அணுகுண்டு சோதனை, இராக் போரின் போது அமெரிக்கா தந்த நெருக்கடியை இந்தியா சமாளித்தது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1998 ஆம் ஆண்டு இந்தியா அணு ஆயுத சோதனைகளை நடத்தியபோது, அமெரிக்கா பல தடைகளை விதித்தது (கோப்பு புகைப்படம்)எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 50 சதவீத வரி விதித்தார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை தடுப்பதே இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கான நோக்கம் என்று கூறப்பட்டது.
“ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம், இந்தியா விளாடிமிர் புதின் போரை தொடர்ந்து நடத்த மறைமுகமாக உதவி புரிகிறது” என்று அமெரிக்கா கூறியது.
இந்தியாவின் கொள்கையில் அமெரிக்கா செல்வாக்கு செலுத்த முயற்சிப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. 1998ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டு சோதனைகளை நடத்திய போதும், இந்தியாவின் மீது அமெரிக்கா பல தடைகளை அறிவித்தது.
இந்தியா மீது அமெரிக்கா எவ்வளவு அழுத்தம் செலுத்தியது என்பதற்கு உதாரணமாக இந்திய அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய ராஜதந்திரி டி.பி. ஸ்ரீனிவாசன் நேர்காணல் ஒன்றில் பேசியதைக் கூறலாம். “கிளிண்டன் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஒரு அச்சுறுத்தும் செய்தியை அனுப்பினார்: ‘நான் பெர்லினுக்குச் செல்கிறேன். அங்கு செல்ல ஆறு மணி நேரம் ஆகும். அதற்குள் எவ்வித நிபந்தனையும் இன்றி அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் (CTBT) இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டால், நான் எந்தத் தடைகளையும் விதிக்க மாட்டேன்'”.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், அப்போதைய அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ஸ்ட்ரோவ் டால்போட்டுடன்”இந்தியா, அடுத்த நாள் நண்பகலுக்குள் மீதமுள்ள அணு ஆயுத சோதனைகளை முடிக்கும் வரை அமெரிக்க அரசுக்கு பதில் எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று இந்திய தூதர் நரேஷ் சந்திராவிடம் பிரதமர் அலுவலகம் கூறியது.”
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“மே 13ஆம் நாளன்று, இனி அணு ஆயுத சோதனைகளை நடத்தப்போவதில்லை என்றும், CTBT ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாகவும் இந்தியா அறிவித்தது.”
திரைக்குப் பின்னால் பல நாட்கள் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளும், ஜஸ்வந்த் சிங்குக்கும் ஸ்ட்ரோவ் டால்போட்டுக்கும் இடையிலான பல சந்திப்புகளுக்குப் பிறகு, அமெரிக்காவை தனது பக்கம் இழுப்பதில் இந்தியா வெற்றி பெற்றது.
பட மூலாதாரம், Picador India
படக்குறிப்பு, அபிஷேக் செளத்ரி எழுதிய அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு ‘The Believer’s Dilemma’ புத்தகம்இராக் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் இந்தியாவுக்கு இக்கட்டான சூழ்நிலை
2003ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையைக் கொண்டாட பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்த வீட்டிற்கு அவரது அமைச்சர்களும் நலம் விரும்பிகளும் வந்து கூடினார்கள். ஒருவர் பிரதமருக்கு தலைப்பாகை அணிவித்தார். அன்றைய வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அனைத்து சம்பிரதாயங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, வாத்திய இசைக்கு ஏற்ப ஹோலி பாடலைப் பாடத் தொடங்கினார்.
பலரும் கேட்டுக் கொண்டதால், வாஜ்பாய் தனது கால்களையும் கைகளையும் அசைத்து நடனமாடவும் முயன்றார். பிரதமராக ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்த வாஜ்பாயின் வயது அப்போது 79. வாஜ்பாயின் நடை தளர்ந்திருந்த அந்த காலகட்டத்தில், வறுத்த உணவு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை விலக்கி நான்கு கிலோ எடையைக் குறைத்திருந்த அவர் தன்னம்பிக்கையுடன் காணப்பட்டார்.
அண்மையில் வெளியிடப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறான ‘The Believer’s Dilemma’ புத்தகத்தில் அபிஷேக் செளத்ரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க விரும்பினார் வாஜ்பாய், ஆனால் இராக் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அதற்கு சிக்கலை உருவாக்கியது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இராக்கின் பேரழிவு ஆயுதங்களின் அச்சுறுத்தலில் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க விரும்பினார்” என்று எழுதியுள்ளார்.
எனவே, “ஆரம்பத்தில், அதிபர் புஷ்ஷிற்கு சந்தேகத்தின் பலனை அளித்த வாஜ்பாய், ஐ.நா. தீர்மானங்களுக்கு இணங்கவும், பேரழிவு ஆயுதங்களை அழிக்கவும் இராக்கை வலியுறுத்தினார்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்று வாஜ்பாய் அரசுக்கு அழுத்தம் கொடுத்த எதிர்க்கட்சிகள்போரை நியாயப்படுத்துவது தொடர்பான இந்தியாவின் சந்தேகங்கள்
இராக்கில் 300 இடங்களில் ஐ.நா. ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போதிலும், பேரழிவு ஆயுதங்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், புஷ்ஷின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படவில்லை.
“தாலிபன்களை அதிகாரத்திலிருந்து அகற்றுவது மட்டும் போதாது. இது இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் அமெரிக்காவின் நோக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை,” என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
மோசமான உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்ட அந்தப் போருக்கு எந்தவிதமான நியாயமும் இல்லை என கருதிய உலகின் பல நாடுகள் இராக் மீதான போரை பயனற்றதாகவே கருதின.
“அந்தப் போரினால் இந்தியாவுக்கு லாபத்தைவிட இழப்புகளே அதிகம். ஏனென்றால் வளைகுடாவில் இருந்து பெறும் எண்ணெயையே இந்தியா முழுமையாக நம்பியிருந்தது. தேர்தல் ஆண்டில் பணவீக்கம் உயர்வது என்பது எந்தவொரு அரசாங்கத்திற்கும் மோசமான செய்தி தான்” என்று அபிஷேக் செளத்ரி எழுதுகிறார்.
“இந்த நெருக்கடியின் குறிப்பிடத்தக்க விளைவு என்னவென்றால், எண்ணெய் துறையின் மூலோபாய முக்கியத்துவத்தை அரசாங்கம் உணர்ந்தது. இதனால்தான் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களை தனியார்மயமாக்குவது நிறுத்தப்பட்டது. வளைகுடா நாடுகளில் பணிபுரிந்துவந்த 40 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசாங்கம் கவலைப்படத் தொடங்கியது.”
“குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, இந்திய இஸ்லாமியர்கள் பாக்தாத்தை அமெரிக்கா ஆக்கிரமித்ததற்கு தங்கள் எதிர்ப்பை உரக்கவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தினார்கள்.”
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் முடிவுக்கு பரவலான ஆதரவு இல்லை
இதற்கிடையில், மார்ச் 17ஆம் தேதிக்குள் இராக் தனது பேரழிவு ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி அமெரிக்கா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது.
ஜீன் எட்வர்ட் ஸ்மித் தனது ‘புஷ்’ புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், “இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கவிருந்த நாளில், வாக்கெடுப்பில் தோற்றுவிடும் என்று அஞ்சிய அமெரிக்கா தீர்மானத்தை வாபஸ் பெற்றது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, புஷ் ஈராக்கைத் தாக்கினார்.”
“தான் கடவுளின் விருப்பத்தைச் செய்த மனிதர் என்றும், இராக்கின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மேற்கத்திய பாணி ஜனநாயகத்தை மாற்ற விரும்புவதாகவும் புஷ் தன்னைப் பற்றி கூறினார். ஆனால் பல நாடுகள் இராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் போரில் சேர மறுத்துவிட்டன.”
பட மூலாதாரம், Simon & Schuster
படக்குறிப்பு, ஜீன் எட்வர்ட் ஸ்மித்தின் ’புஷ்’அமெரிக்க தாக்குதலுக்கு இந்திய நாடாளுமன்றம் கண்டனம்
இராக் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னர்,’ஒரு வல்லரசு, எந்தவொரு நாட்டிலும் ஆட்சியை மாற்ற தனது சக்தியைப் பயன்படுத்துவது தவறு, அதை ஆதரிக்க முடியாது’ என்று இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியா அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, அறிக்கை ஒன்றை வெளியிட்ட இந்திய வெளியுறவு அமைச்சகம், “இராக்கில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது,” என்று கூறியது.
அதற்கு அடுத்தநாள், இந்தியப் பிரதமர் வாஜ்பாயை அழைத்த அமெரிக்க அதிபர் புஷ், இந்தியாவின் எதிர்ப்பை சற்று மென்மையாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அந்த சிக்கலான காலகட்டத்தை முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ‘Relentless’ என்ற தனது சுயசரிதை நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “அமெரிக்கா இராக்கைத் தாக்கியபோது, இந்தியாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையை உலகுக்குக் காட்ட விரும்பிய காங்கிரஸ் கட்சி, அமெரிக்காவின் போர் நடவடிக்கையை நாடாளுமன்றம் கண்டிக்க வேண்டும், இல்லையெனில் நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்க முடியாது” என்று வலியுறுத்தியது.
“தனிப்பட்ட முறையில், நான் அதனை எதிர்த்தேன். இராக்கில் அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரிப்பதற்காக அல்ல, மாறாக நாடாளுமன்றத்தின் முன்மொழிவு என்பது, அரசாங்கக் கொள்கையின் நெகிழ்வுத்தன்மையின் வரம்பைக் கட்டுப்படுத்தலாம் என்று எனக்கு அச்சம் இருந்ததால்.”
“பின்னர், நாடாளுமன்றத்தை நடத்துவதற்காக, தீர்மானத்தை நிறைவேற்றினோம், அதில் நாங்கள் ‘நிந்தா’ என்ற இந்தி பதத்தைப் பயன்படுத்தினோம், ஆனால் ஆங்கிலத்தில் அந்த சொல்லுக்கு ஈடாக “Deplore” என்ற பதத்தை பயன்படுத்தினோம். ‘டெப்லோர்’ என்பது ‘நிந்தா’ என்பதை விட தீவிரம் குறைவான சொல்.”
பட மூலாதாரம், Bloomsbury
படக்குறிப்பு, முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் ‘Relentless’ சுயசரிதை நூல்இராக்கிற்கு படைகளை அனுப்புமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
அமெரிக்க-இந்திய உறவுகளில் மற்றொரு சிக்கல் எழுந்தது. மே மாதம் வாஷிங்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவிடம் அமெரிக்க அரசு கோரிக்கை ஒன்றை முன்வைத்தது. போருக்குப் பிறகு அனுப்பப்படும் Stabilization Force எனப்படும் அமைதிப் பணிக்கான படைக்கு இந்தியப் படைகளை அனுப்பவேண்டும் என்பதே அமெரிக்காவின் கோரிக்கையாக இருந்தது.
இந்த கோரிக்கையை மிஸ்ரா ஆதரித்தார். அவர் முன்னதாக, ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை’ எதிர்த்துப் போராட இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியை ஆதரித்து வந்தார்.
2003 ஜூன் மாதத்தில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த எல்.கே. அத்வானி, அமெரிக்க துணை அதிபருடனான சந்திப்பின் போது இந்தியப் படைகளை அனுப்ப விருப்பம் தெரிவித்திருந்தார்.
உண்மையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த அமைதிப் படைக்கு தங்கள் வீரர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. வடக்கு இராக்கில் நிர்வாகத்தை நடத்துவதற்கு இந்தியா தனது பிரிவுகளில் ஒன்றை அனுப்புமாறு குறிப்பாகவே கேட்டுக்கொண்டது.
“இந்திய பத்திரிகையாளர்களில் ஒரு பிரிவினர் இந்த முன்மொழிவை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பின, ஏனெனில் இது இந்தியா-அமெரிக்க உறவுகளில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தார்கள். எனவே அதற்கான தயாரிப்புகளும் தொடங்கின” என்று அபிஷேக் செளத்ரி எழுதுகிறார்.
”இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அமைதி காக்கும் படையில் இந்தியாவின் பங்களிப்பை அமெரிக்கா விரும்புகிறது, ஏனெனில் இந்திய ராணுவம் அமைதியைப் பேணுவதில் நிறைய அனுபவத்தைக் கொண்டுள்ளது, அதன் பிம்பம் நன்றாக உள்ளது மற்றும் அதன் எண்ணிக்கையும் போதுமானது. இந்த பணியில் அனுப்பப்பட வேண்டிய பிரிவுகளையும் இந்திய ராணுவம் பட்டியலிட்டுள்ளது.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் பிரஜேஷ் மிஸ்ராஅமெரிக்க திட்டத்திற்கு எதிரான சூழலை உருவாக்கிய வாஜ்பாய்
பின்னர் ஒரு நேர்காணலில் பேசிய பாகிஸ்தானுக்கான இந்திய உயர் ஆணையராகவும் பின்னர் வெளியுறவுச் செயலாளராகவும் பணிபுரிந்த சிவசங்கர் மேனன், “ஜஸ்வந்த் சிங் மற்றும் பிரஜேஷ் மிஸ்ராவைத் தவிர, அத்வானி மற்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் இந்திய வீரர்களை இராக்கிற்கு அனுப்புவதற்கு ஆதரவாக இருந்தனர். அமெரிக்காவை எதிர்க்கும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அதை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்றாலும் ராணுவம் அவரை சம்மதிக்க வைத்துவிட்டது” என்று தெரிவித்தார்.
ஆனால் வாஜ்பாய் இது குறித்த எந்த திட்டவட்டமான கருத்தையும் உருவாக்கவில்லை. காங்கிரஸின் சோனியா காந்தி அந்த நடவடிக்கையை எதிர்த்து வாஜ்பாயிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
“உடனடியாக சோனியா காந்தியுடன் ஒரு சந்திப்புக்கு வாஜ்பாய் அழைத்தார். பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் மற்றும் நட்வர் சிங் ஆகியோருடன் சோனியா காந்தி அந்த சந்திப்புக்கு வந்தார். சோனியா காந்தியுடனான சந்திப்பில் அவர் முன்வைத்த கருத்துகளை வாஜ்பாய் மிகவும் கவனமாகக் கேட்டார். இந்த விஷயத்தைப் பற்றி அவர் தனது தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுடனும் விவாதித்தார்” என்று யஷ்வந்த் சின்ஹா எழுதுகிறார்.
“இராக்கிற்கு இந்தியா படைகளை அனுப்புவதை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கவில்லை. அதுமட்டுமல்ல, அங்கு மருத்துவக் குழுவை அனுப்புவது கூட எதிர்க்கப்பட்டது. அனைவரின் கருத்தையும் கேட்டு, இறுதியில் நாட்டின் நலனுக்காகச் செயல்படுவதுதான் வாஜ்பாய் செயல்படும் விதம். அத்துடன், தனக்கு நெருக்கமானவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பதற்கான சிறந்த வழி என்பது அதற்கு எதிரான கருத்தை உருவாக்குவதே என்று வாஜ்பாய் நம்பினார்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜியுடன் வாஜ்பாயைச் சந்திக்க சென்ற சோனியா காந்தி (கோப்புப் படம்)இந்தியத் துருப்புகளை அனுப்புவதில்லை என முடிவு செய்த வாஜ்பாய்
இந்தப் பிரச்னையில் பிற கட்சிகளின் கருத்தையும் கேட்ட வாஜ்பாய், கம்யூனிஸ்ட்டுகள் மேலும் அதிகமாக எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவர்களை நுட்பமாகத் தூண்டினார்.
பின்னர், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தின் விவரங்களைப் பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்த சிவசங்கர் மேனன், “கூட்டத்தில் அமைதியாக இருந்த அத்வானியிடம் வாஜ்பாய், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அங்கிருந்த அனைவரும் இந்திய வீரர்களை அனுப்புவதற்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்தபோது, வாஜ்பாய் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பின்னர் கூட்டத்தில் முழு அமைதி நிலவியது” என்று கூறினார்.
“அமைதி நீண்டு கொண்டே செல்ல அனுமதித்த வாஜ்பாய், பிறகு, ‘இந்த நடவடிக்கையில் தங்கள் பிள்ளைகளை பறிகொடுக்கும் தாய்மார்களுக்கு நான் என்ன பதில் சொல்வது?’ என்று கேட்டார். கூட்டத்தில் மீண்டும் அமைதி நிலவியது. மௌனத்தைக் கலைத்த வாஜ்பாய், ‘இல்லை, நமது இளைஞர்களை அங்கு அனுப்ப முடியாது’ என்று தெரிவித்தார்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானிநட்புறவுடன் கூடிய வெளியுறவுக் கொள்கை
இந்த விஷயத்தில் முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவைப் பெற வேண்டும் என்று இந்தியா ஜூலை மாதம் வரை அமெரிக்காவிடம் கூறிக்கொண்டே இருந்தது. ஆனால் அது சாத்தியப்படவில்லை. தனது கைகள் கட்டப்பட்டிருப்பதாகக் கூறிய வாஜ்பாய், இந்தப் பிரச்னையிலிருந்து வெளியேற வழி ஒன்றையும் கண்டுபிடித்தார்.
