Sunday, August 24, 2025
Home பிபிசிதமிழிலிருந்துரூ.1 கோடி டெர்ம் இன்சூரன்ஸ் கிளெய்ம் மறுக்க கூறப்பட்ட காரணம் – நுகர்வோர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? – BBC News தமிழ்

ரூ.1 கோடி டெர்ம் இன்சூரன்ஸ் கிளெய்ம் மறுக்க கூறப்பட்ட காரணம் – நுகர்வோர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? – BBC News தமிழ்

by ilankai
0 comments

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

‘உடல்ரீதியான பாதிப்புகளை மறைத்து பொய்யான உத்தரவாதம் அளித்ததாகக் கூறி மனுதாரரின் விண்ணப்பத்தை காப்பீட்டு நிறுவனம் நிராகரித்துள்ளது. இது நியாயமற்றது’ என சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

தனது கணவரின் டெர்ம் இன்சூரன்ஸ் தொகையான ரூ.1 கோடியை வழங்க மறுத்த தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிராக அவரது மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

banner

இந்த வழக்கில் என்ன நடந்தது? டெர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance) எடுக்கும்போது கவனிக்க வேண்டியது என்ன?

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

மனுவில், ‘சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் மூத்த மேலாளராக எனது கணவர் பணிபுரிந்து வந்தார். 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் காப்பீடு நிறுவனத்தில் 1 கோடி ரூபாய்க்கு டெர்ம் இன்யூரன்ஸ் எடுத்திருந்தார்’ எனக் கூறியுள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

48 வருடகாலம் பிரீமியம் செலுத்தக் கூடிய வகையில் காப்பீடு எடுக்கப்பட்டிருந்ததாக மனுவில் கூறியுள்ள அந்த பெண், ‘2022, ஜூலை மாதம் உடல்நலக் குறைவு காரணமாக எனது கணவரை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

காப்பீடு எடுத்து 2 ஆண்டுகளில் மரணம்

2022 ஆகஸ்ட் மாதம் தனது கணவருக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் கல்லீரல் செயலிழப்புக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டதாக, வழக்கின் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அதே ஆண்டு அக்டோபர் 3 அன்று காப்பீடு பெற்றவர் உயிரிழந்துவிட்டார். கல்லீரல் மற்றும் உறுப்புகள் செயலிழப்பு உடன் செப்டிக் ஷாக் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவக் குறிப்பு தெரிவித்துள்ளது.

2022 அக்டோபர் 28 அன்று டெர்ம் இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்கு உயிரிழந்தவரின் மனைவியான மனுதாரர் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரின் கோரிக்கையை 2023 பிப்ரவரி 7 அன்று தனியார் காப்பீட்டு நிறுவனம் நிராகரித்துவிட்டது.

‘காப்பீடு பெற்றவரின் உடல்நிலை நிலவரம் குறித்து காப்பீடு செய்வதற்கு முன்னர் முன்கூட்டியே தெரிவிக்காததால் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என தனியார் நிறுவனம் வழக்கின் வாதத்தில் தெரிவித்தது.

‘நோய் கண்டறியப்படவில்லை’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘ மனுதாரரின் விண்ணப்பத்தை காப்பீட்டு நிறுவனம் நிராகரித்துள்ளது நியாயமற்றது’ என சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.இதற்குப் பதில் அளித்த மனுதாரர் தரப்பு, ‘கணினி மென்பொருள் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக எனது கணவர் பணிபுரிந்து வந்தார். பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார். அதற்காக மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் உடல்நலக் குறைவு கண்டறியப்படவில்லை’ எனத் தெரிவித்தது.

இதுதொடர்பாக, 2019 ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணத்துக்காக காப்பீடு எடுத்தவர் மேற்கொண்ட ஆய்வக அறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார். ஆனால், இந்த வாதத்தை குறைதீர் ஆணையத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனம் மறுத்துள்ளது.

‘காப்பீடு வழங்குவதற்கு முன்னதாக காப்பீடு தாரர் தரப்பில் முன்மொழிவு படிவம் வழங்கப்பட்டது. அதில், அவரது உடல்நலன், கடந்தகால மருத்துவப் பரிசோதனைகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன’ என, தனியார் காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

காப்பீடு நிறுவனம் சொன்னது என்ன?

தனக்குள்ள உடல்ரீதியான பிரச்னைகள் குறித்து தெரிந்து வைத்துக் கொண்டு முக்கிய உண்மைகளை மறைத்து காப்பீட்டை பெற்றிருந்தார் எனவும் காப்பீட்டு ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு மாறாக காப்பீடு எடுக்கப்பட்டதாகவும் தனியார் காப்பீட்டு நிறுவனம் வாதிட்டது.

அந்தவகையில், காப்பீட்டுச் சட்டம் 1938, பிரிவு 45ன்படி மோசடியாகவும் உண்மையான தகவல்களை மறைத்தும் காப்பீடு பெற்றிருந்தால் அவர் செலுத்திய பிரீமியம் தொகையை மட்டுமே அவரின் குடும்பத்தினரால் பெற முடியும் எனவும் தனியார் காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

‘அந்தவகையில், 14.1.2023 அன்று காப்பீடு ரத்து செய்யப்பட்டது’ எனத் தெரிவித்த தனியார் காப்பீட்டு நிறுவனம், ‘அவர் செலுத்திய 1,71,930 ரூபாய் மட்டுமே இறுதித் தொகையாக வழங்கப்பட்டது’ எனவும் குறைதீர் ஆணையத்தில் கூறியது.

‘நியாயமற்றது… சேவைக் குறைபாடு’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘காப்பீடு தொகை பெறுவதில் சேவைக் குறைபாடு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே உரிய நிவாரணம் பெற முடியும்’இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி அமர்வு, ‘காப்பீடு எடுக்கும்போது நிரப்பியதாகக் கூறப்படும் அசல் முன்மொழிவு படிவத்தை தனியார் நிறுவனம் தங்கள் முன் சமர்ப்பிக்கவில்லை’ எனத் தெரிவித்தது.

‘அதனால் முக்கிய உண்மைகளை மறைத்துவிட்டார் என்ற முடிவுக்கு தங்களால் வர முடியாது’ எனக் கூறிய குறைதீர் ஆணையம், ‘காப்பீட்டு தொகையை மறுத்தது நியாயமற்றது மற்றும் காப்பீட்டு சேவையில் குறைபாட்டுக்கு வழிவகை செய்துள்ளது என்ற முடிவுக்கு வருகிறோம்’ எனத் தெரிவித்தது.

‘அந்தவகையில், திருப்பி தரப்பட்ட பிரீமியம் தொகையான 1,71,930 ரூபாய் தவிர்த்து 98,28,070 ரூபாயை காப்பீடுதாரரின் குடும்பத்துக்கு தனியார் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும்’ எனத் தீர்ப்பளித்தது.

‘கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து தற்போது வரை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்’ எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர சேவைக்குறைபாடு, மனவேதனை, துன்பம் ஆகியவற்றுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாயையும் வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயையும் வழங்குமாறு தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே நோய் இருந்ததாகக் கூறுவது காப்பீடு சட்டம் 1938, பிரிவு 45ன்படி பொருந்தாது எனக் கூறி குறைதீர் ஆணையம் நிராகரித்துள்ளதாகக் கூறுகிறார், நுகர்வோர் நலன் சார்ந்த வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் நடராஜன்.

“காப்பீடு தொகை பெறுவதில் சேவைக் குறைபாடு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே உரிய நிவாரணம் பெற முடியும்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் எடுப்பதில் ஆர்வம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாழ்க்கைக்கான காப்பீடாக டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் பார்க்கப்படுகிறது என்கிறார் சர்வமங்களா.”ஆயுள் காப்பீடுகளில் டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் என்பது மிகவும் பாதுகாப்பான திட்டம். இதனை எடுக்கும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான முறையில் பதில் அளிக்க வேண்டும்” எனக் கூறுகிறார், அகில இந்திய இன்ஸ்யூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென்மண்டல இணைச் செயலாளர் சர்வமங்களா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களாக இருந்தால் அதைப் பற்றி தெரிவிக்காமல் டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் எடுக்கின்றனர். நீரிழிவு காரணமாக உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும். இதனை வெளிப்படையாக தெரிவிக்கும்போது தொகையைப் (claim) பெறுவதில் சிக்கல் ஏற்படுவதில்லை” என்கிறார்.

மற்ற காப்பீடுகளைக் காட்டிலும் டெர்ம் இன்ஸ்யூரன்ஸுக்கு அதிக கவனம் கொடுக்கப்படுவதாகக் கூறிய அவர், “கடந்த பத்து ஆண்டுகளாக ஐ.டி உள்பட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் இதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்” எனக் கூறுகிறார்.

“காப்பீடு எடுத்த நபருக்கு எதாவது நேர்ந்தால் முழு தொகையும் குடும்பத்தினருக்கு கிடைத்துவிடும். ஆயுளை காப்பீடு செய்யும் திட்டமாக இது உள்ளது. வாழ்க்கைக்கான காப்பீடாகவும் பார்க்கப்படுகிறது” என்கிறார் சர்வமங்களா.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’1 கோடி ரூபாய்க்கு எடுப்பதில் ஆர்வம்’

ஒருவரின் மாத சம்பளத்தில் எவ்வளவு தொகை வரை செலுத்த முடியும் என்பதை அடிப்படையாக வைத்து 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை எல்.ஐ.சி உள்பட இருபதுக்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கின்றன.

உதாரணமாக, ஒருவர் தனது 25 வயதில் மாதம்தோறும் 786 ரூபாயை செலுத்துகிறார் என்றால், அவர் 58 வயதில் இறந்தால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும் என தனியார் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐயின் இணையதளம் கூறுகிறது.

இதேபோன்று ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவகையில் டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் வரையறுக்கப்பட்டுள்ளது. “குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய்க்கான காப்பீடு எடுப்பதையே இளம் பருவத்தினர் விரும்புகின்றனர். அதற்கேற்றபடி டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் உள்ளன” எனவும் சர்வமங்களா குறிப்பிட்டார்.

ஐஆர்டிஏஐ கூறுவது என்ன?

படக்குறிப்பு, சென்னை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார்”காப்பீட்டுத் தொகையை அளிப்பதில் பொதுக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியில் முறையாக தரப்படுகிறது. இங்கு கோரிக்கையை நிராகரிப்பது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது” என்கிறார், சென்னை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார்.

காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஐஆர்டிஏஐ (Insurance Regulatory and Development Authority of India) அமைப்பின் தரவுகளின்படி, 30 நாட்களுக்குள் 95 சதவீதம் அளவுக்கு காப்பீட்டு பணம் தரப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் எல்ஐசி மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 96.82 சதவீத காப்பீடுதாரர்களுக்கு 30 நாட்களுக்குள் பணத்தை அளித்துள்ளதாகவும் ஐஆர்டிஏஐ கூறியுள்ளது.

2023-24 காலகட்டத்தில் 8,29,318 காப்பீடுதாரர்களின் கோரிக்கையில் 7,99,612 பேருக்கு தொகையை எல்.ஐ.சி அளித்துள்ளது. இது 96.42 சதவீதம் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

இறப்பு தொடர்பாக தொகையைத் திரும்பப் பெறுவதில் 99 சதவீதம் அளவுக்கு தனியார் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தொகையை அளித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“காப்பீடு எடுத்த பிறகு உடல்நலனில் ஏற்படும் குறைகளை பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி பார்ப்பதில்லை” எனக் கூறுகிறார், சென்னை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ்குமார்.

டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் தொகை அதிகமானதாக உள்ளதால், கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணங்களைத் தேடுவது சில தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் வழக்கமாக உள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

‘நிவாரணம் பெறுவது எளிது’

தனியார் நிறுவனங்களில் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் சேவைக்குறைபாடு ஆகியவற்றுக்குத் தீர்வு அளிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

“சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கும்போது நிவாரணம் பெறுவது எளிதாக இருக்கும்” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் நடராஜன்.

“டெர்ம் இன்ஸ்யூரன்ஸ் எடுக்கும்போது மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான விதிமுறைகளின்படி காப்பீடு எடுக்கும்போது பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like