இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தனது பதவிக் காலத்தில் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவு அதிகமாக இருந்ததால் அவர் மகசின் ரிமாண்ட் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறை செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 76 வயதான விக்ரமசிங்கே ஆகஸ்ட் 26 வரை காவல்துறையின் காவலில் இருப்பார்.
ஆறு மணி நேரத்திற்கும் மேலான நீண்ட விசாரணைக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதிக்கு பிணை வழங்க நீதிமன்றம் அனுமதிக்கும் எந்தவொரு வலுவான வாதத்தையும் பிரதிவாதி வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகத் தீர்ப்பளித்து. நீதிபதி நிலுபுலி லங்காபுர அவரை விளக்கமறியலில் வைத்தார்.
விக்ரமசிங்க மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 386 மற்றும் 388 மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒன்று முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இந்த வழக்கு, செப்டம்பர் 2023 இல் ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பானது. முன்னாள் ஜனாதிபதி ஹவானாவில் G77 உச்சிமாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பும் வழியில் லண்டனில் தங்கியிருந்தார், அங்கு அவரும் அவரது மனைவி மைத்ரியும் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தப் பயணத்திற்கான செலவுகள் அவரது மனைவியால் நிதியளிக்கப்பட்டதாகவும், அதற்காக அவர்கள் பொதுப் பணத்தைப் பயன்படுத்தவில்லை என்றும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி வாதிடுகிறார். இருப்பினும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) விக்ரமசிங்கே தனது மெய்க்காப்பாளர்களின் செலவுகளை ஈடுகட்டுவது உட்பட, இந்தப் பயணத்திற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.