அந்த ஆண்டின் இறுதியில், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தபோது, வாஜ்பாய் முதல் முறையாகப் பகிரங்கமாக, “நட்பு நாட்டில் நமது வீரர்கள் தோட்டாக்களுக்கு இரையாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.
“இதன் பொருள் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த வாஜ்பாய் விரும்பவில்லை என்பதல்ல. ஆனால் அமெரிக்கா சொல்லும் அனைத்திற்கும் இந்தியா உடன்படுவதை அவர் விரும்பவில்லை. அவருக்கு, உறவுகளில் சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர புரிதல் அவசியம்” என்று யஷ்வந்த் சின்ஹா எழுதினார்.
“கார்கில் போரின் போது, வாஜ்பாய் மற்றும் நவாஸ் ஷெரீப்பை வாஷிங்டனுக்கு வருமாறு பில் கிளிண்டன் அழைத்தபோது, அங்கு செல்ல மறுத்த வாஜ்பாய், இந்திய மண்ணில் பாகிஸ்தான் சிப்பாய் ஒருவர் இருந்தாலும்கூட அமெரிக்கா செல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார்.”
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சிக்கிம் பிரச்னையில் இணங்கிய சீனா
அமெரிக்காவிடம் இருந்து அழுத்தத்தை சந்தித்ததுபோலவே, ஒரு காலத்தில் சீனாவின் அழுத்தத்தையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2003 ஜூலையில், அடல் பிகாரி வாஜ்பாய் சீனாவுக்கு விஜயம் செய்தார். பேச்சுவார்த்தைகளுக்கான முக்கிய நிகழ்ச்சி நிரலில் வர்த்தகத்திற்காக நாது லா கணவாய் திறக்கப்பட்டது.
ரென்கிங்காங்கை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா ஏற்றுக்கொண்டது, ஆனால் நாது லாவை சிக்கிமின் ஒரு பகுதியாக, அதாவது இந்தியாவின் பகுதியாக ஏற்றுக்கொள்வதில் சீனா தயக்கம் காட்டியது. பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் பிற இந்திய தூதர்கள் சீனாவை சமாதானப்படுத்த தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாலும் அவை வெற்றிபெறவில்லை.
“பிரச்னையைத் தீர்க்கும் பொருட்டு, வாஜ்பாய் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டார். ஆனால், இது வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. இது குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, இந்தியாவின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார்” என்று அபிஷேக் செளத்ரி எழுதுகிறார்.
“இரு நாடுகளும் பரஸ்பரம் சந்தேகத்துடன் இருந்தன. எல்லையின் பிற பகுதிகளிலும் சர்ச்சைகள் நீடித்தன, ஆனால் விரைவில் சீனா சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக அதன் வரைபடங்களில் காட்டத் தொடங்கிவிட்டது.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் அப்போதைய சீனப் பிரதமர் வென் ஜியாபாவ் இந்தியா – பாகிஸ்தான் – சீனா பிரதமர்கள் உரையாடல்
பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தவும் வாஜ்பாய் முன்முயற்சிகளை மேற்கொண்டார். கார்கில் போர் இரு நாடுகளுக்கும் இடையில் சிக்கலாக இருந்தபோதிலும், அவர் தனது காஷ்மீர் பயணத்தின் போது எந்தவிதமான முன்தயாரிப்பும் இல்லாமல் பேசினார், “உங்கள் துக்கத்தையும் வலியையும் பகிர்ந்து கொள்ள வந்துள்ளோம்” என்று கூறினார்.
“காஷ்மீரி மக்கள் கடந்த காலத்தை மறந்து மனிதநேயம், ஜனநாயகம் மற்றும் காஷ்மீரியத் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே காலத்தின் தேவை” என்றும் அவர் கூறினார்.
மறுநாள், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில், “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிட்டதாக இன்று பாகிஸ்தான் அறிவித்தால், நான் நாளையே வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியை இஸ்லாமாபாத்திற்கு அனுப்புவேன்” என்று கூறினார்.
“வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதே தற்போது முக்கியமானது,” என்று அவர் இராக் போரைக் குறிப்பிட்டு கூறினார்.
இந்த அறிவிப்புக்குப் பத்து நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஜபருல்லா ஜமாலி வாஜ்பாயை அழைத்து, ரயில், பேருந்து மற்றும் விமான சேவைகளை மீட்டெடுப்பதாகவும், இரு நாடுகளின் உயர் ஸ்தானிகராலயங்களையும் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம் என்றும் சொன்னார். இங்கிருந்துதான், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு இடைவெளி முடிவுக்கு வரத் தொடங்கியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியதுபாகிஸ்தானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை
2004 ஜனவரியில் சார்க் உச்சி மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அறிவிக்கப்பட்டபோது, எல்லை தாண்டிய ‘பயங்கரவாதத்தை’ முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் முறையாக நிரூபித்தால்தான், தான் அதில் கலந்து கொள்ள முடியும் என்று வாஜ்பாய் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கான இந்திய உயர் ஆணையராகவும் பின்னர் வெளியுறவுச் செயலாளராகவும் பதவி வகித்த சிவசங்கர் மேனன், “வாஜ்பாய் அந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றால், அதன் முக்கியத்துவத்தை அந்த மாநாடு இழந்துவிடும் என்பதை முஷாரஃப் அறிந்திருந்தார். பாகிஸ்தான் இந்தியாவின் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை என்றால், வாஜ்பாய் அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை பாகிஸ்தானுக்கு அனுப்புவார் என்று இறுதி நிமிடம் வரை நாங்கள் அவரிடம் கூறிக்கொண்டே இருந்தோம். இறுதியில், பாகிஸ்தான் எங்கள் கோரிக்கைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது” என்றார்.
வாஜ்பாயின் பிஎம்டபிள்யூ கார் டெல்லியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விமான நிலையத்திலிருந்து அந்தக் காரில் அரை மணி நேரம் பயணம் செய்து அவர் ஹோட்டலுக்கு சென்றார். முஷாரப்புடனான உரையாடலில், இந்தியாவில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும், எனவே தேர்தல் ஆண்டில் எந்த அறிக்கையிலும் கையெழுத்திடுவது தனக்கு கடினமாக இருக்கும் என்றும் வாஜ்பாய் புகார் கூறினார்.
அதன் பின்னரே, தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ஜெனரல் முஷாரஃப் வழங்கினார்.
“9/11 தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீரில் பிரிவினைவாதத்தை வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக மாற்றுவதை மேற்கத்திய நாடுகள் ஆதரிக்கவில்லை. பாகிஸ்தான் தனது தரப்பில் இருந்து பயங்கரவாதத்திற்கான வாய்ப்புகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அந்நாட்டிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது. அதற்கு சில வாரங்களுக்கு முன்பு சீனாவுக்கு விஜயம் செய்தபோதும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முஷாரப்புக்கு அறிவுறுத்தப்பட்டது. சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் வாஜ்பாயின் பங்கு காரணமாகவே இது சாத்தியமானது” என்று அபிஷேக் செளத்ரி எழுதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய்கூட்டு வரைவில் இடம்பெற்றிருந்த ‘வரி’
கூட்டு அறிக்கையின் வரைவை இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் வரைவறிக்கையில் உள்ள ஒரு வரிக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்தது.
“பாகிஸ்தானின் நிலம் பயங்கரவாதத்தை ஆதரிக்கப் பயன்படுத்தப்படாது” என்ற வரியே ஆட்சேபத்திற்கு காரணமானது.
பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய உயர் ஆணையர் அஜய் பிசாரியா தனது ‘Anger Management’ என்ற புத்தகத்தில், “வரைவறிக்கையில் ‘பாகிஸ்தானிய நிலம்’ என்ற வார்த்தைகளுக்கு பதிலாக ‘பாகிஸ்தானிய கட்டுப்பாட்டில் உள்ள நிலம்’ என்று மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதன் பொருள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரும் அதில் சேர்க்கப்படவேண்டும்.” என்று எழுதியுள்ளார்.
“சிவசங்கர் மேனன் தாரிக் அஜீஸை அழைத்து இந்தியாவின் ஆட்சேபனை பற்றி கூறினார். இந்த ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டபோது, முஷாரப்பின் அருகில் அஜீஸ் அமர்ந்திருந்தார். இந்தியாவின் ஆட்சேபனையை கேட்ட முஷாரஃப் சில நொடிகளிலேயே பிரச்னையை சரிசெய்துவிட்டார்.”
“பின்னர் ரியாஸ் கோகரை அழைத்த அஜீஸ், இந்தியாவின் விருப்பப்படி ஆவணத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பஞ்சாபியில் கூறினார். இந்த சந்திப்பின்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆக்ரா மற்றும் லாகூர் கூட்டங்களில் சாதிக்க முடியாதவற்றை இந்தியா சாதித்தது.”
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு