Sunday, August 24, 2025
Home பிபிசிதமிழிலிருந்துகாஸாவில் பசியும் பட்டினியும் தாண்டவமாட இஸ்ரேல் எவ்வாறு காரணம்? – BBC News தமிழ்

காஸாவில் பசியும் பட்டினியும் தாண்டவமாட இஸ்ரேல் எவ்வாறு காரணம்? – BBC News தமிழ்

by ilankai
0 comments

காஸாவில் பசியும் பட்டினியும் தாண்டவமாட இஸ்ரேல் எவ்வாறு காரணம்?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, காஸாவில் பஞ்சம் மோசமாக பரவி வருகிறதுஎழுதியவர், எமிர் நாடர்பதவி, பிபிசி செய்திகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஸாவில் உணவுப் பஞ்சம் மோசமாக பரவி வருகிறது.

banner

எல்லைக்கு வெளியே நூற்றுக்கணக்கான உதவி லாரிகள் நின்றுகொண்டிருக்கின்றன, ஆனால் அவை உள்ளே செல்ல முடியாமல் சிக்கியுள்ளன.

இந்த நிலை உருவானது எப்படி?

உலகளவில் பசியை கண்காணிக்கும் முக்கிய அமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC), ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் செயல்படுகிறது. அந்த அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின்படி, காஸாவில் உள்ள பாலத்தீனர்களில் நான்கில் ஒருவர், அதாவது சுமார் 5 லட்சம் பேர், கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறியப்படுகிறது .

இந்த தகவல் பல காரணங்களால் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதிலும் முக்கியமாக, இந்த சூழல் “முழுவதும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது” என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

காஸாவுக்குள் உணவுப் பொருட்கள் செல்லும் வழியை இஸ்ரேல் “திட்டமிட்டு தடுக்கிறது” என்று தற்போது பல்வேறு உதவி அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன.

காஸா நகரப் பகுதியில் வாழும் மக்கள் தற்போது “பட்டினி, வறுமை, மரணம்” போன்ற கடுமையான பஞ்சநிலையை எதிர்கொள்கிறார்கள் என்று ஐபிசி அறிக்கை கூறுகிறது.

பசியும், பட்டினியும் வேகமாகப் பரவி வருகிறது, தற்போதைய நிலை தொடர்ந்தால் செப்டம்பரில் காஸாவின் பல பகுதிகளிலும் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் அது எச்சரிக்கிறது.

இந்த அறிக்கை மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது:

பட்டினி: குறைந்தது 5 வீடுகளில் 1 வீடு உணவுக்கே கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.ஊட்டச்சத்து குறைபாடு: சுமார் 3 குழந்தைகளில் 1 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு விகிதம்: ஒவ்வொரு 10,000 பேரில் குறைந்தது 2 பேர் தினமும் நேரடி பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் உயிரிழக்கின்றனர்.பொதுவாக இந்த மூன்று “வரம்புகளில்” இரண்டு எட்டப்பட்டால் பஞ்சம் நிலவுகிறது என ஐபிசி அறிவிக்கிறது. ஆனால் காஸாவில் மூன்றும் எட்டப்பட்டுவிட்டதாக அது மதிப்பீடு செய்துள்ளது.

“இறப்புக்கான” காரணி தற்போதைய தரவுகளில் தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் கண்காணிப்பு அமைப்புகள் செயலிழந்துள்ளன. பல மரணங்கள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம் என்றும் ஐபிசி நம்புகிறது. இருந்தாலும் கிடைத்துள்ள சான்றுகள் மற்றும் நிபுணர்களின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு “இறப்பு” காரணியும் பஞ்ச நிலையை உறுதிப்படுத்துவதாக ஐபிசி முடிவுக்கு வந்துள்ளது.

இந்த அறிக்கை வெளியான சமயத்தில், ஹமாஸ் நிர்வகிக்கும் காஸா சுகாதார அமைச்சகம், ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் இரண்டு மரணங்களைப் பதிவு செய்தது.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 112 குழந்தைகள் உட்பட 273 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் பஞ்சம் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டை பலமுறை மறுத்துள்ளார்.

பசி ஏற்பட்டதற்கு உதவி அமைப்புகளும் ஹமாஸும் தான் காரணம் என அவர் கூறியுள்ளார். காஸா எல்லையில் நூற்றுக்கணக்கான உதவி லாரிகள் நின்றுகொண்டிருக்க, அவற்றை எடுத்துச் செல்ல ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் முன்வரவில்லை என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

‘முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது’

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி காசா நகரில் உள்ள அல்-ரான்டிசி மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது.பல வாரங்களாக, வயிறு வீங்கியும் எலும்புகள் தெரியும் அளவுக்கும் பட்டினியால் வாடும் குழந்தைகளின் படங்களை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால் பஞ்சம் வரும் எச்சரிக்கை அறிகுறிகள் நீண்ட நாட்களாகவே இருந்தன என பலர் கூறுகின்றனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக காஸாவில் நடந்துவரும் போர், பாலத்தீனர்களுக்கு உணவு கிடைப்பதை மிகவும் சிக்கலாக்கியுள்ளது. இஸ்ரேல் காஸாவிற்குள் செல்லும் பொருட்களுக்கு நீண்ட காலமாகவே கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய கொடிய தாக்குதலுக்குப் பிறகு, அந்தக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையானது.

ஆனால் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இஸ்ரேல் காஸாவிற்குள் பொருட்கள் செல்லும் வழியை மூன்று மாதங்களுக்கு முற்றிலும் தடை செய்தபின் நிலைமை வேகமாக மோசமடைந்தது. சர்வதேச அழுத்தம் அதிகரித்த பின், மே மாத இறுதியில் சில பொருட்களை மீண்டும் அனுமதிக்கத் தொடங்கியது.

அதே சமயம், ஐ.நா. தலைமையிலான பழைய உணவு விநியோக முறைக்குப் பதிலாக காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்ற அமெரிக்க அமைப்பு தலைமையிலான புதிய விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் கீழ், ராணுவம் கண்காணிக்கும் பகுதிகளில் நான்கு விநியோக மையங்கள் மட்டுமே உள்ளன. அங்கு செல்ல பாலத்தீனர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணம் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறது. இதனால், முன்பு ஐ.நா. இயக்கிய 400 சமூக மையங்கள் இப்போது நீக்கப்பட்டுள்ளன.

உணவைப் பெறுவது பாலத்தீனர்களுக்கு உயிருக்கு ஆபத்தான ஒன்றாகிவிட்டது.

பட்டினி அல்லது மரணம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது என அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏனெனில், காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களில் உதவி பெற முயற்சிக்கும் போது, மக்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.

மே மாத இறுதியில் இருந்து காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களுக்கு அருகில் குறைந்தது 994 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. பதிவு செய்துள்ளது.

இஸ்ரேலிய படைகள் பெரும்பாலானோரைக் சுட்டுக் கொன்றதாக ஐ.நா. கூறுகிறது. இது நேரில் கண்ட சாட்சிகளாலும், காஸா மருத்துவர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

இஸ்ரேல் கண்காணிக்கும் இந்த புதிய முறையின் கீழ், காஸாவில் பஞ்சம் மேலும் மோசமாக பரவியுள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்தோனேசிய ஹெர்குலஸ் விமானம் காஸா பகுதியின் மீது மனிதாபிமான உதவிப் பொருட்களை வீசுகிறது.அதிக உணவுப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்ததால், ஜூலை மாத இறுதியில் தினமும் உதவிப் பொருட்கள் கொண்டு வந்த அதிகமான லாரிகளை இஸ்ரேல் காஸாவிற்குள் அனுமதிக்கத் தொடங்கியது. சண்டையை தற்காலிகமாக நிறுத்தும் “தந்திரோபாய இடைவெளிகளை” அறிவித்து, உதவி லாரிகள் அந்தப் பகுதியை எளிதாக கடக்க அனுமதித்தது.

சமீப வாரங்களில் அதிக உதவி பொருட்கள் வந்ததால், சந்தைகளில் சில பொருட்களின் விலை ஓரளவு குறைந்தது. இருந்தாலும் பல பாலத்தீனர்களுக்கு அவை இன்னும் மிக உயர்ந்த உயர்ந்தவையாகவே உள்ளன. சில சமயங்களில் ஒரு கிலோ மாவு 85 டாலரைத் தாண்டியது, ஆனால் அந்த விலை இப்போது குறையத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேல், காஸாவுக்குள் உணவுப் பொருட்கள் செல்ல சில கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தாலும், அவற்றை சேகரித்து விநியோகிப்பதில் இன்னும் பல தடைகள் உள்ளன என்று ஐ.நா.வும் மனிதாபிமான அமைப்புகளும் கூறுகின்றன. மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் 600 லாரிகள் காஸாவிற்குள் நுழைய வேண்டும், ஆனால் தற்போது அதில் பாதிக்கும் குறைவானவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இஸ்ரேல் விமானம் மூலம் உதவிகளை வீச அனுமதிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் பெரிதும் பலனளிக்காத, ஆபத்தான அந்த முறை, உண்மையான தீர்விலிருந்து கவனத்தை சிதறடிக்கிறது என மனிதாபிமான அமைப்புகள் விமர்சிக்கின்றன.

அதேபோல, பசி நெருக்கடிக்கு ஹமாஸ் தான் காரணம் என இஸ்ரேல் கூறிய குற்றச்சாட்டும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் உள்துறை அறிக்கை உட்பட பல்வேறு ஆய்வுகள், ஹமாஸ் உதவிகளை திட்டமிட்டு திருப்பி அனுப்பியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளன.

காஸாவிற்குள் வரும் உதவி லாரிகள் சில நேரங்களில் கொள்ளையடிக்கப்படுவது உண்மைதான். ஆனால், இந்தக் கொள்ளைகள் பெரும்பாலும் உணவுக்காக தவிக்கும் பொதுமக்களாலும், பின்னர் லாபம் நோக்கி மறுவிற்பனை செய்ய முயலும் சில குழுக்களாலும் தான் நடைபெறுகின்றன என மனிதாபிமான அமைப்புகள் கூறுகின்றன.

காஸாவில் பசி மற்றும் பஞ்சம் அதிகரிக்காமல் இருக்க, சாலை வழியாக அதிக அளவிலான உதவிப் பொருட்கள் தொடர்ந்து நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையைத் தான் பல மாதங்களாக, உதவி அமைப்புகள் முன்வைத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இன்னும் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இஸ்ரேலின் பதில்

தற்போது பல இஸ்ரேல் அரச அதிகாரிகள் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) வெளியிட்ட அறிக்கையை நிராகரித்துள்ளனர்.

“ஹமாஸின் போலி பிரசாரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட கற்பனையான அறிக்கையை” ஐபிசி வெளியிட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

காஸா எல்லையை நிர்வகிக்கும் இஸ்ரேலிய ராணுவ அமைப்பான ‘கோகாட்’, இந்த அறிக்கையை “ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிலிருந்து வந்த பாதி தரவுகளின் அடிப்படையில் உருவான, தவறான மற்றும் ஒரு பக்க சார்புடைய அறிக்கை” எனக் கூறியுள்ளது.

“ஐபிசி தன் சொந்த உலகளாவிய தரநிலையை மாற்றியுள்ளது எனவும், பஞ்சத்தை எதிர்கொள்பவர்களின் அளவை 30% இலிருந்து 15% ஆக குறைத்துள்ளது எனவும், இறப்பு விகிதம் என்ற இரண்டாவது அளவுகோலை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது” என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

ஐபிசி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, முன்னர் பயன்படுத்தப்பட்ட, நிலையான தரநிலைகளையே இப்போது பயன்படுத்துகிறோம் என விளக்கியது.

ஐபிசி “ஹமாஸின் தரவை” பயன்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுவது, காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய சில செய்திகள் ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்திலிருந்து வருவதைக் குறிக்கிறது.

ஆனால், போர் முழுவதும் அந்த அமைச்சகத்தின் இறப்பு மற்றும் காயம் தொடர்பான தரவுகள் நம்பகமானதாக இருப்பதாக பல தரப்புகளும் கருதுகின்றன.

இந்த அறிக்கைக்கு ஐ.நா. நிறுவனங்களும் சர்வதேச தலைவர்களும் வலுவான பதில்களை அளித்துள்ளனர்.

“ஆக்கிரமிப்பு சக்தியாக இருக்கும் இஸ்ரேல், சர்வதேச சட்டத்தின் கீழ் தெளிவான பொறுப்புகளை வகிக்கிறது. அதில் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கும் கடமையும் அடங்கும். இந்த நிலைமை தண்டனையின்றி தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது”என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ் கூறினார்.

காஸாவிற்குள் உதவிகள் நுழைவதை இஸ்ரேல் “திட்டமிட்டு தடுத்ததே, பஞ்சத்தின் நேரடி காரணம் என்று ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் குறிப்பிட்டார்.

“காஸாவிற்கு தேவையான அளவு உதவியை அனுமதிக்க இஸ்ரேல் அரசு மறுத்ததே, இந்த மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவுக்குக் காரணம். இது ஒரு தார்மீக விதிமீறல்” என பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி தெரிவித்தார்.

“பசியை போரில் ஓர் ஆயுதமாகக் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம். அதன் விளைவாக நிகழும் மரணங்கள் கூட, திட்டமிட்ட கொலை என்ற போர்க்குற்றத்தின் கீழ் வரக்கூடும்”என வெள்ளிக்கிழமை, ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் குறிப்பிட்டார்.

காஸா நகர் மீது இஸ்ரேல் படையெடுப்பு

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஐபிசி பஞ்சம் நிலவுகிறது என அறிவித்துள்ள காஸா நகரத்தின் மீது சர்ச்சைக்குரிய படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் நடத்துவதற்காக, இந்த வாரம் பத்தாயிரக்கணக்கான ரிசர்வ் படையினரை வரவழைப்பதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

ஹமாஸை தோற்கடிக்கவும், போரை முடிவுக்கு கொண்டு வரவும், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்கவும், காஸா நகரத்தை கைப்பற்றுவது தான் சிறந்த வழி என்று நெதன்யாகு கூறுகிறார்.

இந்த படையெடுப்பால், காஸா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பாலத்தீனர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

அந்தப் பகுதியை காலி செய்யத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு, மருத்துவர்கள் மற்றும் உதவி அமைப்புகளுக்கு, இஸ்ரேல் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

யுனிசெஃப், உலக உணவுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகள் ஒன்றாக வெளியிட்ட அறிக்கையில், “இந்த தாக்குதல், ஏற்கனவே பஞ்சம் பாதித்துள்ள பொதுமக்களுக்கு மேலும் பேரழிவை ஏற்படுத்தும்” எனக் கூறப்பட்டுள்ளது.

“நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் போன்ற பலரும் வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது” என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like