Sunday, August 24, 2025
Home பிபிசிதமிழிலிருந்துஅஷ்ரஃப் பஹ்லவி: பெருஞ்செல்வத்துடன் வாழ்ந்த இரான் இளவரசிக்கு துயர முடிவு ஏன்? ஒரு இஸ்லாமிய இளவரசியின் கதை – BBC News தமிழ்

அஷ்ரஃப் பஹ்லவி: பெருஞ்செல்வத்துடன் வாழ்ந்த இரான் இளவரசிக்கு துயர முடிவு ஏன்? ஒரு இஸ்லாமிய இளவரசியின் கதை – BBC News தமிழ்

by ilankai
0 comments

ஹிஜாப் துறந்து அரசியலில் கோலோச்சிய இஸ்லாமிய நாட்டு இளவரசியின் துயர முடிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இளவரசி அஷ்ரஃப் பஹ்லவி இரான் ஷாவின் இரட்டை சகோதரி ஆவார்.எழுதியவர், வக்கார் முஸ்தபாபதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்24 ஆகஸ்ட் 2025, 02:58 GMT

புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்

banner

“நீ உண்மையில் ஒரு மனிதனா அல்லது எலியா?” – இரானின் ஷாவிடம் இந்தக் கேள்வியை கேட்டது அவரது இரட்டை சகோதரி இளவரசி அஷ்ரஃப் பஹ்லவி.

மே 1972இல் வெளியான ‘சென்டர்ஸ் ஆப் பவர்’ என்ற அமெரிக்க உளவுத்துறை ஆவணத்தின்படி, அமெரிக்க தூதர், இரானின் ஷாவை அரசியலில் இருந்து விலகி தேசிய ஒற்றுமையின் அடையாளமாக மாறுமாறு அறிவுறுத்தியபோது, ​​அவர் புன்னகைத்தபடி, “நான் உண்மையில் மனிதனா அல்லது எலியா என்று நேற்று தான் அஷ்ரஃப் என்னிடம் கேட்டார்” என்று கூறினார்.

“இளவரசி அஷ்ரஃப் தனது சகோதரனைத் திட்டிய சம்பவம் ஒரு பேசுபொருளாக மாறியது.” என ஸ்டீபன் கின்சர் தனது ‘ஆல் தி ஷா’ஸ் மென்’ என்ற புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இரானை ஆண்ட பஹ்லவி வம்சத்தை ரேசா பஹ்லவி நிறுவினார். ரேசா பஹ்லவி, டிசம்பர் 15, 1925 அன்று இரானின் ஷாவாக முடிசூட்டப்பட்டார்.

இளவரசி அஷ்ரஃப் முலுக், அக்டோபர் 26, 1919 அன்று ரேசா பஹ்லவி மற்றும் தாஜுல்-முலுக் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவரது சகோதரர் முகமது ரேசா பிறந்து ஐந்து மணி நேரம் கழித்து அவர் பிறந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இருப்பினும், அந்த நேரத்தில், இளவரசியின் தந்தை இரானின் ராணுவத் தளபதியாக மட்டுமே இருந்தார். ரேசா பஹ்லவிக்குப் பிறகு, அவரது மகனும் இளவரசியின் சகோதரருமான முகமது ரேசா இரானின் ஷா ஆனார்.

அமெரிக்க உளவுத்துறை முகமையான சிஐஏவின் ஒரு அறிக்கையில், ரேசாவுக்கு முடிவெடுக்கும் திறன் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த அறிக்கை முதன்முதலில் 2000ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்டது.

இந்த ஆவணத்தில், ரேசா பஹ்லவியின் ஆளுமையில் இருந்த அனைத்து குணங்களும் அவரது மகன்களுக்குக் கடத்தப்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ஹிஜாப் அணிவதற்கு எதிரானவர்’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரம்பரிய ஹிஜாபை கைவிட்ட முதல் இரானிய பெண்களில் அஷ்ரஃப் பஹ்லவியும் ஒருவர்.அந்த ஆவணத்தின்படி, முகமது ரேசா அரியணை ஏறிய ஆரம்ப நாட்களில், அவரது சொந்த குடும்பத்தினரிடமிருந்து அவருக்குரிய மரியாதை கிடைக்கவில்லை. அவரது தாயார் கூட அவரை இழிவாகப் பார்த்தார்.

“முகமது ரேசாவின் தாய், அவருக்கு எதிராக சதி செய்ததாகவும், தனது மற்றொரு மகன் அலியை ஒரு சிறந்த வாரிசாக முன்னிறுத்தியதாகவும் செய்திகள் வந்தன.”

வாஷிங்டன் போஸ்ட்டின் பிரையன் மர்ஃபி கூற்றுப்படி, 1930 களின் முற்பகுதியில் பாரம்பரிய ஹிஜாபை கைவிட்ட இரானிய பெண்களில் அஷ்ரஃப் பஹ்லவி, அவரது மூத்த சகோதரி ஷம்ஸ், அவர்களது தாயார் ஆகியோர் முதன்மையானவர்கள்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கூற்றுப்படி, 1951 முதல் 1953 வரை இரானின் பிரதமராக இருந்த முகமது மொசாடெக், பிரிட்டிஷ் ஆக்கிரமித்த எண்ணெய் வளங்களை தேசியமயமாக்கியபோது, ​இரானில் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி எழுந்தது.

“மொசாடெக் மற்றும் ஷா இடையே நடந்து வரும் அதிகாரப் போட்டியில், ஆகஸ்ட் 1953இல், மொசாடெக்கை ஷா அதிகாரத்திலிருந்து அகற்ற முயன்றபோது, ​​மொசாடெக்கின் ஆதரவாளர்கள் இரானின் வீதிகளில் இறங்கி ஷாவையும் அவரது சகோதரி அஷ்ரஃப் பஹ்லவியையும் நாட்டை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தினர்.”

“ஆனால் அடுத்த சில நாட்களுக்குள் மொசாடெக்கின் எதிரிகள், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் முகமைகளின் உதவியுடன், ஒரு ராணுவ சதி மூலம் மொசாடெக் அரசாங்கத்தை தூக்கியெறிந்து, ஷாவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.”

இரானில் 1953 ஆம் ஆண்டு நடந்த இந்த அரசியல் நிகழ்வு ‘ஆபரேஷன் அஜாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

‘ஆபரேஷன் அஜாக்ஸ்’இல் இளவரசியின் பங்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரசியல் எதிரிகள் இளவரசி அஷ்ரஃப் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர், அதை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.இளவரசி அஷ்ரஃப் பஹ்லவி ஆபரேஷன் அஜாக்ஸில் முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை முகமைகள் கிளர்ச்சியைத் தொடங்க அனுமதிக்க, முகமது ரேசா ஷாவை சமாதானப்படுத்தியது அவர் தான்.

ஷா ஆரம்பத்தில் இந்த நடவடிக்கையை முழுமையாக எதிர்த்தார், தனது ஒப்புதலை வழங்க சிறிது காலத்திற்கு மறுத்துவந்தார். 1953ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சிஐஏ ஏஜென்ட்கள் அஷ்ரஃபை அவரது சகோதரருடன் பேசுமாறு கேட்டுக்கொண்டனர்.

வரலாற்றாசிரியர் ஸ்டீபன் கின்சர் தனது ‘ஆல் தி ஷா’ஸ் மென்’ என்ற புத்தகத்தில், “அந்த நேரத்தில் அஷ்ரஃப், பிரான்சின் கேசினோக்கள் மற்றும் இரவு விடுதிகளில் பொழுதைக் கழித்து, வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருந்தார். அங்குதான் ‘ஆபரேஷன் அஜாக்ஸ்’ நடவடிக்கைக்கு பொறுப்பான சிஐஏ அதிகாரி கெர்மிட் ரூஸ்வெல்ட்டின், முக்கியமான ஏஜென்ட் அசாதுல்லா ரஷிதியன், அஷ்ரஃபைச் சந்திக்க வந்தார்.”

“ஆரம்பத்தில் இந்தத் திட்டத்தை அஷ்ரஃப் எதிர்த்தார், ஆனால் மறுநாள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏஜென்ட்கள் குழு இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தினர். மூத்த பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி நார்மன் டிரிபிஷர் தலைமையில் அந்தக் குழு செயல்பட்டது, அவர் ஒரு மிங்க் கோட் உடை மற்றும் ஒரு பணப்பையை பரிசுகளாகக் கொண்டு வந்தார்.”

நார்மனின் கூற்றுப்படி, அந்த பரிசுகளைப் பார்த்தவுடன், “அஷ்ரஃபின் கண்கள் பிரகாசித்தன, அவரது எதிர்ப்பு முடிவுக்கு வந்தது.”

அஷ்ரஃப் பஹ்லவி தனது சுயசரிதையான ‘ஃபேசஸ் இன் எ மிரரில்’ எழுதியுள்ள அறிக்கையின்படி, பிரான்சில் (நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்து) இருந்து இரான் திரும்புவதற்கு வசதியாக அவருக்கு ஒரு காசோலை (Blank cheque) வழங்கப்பட்ட போதிலும், அவர் அந்தப் பணத்தை மறுத்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் இரானுக்குத் திரும்பினார்.

ஆனால், 1953ஆம் ஆண்டு கிளர்ச்சி அஷ்ரஃப் பஹ்லவியின் தலையீடு இல்லாமலே நடந்திருக்கலாம் என்று சில வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். மத்திய கிழக்கு ஆய்வுகள் தொடர்பான சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் எழுத்தாளர் மார்க் கெசோரெவ்ஸ்கி பின்வருமாறு விவரிக்கிறார்.

“கிளர்ச்சி செய்வதற்கான முடிவில் ஷாவிற்கு பங்கில்லை. அதன் வழிமுறை குறித்து அவரிடம் ஆலோசிக்கப்படவில்லை, மொசாடெக்கிற்கு யார் மாற்று என்றும் அவரிடம் கேட்கப்படவில்லை”

கெசோரெவ்ஸ்கியின் கூற்றுப்படி, “இந்த ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மொசாடெக்கை பலவீனப்படுத்தி பதவியில் இருந்து அகற்றுவதற்காக செய்த ஒரு சதியாகும். இதில் ஷா ஒரு அடையாளச் சின்னமாக மட்டுமே இருந்தார்.”

தேசத்துரோகக் குற்றத்திற்காக மொசாடெக்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை முடித்த பிறகு அவர் தனது வாழ்நாள் முழுவதையும் வீட்டுக் காவலில் கழிக்க வேண்டியிருந்தது.

இரான் அதன் எண்ணெய் ஆலைகள் மீது பெயரளவிலான சுயாட்சியைத் தக்க வைத்துக் கொண்டாலும், 1954ஆம் ஆண்டின் ஒரு ஒப்பந்தத்தின் கீழ், எண்ணெய் வருவாயில் 50 சதவீதம் ஒரு சர்வதேச கூட்டமைப்புக்குச் சென்றது. எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையின் மீது முழு கட்டுப்பாட்டை அந்த சர்வதேச கூட்டமைப்பே கொண்டிருந்தது.

இளவரசி அஷ்ரஃப் பஹ்லவியின் வாழ்க்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஷ்ரஃப் பஹ்லவிக்கு இளமைப் பருவத்தில் தன்னம்பிக்கை குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.அஷ்ரஃப் உயர்கல்வியைத் தொடர விரும்பினார், ஆனால் 1937இல் 18 வயதில் அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இளவரசி அஷ்ரஃப் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார், ஆனால் மூன்றும் விவாகரத்தில் முடிந்தன. அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.

1980ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “நான் ஒருபோதும் ஒரு நல்ல தாயாக இருந்ததில்லை, ஏனென்றால் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாத அளவுக்கு என் வாழ்க்கை முறை இருந்தது” என்று கூறினார்.

இளவரசி அஷ்ரஃப் மீது அவரது அரசியல் எதிரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான அவரது முடிவுகளும் அடிக்கடி விமர்சிக்கப்பட்டன.

அமெரிக்க ஆவணங்களின்படி, பல ஆண்டுகளுக்கு அரச நீதிமன்றம் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்து ஊழல்களிலும் இளவரசி அஷ்ரஃபிற்கு முக்கிய பங்கு இருந்தது.

ஊழல் குற்றச்சாட்டுகள்

அஷ்ரஃப் பஹ்லவி மீதும் நிதி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது, ஆனால் அவரது கூற்றுப்படி இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காரணம் அவர் ‘பல அமைப்புகளின் நிர்வாகத்தில் தீவிரமாக பங்காற்றியது’.

அஷ்ரஃபை பொறுத்தவரை, மொசாடெக் அவரை பாரிஸுக்கு நாடு கடத்திய போது அவருக்கு குறைந்த நிதி ஆதாரங்களே இருந்தன. ஆனால் பிற்காலத்தில் அவர் ஏராளமான செல்வத்தைச் சேர்த்ததாகக் கூறப்பட்டது.

மர்ஃபியின் கூற்றுப்படி, அஷ்ரஃப் தனது பெரும் செல்வத்திற்கு தனது தந்தை ரேசா ஷாவிடமிருந்து பெறப்பட்ட நிலங்களின் மதிப்பு அதிகரித்தது, பரம்பரை வணிகத்திலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் காரணமாகக் கூறினார்.

ஆனால் நிக்கி கெடியின் ‘ரூட்ஸ் ஆஃப் ரெவல்யூஷன்: ஆன் இன்டர்ப்ரெடிவ் ஹிஸ்டரி’ மற்றும் ஃபரிதூன் ஹுவைடாவின் ‘தி ஃபால் ஆஃப் தி ஷா’ புத்தகத்தின்படி, அஷ்ரஃபின் செல்வத்திற்குப் பின்னால் வேறொரு கதை இருந்தது.

ஒரு காலகட்டத்தில் எண்ணெய் விலை உயர்வு காரணமாக இரான் தொழில்துறை வளர்ச்சி கண்டபோது, ​​அஷ்ரஃப் பஹ்லவியும் அவரது மகன் ஷாராமும் எண்ணெய் நிறுவனங்களின் பத்து சதவீத அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை இலவசமாகப் பெற்றனர். அதற்கு ஈடாக அந்த நிறுவனங்கள் செயல்பட, ஏற்றுமதி-இறக்குமதி அல்லது அரசு ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற இருவரும் உதவினார்கள்.

“சில செல்வாக்கு மிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே அரசாங்க உரிமங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதன் காரணமாக உரிமம் பெறும் செயல்முறை என்பது தொழிலதிபர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக மாறியது.”

‘செப்டம்பர் 17, 1978 தேதியிட்ட ஒரு ஆவணத்தின்படி, அஷ்ரஃப் அலுவலகத்திலிருந்து 7,08,000 அமெரிக்க டாலர்களை, சுவிட்சர்லாந்தின் யூனியன் பேங்க் ஆஃப் ஜெனிவாவில் உள்ள அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்ற விண்ணப்பம் செய்யப்பட்டதாக’, 1979இல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இது SAIPA (S-on, A-ltesse, I-mperiale, P-rincesse, A-shraf) என்ற உளவுத்துறை குறியீட்டின் கீழ் திறக்கப்பட்டது, இது அவர்களின் விருப்பமான பிரெஞ்சு பெயரின் சுருக்கமாகும், இதன் பொருள்: “இளவரசி அஷ்ரஃப், இம்பீரியல் பிரெஸ்டீஜின் எஜமானி”.

‘பஹ்லவி வம்சத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி’ என்ற புத்தகத்தில், அஷ்ரஃப் பஹ்லவியை போதைப்பொருள் கடத்தலுடன் இணைக்க ஹுசைன் ஃபர்தோஸ்ட் என்பவர் முயன்றார்.

இது குறித்து அஷ்ரஃப் தனது சுயசரிதையில் பின்வருமாறு எழுதியுள்ளார்: “என் எதிரிகள் என்னை ஒரு கடத்தல்காரி, உளவாளி, மாஃபியாக்களின் கூட்டாளி மற்றும் ஒரு கட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவள் என்று கூட குற்றம் சாட்டினர்.”

1980ஆம் ஆண்டு, நியூயார்க் டைம்ஸின் ஒரு கட்டுரையில், “தனது செல்வம் முறைகேடாகச் சம்பாதிக்கப்படவில்லை என்றும், இரான் மேலும் செழித்து வளர்ந்ததால் பரம்பரை நிலங்களின் மதிப்பு அதிகரித்து இந்த செல்வங்கள் வந்ததாகவும்” அவர் குறிப்பிட்டார்.

அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பின்வருமாறு பதிலளித்தார். “என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, சுமார் மூன்று லட்சம் டாலர்கள் மற்றும் காஸ்பியன் கடலுக்கு அருகில் சுமார் ஒரு மில்லியன் சதுர மீட்டர் நிலத்தை நான் பெற்றேன். இது தவிர, ஜூர்ஜன் மற்றும் கெர்மான்ஷாவிலும் சில சொத்துகளைப் பெற்றேன், அவை பிற்காலத்தில் மிகவும் மதிப்புமிக்கதாக மாறின.”

உளவியல் அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது ரேசா ஷா தனது நெருங்கிய நண்பர் என்று இளவரசி கூறுவார்.அஷ்ரஃப் பஹ்லவி தனது இளமை பருவத்தில் தன்னம்பிக்கை குறைபாட்டால் அவதிப்பட்டார்.

“கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு வேறொருவரின் முகம், அழகான நிறம் மற்றும் நல்ல உயரம் வேண்டும் என்று ஆசைப்பட்டேன். உலகில் என்னை விடக் உயரம் குறைவானவர்கள் மிகக் குறைவு என்று நான் எப்போதும் நினைத்தேன்” என்று அவர் எழுதினார்.

ஒருவேளை இந்த உணர்வுதான் அவருடைய தைரியத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

“இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் எனக்கு கருஞ்சிறுத்தை என்று செல்லப்பெயர் சூட்டினர்,” என்று அவர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

“எனக்கு அந்தப் பெயர் மிகவும் பிடித்திருந்தது, உண்மையைச் சொல்லப் போனால், சில வழிகளில் அது என் மனநிலையுடன் ஒத்துப்போகிறது. சிறுத்தையைப் போலவே, என் இயல்பும் உற்சாகமானது, கலகத்தனமானது.”

“பொதுக் கூட்டங்களில் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள நான் பெரும்பாலும் முயற்சிப்பேன். ஆனால் சில சமயங்களில் என் நாட்டின் எதிரிகள் மீது பாய்ந்து தாக்க ஒரு சிறுத்தையின் கூர்மையான நகங்கள் எனக்கு இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

தனது சகோதரனுடனான உறவைப் பற்றி பேசுகையில், ‘முகமது ரேசா ஷா தனது நெருங்கிய நண்பர்’ என்று அவர் கூறுவார்.

“சிறுவயதிலிருந்தே, அவரது கருத்துகள் என் வாழ்க்கையில் வலிமையான தாக்கத்தை செலுத்தின” என்று அஷ்ரஃப் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பெண்கள் உரிமைகள் தொடர்பான நிலைப்பாடு

அஷ்ரஃப் பஹ்லவி தனது சகோதரரின் ஆட்சியின் போது பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவராக இருந்தார்.

ஆனால் எழுத்தாளர் கே பாயில் ஒரு கட்டுரையில் அவரை விமர்சித்திருந்தார். “இளவரசி, சர்வதேச அளவில் பெண்கள் உரிமை பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ​​இரானில் கிட்டத்தட்ட 4,000 பெண்கள் அரசியல் கைதிகளாக இருந்தனர். தங்களுக்கு நியாயமான ராணுவ அல்லது சிவில் விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததில்லை.”

தனது சுயசரிதையில், இரானில் பெண்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலையை ஒப்புக்கொண்ட அஷ்ரஃப் பஹ்லவி, அது குறித்து கவலை தெரிவித்தார்.

“இரானிய பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய செய்திகள் பெரும் கவலை அளிக்கக்கூடியதாக இருந்தன. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். பல பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடு கடத்தலை எதிர்கொண்டனர்.” என்று அவர் குறிப்பிட்டார்.

இரானில் 1979ஆம் ஆண்டு நடந்த புரட்சிக்குப் பிறகு, தனது சகோதரர் முகமது ரேசா ஷாவுக்கு புகலிடம் அளிக்க உதவுமாறு அமெரிக்க வங்கியாளர் டேவிட் ராக்ஃபெல்லரிடம் அஷ்ரஃப் பஹ்லவி கேட்டார்.

புரட்சியின் தொடக்கத்தில் ஷாவை ஆதரிக்காததற்காக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கர்ட் வால்ட்ஹெய்மையும் அவர் விமர்சித்தார்.

நாடுகடத்தல் மற்றும் மரணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஷ்ரஃப் பஹ்லவி தனது சகோதரரின் ஆட்சிக் காலத்தில் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவராக இருந்தார்.1979 புரட்சிக்குப் பிறகு, அஷ்ரஃப் நியூயார்க் மற்றும் பாரிஸில் வாழ்ந்தார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு, தனது 96 வயதில், ஜனவரி 7, 2016 அன்று மொனாக்கோவில் இறந்தார்.

அவர் இறக்கும் போது, பஹ்லவி குடும்பத்தின் மூத்த உறுப்பினராக அவர் இருந்தார்.

இளவரசி அஷ்ரஃபின் பிற்கால வாழ்க்கை ஒரு ஷேக்ஸ்பியர் கதையில் காணப்படும் துயரத்திற்கு சற்றும் குறையாதது என்று அசோசியேட்டட் பிரஸ் குறிப்பிட்டது.

“புரட்சிக்குப் பிறகு அவரது மகன் ஒரு பாரிஸ் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது இரட்டைச் சகோதரர் புற்றுநோயால் இறந்தார். அவரது ஒரு நெருங்கிய உறவினர் 2001இல் லண்டனில் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்தார், மற்றொரு உறவினர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்டனில் தற்கொலை செய்து கொண்டார்.”

வில்லியம் கிரிம்மர் நியூயார்க் டைம்ஸில், “அஷ்ரஃப் பஹ்லவி ஒரு சுவாரசியமான ஆனால் சர்ச்சைக்குரிய நபராக இருந்தார். மேற்கத்திய சிந்தனை கொண்டவர், நவீனமானவர், நேர்த்தியானவர், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர், உயர் சமூகத்தை நேசிப்பவர். அவர் ஒரு கடுமையான அரசியல்வாதியாக அறியப்பட்டார், அவர் தனது சகோதரர் ஷா முகமது ரேசா பஹ்லவியின் சர்வாதிகாரத்தை வெளிப்படையாக ஆதரித்தார்” என்று எழுதினார்.

“என் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு, மக்கள் எங்களிடம் இருப்பதாகக் கூறும் 65 பில்லியன் டாலர்கள் உண்மையிலேயே எங்களிடம் இருந்திருந்தால், கண் இமைக்கும் நேரத்தில் இரானின் ஆட்சியை நாங்கள் திரும்பப் பெற்றிருப்போம்,” என்று அஷ்ரஃப் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

காலப்போக்கில், அவர் படிப்படியாக பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். ஆனால் 1994இல் அவர் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

தனது கடந்த கால வாழ்க்கை குறித்த எந்த வருத்தமும் தனக்கு எப்போதும் இருந்ததில்லை என்று அஷ்ரஃப் கூறினார்.

“நான் என் வாழ்க்கையை மீண்டும் வாழ முடிந்தால், நான் செய்த எல்லாவற்றையும் மீண்டும் செய்வேன். எல்லாம் முடிந்துவிட்டது, இப்போது நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் அந்த 50 ஆண்டுகள் அற்புதமானவை மற்றும் பெருமை நிறைந்தவை.” என்று அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like