உங்கள் ஸ்மார்ட் ஃபோன் திரை தானாகவே மாறிவிட்டதா? – காரணம் இதுதான்
பட மூலாதாரம், X
படக்குறிப்பு, எழுதியவர், ஓமர் சலிமிபதவி, பிபிசி உருது39 நிமிடங்களுக்கு முன்னர்
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம்.
ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
எந்த அமைப்புகளையும் மாற்றாமல், இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என பலரும் குழப்பமடைந்துள்ளனர். சிலர் தங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இது குறித்த தகவல்களை பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
உலகம் முழுவதிலுமிருந்து ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த மாற்றங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. ஆப்பிள் போன்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதால், அந்த போன்களைப் பயன்படுத்துபவர்கள் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.
ஆனால், ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்பட்டதற்கு என்ன காரணம்?, இந்த அமைப்புகள் எவ்வாறு மாற்றப்பட்டன, அவற்றை பழைய படி மாற்ற முடியுமா என்பதற்கான பதில்களைத் தேட முயற்சித்தோம்.
‘ஹேக்கிங்’ செய்யப்பட்டதா? உண்மையான காரணம் என்ன?
ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இந்த பிரச்னைக்கு பதில்களைத் தேடியுள்ளனர்.
சிலர் இதை ‘ஹேக்கிங்’ என்று கூறியுள்ளனர், மற்றவர்கள் இந்த மாற்றம் அரசு நிறுவனங்களின் கண்காணிப்பு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
“வாழ்த்துக்கள், உங்கள் தொலைபேசி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு மென்பொருளும் தானாகவே நிறுவப்பட்டுள்ளது” என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் “உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனின் அமைப்புகள் திடீரென்று மாறிவிட்டன. நீங்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா?” என்ற கேள்வியை ஒருவர் எழுப்பியுள்ளார்.
பட மூலாதாரம், Google
படக்குறிப்பு, பலர் தங்கள் தொலைபேசிகளில் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.ஆனால், போனின் காட்சி அமைப்புகள் மாறியுள்ளதால், அதற்கு ‘ஹேக்கிங்’ என்றோ, அல்லது அந்த நிறுவனம் உங்கள் புகைப்படங்கள் அல்லது செய்திகளைத் திருடுகிறது என்றோ அர்த்தமல்ல என மற்றொருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மொபைல் போன் நிறுவனங்கள் அவ்வப்போது தொலைபேசிகளைப் புதுப்பிக்கின்றன. இதனால் அவை முன்பை விட சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாறுகின்றன என்பது தான் அவரது கருத்து.
இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி ?
அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது, அதே நிறுவனத்தால் புதுப்பிக்கவும் படுகிறது (அப்டேட் செய்யப்பட்டுள்ளது ).
‘மே 2025’ இல், ‘மெட்டீரியல் 3D எக்ஸ்பிரசிவ்’ என்ற புதிய அமைப்பை வெளியிடுவதாக கூகுள் அறிவித்தது. இது கடந்த சில ஆண்டுகளில் வந்த மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது, தொலைபேசியின் மென்பொருளையும், அமைப்பையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில் மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறதுமுன்னதாக, எங்கள் ஆண்ட்ராய்டு போன்கள் ‘மெட்டீரியல் 3D’ என்ற வடிவமைப்பில் இயங்கியது. ‘இதன் வழக்கமான பயன்பாட்டின் காரணமாக பில்லியன் கணக்கான நபர்கள் அதற்குப் பழக்கமாகிவிட்டனர்’ என கூகுள் கூறியது.
புதிய அப்டேட்டில் அறிவிப்புகள், வண்ண தீம்கள், புகைப்படங்கள், ஜிமெயில் மற்றும் வாட்ச் போன்ற பல விஷயங்கள் மாற்றப்பட்டு வருவதாக கூகிள் தெரிவித்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களும் அதில் ஒரு பகுதியாகும்.
பயனாளர் அனுமதியின்றி எவ்வாறு மாற்றப்பட்டன?
‘மெட்டீரியல் 3D எக்ஸ்பிரஸிவ்’ என்ற அப்டேட்டின் கீழ், ஆண்ட்ராய்டு போனின் அழைப்பு செயலியுடைய வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த அப்டேட் முதலில் ஜூன் மாதத்தில் சிலருக்கு மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர் அது படிப்படியாக பரவலாக வெளியிடப்பட்டது.
அழைப்பு மேற்கொள்ளும் செயலியை மேலும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவது தான் இதன் நோக்கம் என கூகுள் கூறியது.
‘சமீபத்திய’ (சமீபத்திய அழைப்புகள்) மற்றும் ‘முக்கிய எண்கள்’ போன்றவற்றை நீக்கிய கூகுள், அவற்றை ‘முகப்பு’ என்ற பகுதியில் ஒன்றிணைத்துள்ளது. எனவே இப்போது நீங்கள் அழைப்பு செயலியைத் திறக்கும் போது, ‘முகப்பு’ மற்றும் ‘கீபேட்’ என்ற இரண்டு பகுதிகளை மட்டுமே காண்பீர்கள்.
ஒரே எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளும் இனி ஒன்றாகவோ அல்லது ஒரே இடத்திலோ காட்டப்படாது.
யாரை எந்த நேரத்துக்கு அழைத்தீர்களோ அந்த வரிசைப்படி தனித்தனியாகக் காட்டப்படும். இதனால் நீங்கள் அந்த தொடர்பை மீண்டும் மீண்டும் தேட வேண்டிய அவசியம் இருக்காது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பல மொபைல் போன்களில் அழைப்பு மற்றும் டயல் அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தால் பயனர்கள் குழப்பமடைந்தனர், பலர் சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது.
எத்தனை தவறவிட்ட அழைப்புகள் உள்ளன அல்லது எத்தனை அழைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஒவ்வொரு எண்ணையும் தனித்தனியாகத் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று கூகுள் விளக்கியுள்ளது.
இதற்குப் பிறகு, மொபைல் போன் உபயோகிப்பவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் ‘அழைப்பு’ மற்றும் ‘இன்-கால்’ வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.
புதிய வடிவமைப்பின்படி, அழைப்பின் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போனை உபயோகிப்பவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்கும்போது தற்செயலாக அழைப்புகளைப் பெறவோ அல்லது துண்டிக்கவோ மாட்டார்கள்.
கூகுளின் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வரும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, பலருடைய தொலைபேசி செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் பலருடைய தொலைபேசியில் இந்த அப்டேட்கள் இடம்பெறவில்லை.
பட மூலாதாரம், Google
படக்குறிப்பு, கூகுள், போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.சிலர் தங்கள் தொலைபேசிகளில் கூகிள் பிளே ஸ்டோரில் ஆட்டோமேட்டிக் அப்டேட்கள் (தானியங்கி புதுப்பிப்புகளை) ஆன் செய்திருப்பதால், சில செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றன என கூகுள் வலைப்பதிவில் ஒருவர் கூறியுள்ளார்.
மொபைல் போனை உபயோகிப்பவர்கள், இந்த ஆட்டோமேட்டிக் அப்டேட்டகளுக்கான அனுமதியை ஆப் செய்துவிட்டு, தொலைபேசி செட்டிங்ஸ்க்கு சென்று ‘Uninstall Updates’ என்பதை கிளிக் செய்து, தொலைபேசி அழைப்பின் காட்சி அமைப்புகளை பழைய நிலைக்கு மாற்றி அமைக்கலாம் என்று அவர் கூறினார்.
பிரபல மொபைல் நிறுவனமான ஒன்பிளஸும் இதே விளக்கத்தைத் தான் வழங்கியுள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “இது ஒன்பிளஸ்ஸிலிருந்து அல்ல, கூகுள் போன் செயலியின் அப்டேட்டில் இருந்து வந்தது. உங்கள் தொலைபேசியில் இருந்த பழைய முறையே பிடித்திருந்தால், அப்டேட்களை நீக்கவும்”என நிறுவனம் பதில் அளித்தது.
எனவே, நீங்களும் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்திருந்தால் குழப்பமடைய வேண்டாம்.
பழைய முறையிலேயே உங்களது போன் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த புதிய அப்டேட்களை விரும்பவில்லை என்றால், ‘Uninstall Updates’-இன் மூலம் பழைய முறையையே நீங்கள் தேர்வு செய்யலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு