரியும் வகையிலான மெல்லிய ஆடைகளை ஆண்களும் பெண்களும் அணிந்துள்ளனர். முகலாயர்களைப் போன்ற தலைப்பாகைகளையும் இவர்கள் அணிந்துள்ளனர். இதிலுள்ள பெண்கள் தெலுங்கு நாட்டு சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காணப்படுவதைப் போன்ற கொண்டையிட்டுள்ளனர்” என்கிறது இந்த நூல்.
ராமலிங்க விலாசம் அரண்மனையின் மேல் தளத்தைப் பொறுத்தவரை, ஓவியங்களைத் தாண்டி வேறொரு கதையும் சொல்லப்படுகிறது.
காலின் ஜாக்சனுக்கும் கட்டபொம்மனுக்கும் இடையிலான சந்திப்பு இந்த மாளிகையில்தான் நடந்ததாகவும் இங்கிருந்தே கட்டபொம்மன் கீழே குதித்துத் தப்பியதாகவும் நம்புகிறார்கள்.
ஆனால், ராமலிங்க விலாசத்தைப் பொறுத்தவரை அதிலுள்ள ஓவியங்களே, அந்த மாளிகையை தமிழ்நாட்டின் மிக முக்கியமான கலைப்பொக்கிஷமாக கருதவைக்கின்றன.
செய்தியாளர்: முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: டேனியல்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு