Saturday, August 23, 2025
Home பிபிசிதமிழிலிருந்துஇந்தியாவுக்கு அமெரிக்காவின் இடத்தை சீனாவால் நிரப்ப முடியுமா? ஓர் அலசல் – BBC News தமிழ்

இந்தியாவுக்கு அமெரிக்காவின் இடத்தை சீனாவால் நிரப்ப முடியுமா? ஓர் அலசல் – BBC News தமிழ்

by ilankai
0 comments

இந்தியாவுக்கு அமெரிக்காவின் இடத்தை சீனாவால் நிரப்ப முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள சீனா செல்கிறார்.எழுதியவர், அன்ஷுல் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“அமைதி அல்லது சமரசம் என்பது ஆதிக்கம் செலுத்துபவரை தூண்டிவிடவே செய்யும். பலதரப்பு வர்த்தக அமைப்பை பாதுகாப்பதில் இந்தியாவுடன் சீனா உறுதியாக நிற்கும்.”

banner

இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50% வரியைக் கண்டித்து பேசிய போது இந்தியாவுக்கான சீன தூதர் ஷு ஃபெய்ஹோங் கூறிய வார்த்தைகள் இவை.

இந்தியாவில் ஒரு மூன்றாவது நாடு பற்றி வெளிநாட்டு ராஜதந்திரி கூறிய இந்தக் கருத்துகள் அசாதாரணமானது என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சீனாவில் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் சீன தூதர் இவ்வாறு பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொள்கிறார்.

“இந்தியாவும் சீனாவும் ஆசியாவின் இரட்டை என்ஜின்கள்”

அமெரிக்க வரிகளுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் நாடுகளில் சீனா முன்னணியில் உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் எந்த அளவிற்கு அதிகரித்தது என்றால், சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 145% வரிகளையும், அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா 125% வரிகளையும் விதித்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதன் பிறகு மே மாதம் நடைபெற்ற சந்திப்பில் இருநாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தின்படி வரிகளைக் குறைத்தன. இதற்குப் பிறகும் இரு நாடுகளுக்கும் இடையேயான வரிப் பிரச்னை தற்போதும் தீர்க்கப்படவில்லை.

வியாழக்கிழமை அன்று அமெரிக்காவுக்கு எதிராக மீண்டுமொரு முறை குரல் எழுப்பியுள்ளது சீனா. ஆனால் இந்த முறை வெளிநாட்டு மண்ணில், அதாவது இந்தியாவிலிருந்து இந்தக் குரலை எழுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஷு ஃபெய்ஹோங் அமெரிக்காவை ஒரு தொல்லை செய்யும் நாடு என ஒப்பிட்டுப் பேசினார். தடையற்ற வர்த்தகத்தின் மூலம் அமெரிக்கா நீண்ட காலம் பலன் பெற்றதாக கூறிய அவர் தற்போது மற்ற நாடுகளிடம் வரிகளை ஒரு “பேரம் பேசும் கருவியாக” பயன்படுத்துகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேலும் கூடுதல் வரிகளை விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளது. சீனா இதை வலுவாக எதிர்க்கிறது. அமைதியாக இருப்பது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நாட்டை ஊக்குவிக்கும்” எனத் தெரிவித்தார்.

இருநாடுகளையும் ஆசியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான ‘இரட்டை என்ஜின்கள்’ எனக் குறிப்பிட்ட ஷு, இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் ஒற்றுமை ஒட்டுமொத்த உலகுக்கும் நன்மை பயக்கும் எனத் தெரிவித்தார்.

சீன எதிர்ப்பு மனநிலை குறையுமா?

யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிலிருந்து தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்தது. இது அமெரிக்கா உடனான அதன் உறவுகளில் பதற்றத்தை உருவாக்கி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை பாதித்துள்ளது.

சர்வதேச எரிபொருள் சந்தைகளை நிலையாக வைத்திருக்க பைடன் நிர்வாகம் தான் ரஷ்ய எண்ணெயை வாங்கச் சொல்லி தங்களிடம் வற்புறுத்தியதாக இந்தியா கூறுகிறது. ஆனால் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் இயந்திரம் தொடர்ந்து இயங்க இந்தியா ஒரு காரணமாக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

ஒருபுறம் அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. மறுபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

2020 ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள கால்வானில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்தன. அப்போது இருந்து உறவுகளை சுமூகமாக்க இந்தியாவும் சீனாவும் மெதுவாக வேலை செய்து வருகின்றன.

பேராசிரியர் அல்கா ஆச்சார்யா டெல்லியில் உள்ள சீன கல்விக்கான மையத்தின் (Institute of Chinese Studies) இயக்குநராக உள்ளார்.

சீனாவுடன் இந்தியா நெருங்கி வருவதைப் பற்றி பேசிய அல்கா ஆச்சார்யா, “சீனாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, மக்களின் பொது உணர்வு யாருக்கு எதிராக உள்ளது எனப் பார்க்க வேண்டும். சீனாவுடன் நீண்ட கால எல்லை தகராறு இருந்து வருகிறது. ஆனால் டிரம்ப் மற்றும் மோதிக்கு இடையேயான நட்புக்கு அப்பாலும் ஒருதலைபட்சமான வரிவிதிப்பு இந்தியாவில் பலருக்கும் அதிர்ச்சியாக வந்துள்ளது.” என்றார்

இந்தியாவில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு சீன எதிர்ப்பை விட எந்த விதத்திலும் குறைவானது இல்லை என்று குறிப்பிட்ட அவர், “டிரம்ப், இந்தியா மீது 50% வரிகளை விதித்தது போல இந்தியாவின் அண்டை நாடுகள் மீது வரிகளை விதிக்கவில்லை.” என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா-சீனா எல்லை தகராறு (கோப்புப்படம்)இந்தோ-பசிபிக் கல்விக்கான கலிங்கா நிறுவனத்தின் (Kalinga Institute of Indo-Pacific studies) நிறுவனரான பேராசிரியர் சிந்தாமணி மகாபத்ரா, இந்தியா மற்றும் சீனா இடையே இடைவெளி குறைந்ததற்கு அமெரிக்கா மட்டுமே ஒரே காரணி அல்ல என நம்புகிறார்.

பிபிசியிடம் பேசிய சிந்தாமணி, “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிப்பதறான பல காரணங்களில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த சில மாதங்களாக இருநாடுகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனா பொருளாதார வளமிக்க நாடாக உள்ளது. கால்வான் நிகழ்வுக்குப் பிறகு ஏற்பட்ட கசப்புத்தன்மையை நீக்குவதற்கு சாதாரண நடைமுறை இது” என்றார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது இந்தியாவும் சீனாவும் ஒருவரையொருவர் “எதிரிகள் அல்லது அச்சுறுத்தல்கள்” எனப் பார்க்காமல் “கூட்டாளிகளாக” பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

வாங் யீ-ஐ சந்தித்த பிறகு இந்தியா மற்றும் சீனா இடையேயான நிலையான, நம்பத்தகுந்த மற்றும் ஆக்கப்பூர்வமான உறவுகள் பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது உலக அமைதி மற்றும் செழிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

குளோபல் சவுத்தை யார் வழிநடத்துவார்?

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே குவாட் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) போன்ற குழுக்கள் மூலமாக உருவான வலுவான கூட்டணி என்பது சீனாவின் பிராந்திய செல்வாக்கை சமநிலைப்படுத்த முயல்கிறது.

குவாட் நாடுகள் தங்களை ஒரு ராணுவ கூட்டணியாக அல்லாமல் ஒரு முறைசாரா குழுவாகவே முன்னிறுத்துகின்றனர். ஆனால் சீனா அதனை தனக்கு எதிரான கூட்டணியாகவே பார்க்கிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பதற்றங்கள் அதிகரித்தால், இந்தக் கூட்டணி வலுவிழந்து இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கும் அதிகரிக்கும்.

“அமெரிக்கா குவாட்டிற்கு எவ்வளவு ஆதரவு வழங்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜப்பானும் அமெரிக்காவின் 15% வரியால் அதிருப்தியில் உள்ளது. டிரம்பும் ஆஸ்திரேலிய பிரதமரை சந்திக்காமல் உள்ளார். தற்போதைய சூழலில் குவாடின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது” எனத் தெரிவிக்கிறார் சிந்தாமணி.

இந்தியாவும் சீனாவும் பிரிக்ஸ் போன்ற அமைப்புகள் மூலமாக குளோபல் சவுத்தை (பூமியில் தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளைக் குறிக்கும் சொல்) வழிநடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருநாடுகளும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை குளோபல் சவுத் நாடுகளை ஒன்றுபடுத்துவதன் மூலம் சமநிலைப்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புஇந்தியாவும் பல்வேறு உலகளாவிய மன்றங்களில் மூலோபாய தன்னாட்சியைப் பராமரிக்க தற்போது வரை முயன்று வருகிறது. இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுடன் குவாட் போன்ற கூட்டணிகளில் உள்ளது, மறுபுறம் சீனா மற்றும் ரஷ்யாவுடன் பிரிக்ஸ் மற்றும் எஸ்சிஓ ஆகிய அமைப்புகளில் ஒத்துழைத்து வருகிறது.

இந்த தன்னாட்சி தான் சர்வதேச அரங்கில் இந்தியாவை செல்வாக்கு மிக்க நாடாக ஆக்குகிறது. இந்தியா முழுவதும் மேற்கு நாடுகளுடனும் இல்லை, அதேநேரத்தில் சீனாவின் தலைமையின் கீழும் இல்லை.

தற்போது சீனாவுடன் அதிகரித்து வரும் நெருக்கம் குளோபல் சவுத்தில் இந்தியா மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வி உள்ளது.

“குவாட், ஆசியா மற்றும் சீனா மீது இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்த கருத்துடன் செயல்பட்டதாக தெரிந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. இந்தியா தற்போது கவனத்துடனே நகரும். சீனா பொருளாதார வல்லரசாக உள்ளதால் அதன் கை மேலோங்கியுள்ளது. ஆனால் குளோபல் சவுத்தை வழிநடத்துவதற்கான பாதை சீனாவுக்கு எளிதாக இருக்காது. ஏனென்றால் குளோபல் சவுத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சீனாவைப் பற்றி ஒரே கருத்து இல்லை” எனத் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியா-அமெரிக்காவின் உறவுகள் சவால்களை சந்தித்து வரும் நிலையில் இந்தியா உடனான இருதரப்பு உறவுகளை சீனா எப்படிப் பார்க்கிறது என்கிற கேள்வி சீன வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியானிடம் கேட்கப்பட்டது

இதற்குப் பதிலளித்து பேசிய லின் ஜியான், “இருநாடுகளின் தலைவர்களிடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் வேலை செய்ய சீனா தயாராக உள்ளது. இருநாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பல்தரப்பு மன்றங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த தயாராக உள்ளன. இதன் மூலம் இந்தியா-சீன உறவுகளின் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.” எனத் தெரிவித்தார்.

சீனாவால் அமெரிக்காவின் இடத்தை நிரப்ப முடியுமா?

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான இடைவெளி அதிகரித்தால் அது சீனா மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே மக்கள் மனங்களில் நிலவும் கேள்வியாக உள்ளது.

சீன இணையதளமான குவான்சாவில் வெளியான அறிக்கையில், டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான நெருங்கிய உறவின் பலன்கள், இரண்டாம் ஆட்சிக் காலத்தில் வரிகளால் பாதிக்கப்படலாம். இந்த மாற்றங்களால் சில வழிகளில் சீனா பலனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா உடனான இந்தியாவின் வர்த்தகத்தை ஒரு எக்ஸ் தளப் பதிவில் ஒப்பிட்டார் ஷு ஃபெய்ஹோங்.

இந்தப் பதிவில் குளோபல் டைம்ஸில் வெளியான விளக்கப்படம் ஒன்று இடம்பெற்றிருந்தது, 2024-25 நிதியாண்டில் இந்தியா மற்றும் சீனா இடையேயான வர்த்தகம் 127.71 பில்லியன் டாலராக இருந்தது. அதே வேளையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகம் 132.21 பில்லியன் டாலராக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் பல்வேறு விவகாரங்கள் பற்றிய கேள்விகள் தற்போதும் உள்ளன.எனினும், இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக அமெரிக்கா உள்ளது. அதே சமயம் சீனா உடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழலில் அமெரிக்காவுக்கான மாற்றாக இந்தியாவுக்கு சீனா இருக்க முடியுமா என்கிற கேள்வி உள்ளது. ஆனால் அது எப்போதும் நடக்காது என்கிறார் சிந்தாமணி

இதற்கான காரணத்தை விவரித்து பேசுகையில், “சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நட்பில் எந்த விரிசலும் இருக்கப் போவதில்லை. சீனாவால் எப்போதும் அமெரிக்காவின் இடத்தை நிரப்ப முடியாது. இந்தியா தான் ஏற்றுக்கொண்டுள்ள பல அணி கொள்கை மூலம் சீனா உடனான தனது உறவுகளை மேம்படுத்த முயன்று வருகிறது” என்று தெரிவித்தார்.

எல்லை மற்றும் பிஆர்ஐ மீதான கருத்து வேறுபாடு என்ன ஆகும்?

இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் பல்வேறு விவகாரங்கள் பற்றிய கேள்விகள் தற்போதும் உள்ளன.

இருநாடுகளும் மூன்று ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தெளிவற்ற எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனால் இருநாடுகளின் ராணுவங்களும் கடந்த சில வருடங்களில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்தியா நீண்ட காலமாக ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு’ பாகிஸ்தானை குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது சீனா. இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்து வந்தாலும் இது இந்தியாவுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது

இந்தியா தலாய் லாமா மற்றும் திபெத்திய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. சீனா இதனை தனது உள்நாட்டு அரசியலில் தலையிடுவதாகப் பார்க்கிறது.

இத்தகைய சூழலில் இந்திய பிரதமர் மோதியின் சீனப் பயணத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் புதிய திசை கிடைக்குமா என்பதில் தான் அனைவரின் கவனமும் உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like