Sunday, August 24, 2025
Home tamil newsநல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன – வடக்கு ஆளுநர் கவலை! – Global Tamil News

நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன – வடக்கு ஆளுநர் கவலை! – Global Tamil News

by ilankai
0 comments

எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும் தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப்போலத்தான் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பையும் நான் பார்க்கின்றேன். காலத்துக்கு தேவையான அமைப்பு. பொருத்தமான இடத்திலிருந்து பொருத்தமானவர்களால் தொடக்கப்பட்டு நடைபோடுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வும் ஆண்டு விழாவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (23.08.25) அமைப்பின் இணைத்தலைவரும் முன்னாள் பிரதம செயலருமான இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பண்பாட்டு கலைக்கூடலின் மாணவர்களால் பண்ணிசை, கோலாட்டம் என்பன நடத்தப்பட்டன.

அத்துடன் யாழ்ப்பாணம், வலிகாமம் வலயப் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

banner

அத்துடன், முனைவர் திருநாவுக்கரசு கமலநாதனின் ‘பொழிலும் பொலிவும்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. காலைக்கதிர் பத்திரிகைக்கு செல்வழி நயனம் விருதும் நிகழ்வில் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றுகையில்,

ஆன்மீகத்தில் ஈடுபாடு குறைந்து செல்வது மாத்திரமல்லாது ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூட குறைந்துள்ளது. ஆன்மீகம் வாழ்வியலுக்குத் தேவை. இன்று நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடம் செய்துள்ள பணி பாராட்டுக்குரியது.

5 ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வருகின்றார்கள். இளம் பிள்ளைகளை இதில் அதிகளவு ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள்.

நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நல்லூர் கந்தசுவாமி கோயிலே உலகம் எங்கு அடையாளப்படுத்தப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்தோம் என்று பெருமை கொள்ளுவதற்கும் அந்த நல்லூரே காரணமாக இருக்கின்றது.

இன்று சைவத்துக்கும், தமிழுக்கும் பல தரப்புக்களாலும் உள்ளக, வெளியக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அந்த அழுத்தங்களிலிருந்து சைவத்தையும், தமிழையும் பாதுகாத்துக் கொள்வதற்கு இவ்வாறான அமைப்புக்கள் காலத்தின் தேவையாக சேவையாற்றுகின்றன, என ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சா.சுதர்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது.

பிரதேச, மாவட்ட, மாகாண கலாசார விழாக்கள் பல கலைஞர்களுக்கான மேடை வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுடன் அதிகளவு கலைஞர்களை குறிப்பாக இளம் கலைஞர்களை மேடையேற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வலி. மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா அராலி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் கலாசார நடனங்களுடன் விழா நடைபெற்ற மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரால் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் 5 பேருக்கு காலைவாரிதி விருதும் வழங்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய ஆளுநர்,

சிறுவர்களாக நாங்கள் இருந்த காலத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெறும். இன்று அவ்வாறு நடைபெறுவதைக் காண்பது அரிதாக உள்ளது. நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதை நாம் எடுத்துச் செல்லவேண்டும். எங்களுக்குரிய தனித்துவமான அம்சங்களை ஊடுகடத்த வேண்டும்.

இந்தப் பண்பாட்டு விழா ஊர் மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது. அதிகளவு மக்கள் ஆதரவளித்திருக்கின்றார்கள். நாங்கள் கலாசார ஊர்த்திப் பவனியுடன் அழைத்து வருகின்றபோது ஊர்மக்கள் அபரிதமான ஆதரவு வழங்கியதை நேரில் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறுதான் விழாக்கள் நடத்தப்படவேண்டும்.

கலை, விளையாட்டு இரண்டிலும் இளம் சந்ததியின் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் கவனங்கள் சிதறவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும். எங்களால் முடிந்தவரையில் இதை நாம் செய்துகொள்வோம் என ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், வலி. மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ச.ஜயந்தன் சிறப்பு விருந்தினராகவும், யாழ். மாவட்டச் செயலக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் வி.சுகுணாலினி, அராலி இந்துக் கல்லூரி அதிபர் ந.சிவானந்தராஜா மற்றும் சிற்பக் கலைஞர் தி.விஜயசிறி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

You may also like