Saturday, August 23, 2025
Home tamil newsகுழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு மாநாடு – ஓகஸ்ட் 31! – Global Tamil News

குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு மாநாடு – ஓகஸ்ட் 31! – Global Tamil News

by ilankai
0 comments

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், செயல் திறன் அரங்க இயக்கம் இணைந்து  நடத்தும் குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடும் நாடக ஆற்றுகைகளும், எதிர்வரும் ஓகஸ்ட் 31 திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பி.ஏ. டினேஸ் கூன்ஜே தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், தமிழ் அரங்கு மற்றும் கலைகளின் சமகால வெளிப்பாடுகள் என்ற தொனிப்பொருளில் மாநாடு நடைபெறவுள்ளது.

இதற்கு பிரதான திறப்புரையை வழங்குவதற்காக உலகப்புகழ்பெற்ற தொடர்பியல் துறைப்  பேராசிரியர் கோ.இரவீந்திரன் இந்தியாவிலிருந்து வருகைதருகிறார்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக கலைப்பீடாதிபதி பேராசியரியர் எஸ்.ரகுராமும் கலந்து கொள்ளவுள்ளனர்.

banner

ஆய்வு மகாநாடு நான்கு முக்கிய பகுதிகளாக நடைபெறவுள்ளது. காலை 9.00 -10.00 மணி வரை தொடக்க விழாவும் அரங்கத்திறப்ரையும் நடைபெறும்.

தொடர்ந்து 10.30 – 12.30 மணி வரை ஆய்வு அளிக்கைகளும் கலந்துரையாடல்களும் நடைபெறும்.

மாலை 2.00 – 3.30 மணி வரை குழுநிலைக்கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது, இதில் ஈழத்தின் தமிழ்நாடகத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேராசிரியர் சி. மௌனகுரு தலைமையில் நடைபெறவுள்ளது.

மாலை 4.00 மணிக்கு குழந்தை ம.சண்முகலிஙகத்தின் சிறுவர் நாடகங்களான பஞ்சவர்ண நரியார், கூடிவிளையாடு பாப்பா  போன்ற நாடகங்கள் மேடையேறுகின்றன. இவற்றை செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்து வழங்குகின்றது.

அவற்றைத் தொடர்ந்து குழந்தை ம.சண்முகலிங்கத்தின் புகழ்பெற்ற நாடகமான எந்தையும் தாயும் நாடகம் மேடையேறுகின்றது. இதனை மலையகத்திலிருந்து தியேட்டர் மேட்ஸ் நாடககக்குழுவினர் மேடையேற்றுகின்றார்கள்.

ஈழத்து நவீன தமிழ் நாடகப்புலத்தில் பேராளுமையாகத் திகழ்ந்த குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் இந்த நிகழ்வு நாடகர்கள், நாடகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்வாக அமைந்திருக்கும். இதில் பங்கு கொள்ளுமாறு நாடகத்துறை ஆர்வலர்களை ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளார்கள்

You may also like