பட மூலாதாரம், Bansarai Kamdar
படக்குறிப்பு, கர்நாடகாவில் 2500 ஆண்டு பழமையான கிட்டத்தட்ட 1000 பெருங்கல் கட்டமைப்புகள் ஹைர் பென்கல்லில் மலை மீது உள்ளன. எழுதியவர், பன்சாரி காம்தார் பதவி, 23 ஆகஸ்ட் 2025, 07:25 GMT
புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர்
கர்நாடகாவில் ஒரு மலை மீது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் பெருங்கற்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் உள்ளன. இவை எதற்காக கட்டப்பட்டன என்று இப்போதும் தெளிவாக யாருக்கும் தெரியவில்லை. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்ட “குள்ள மனிதர்கள்” இவற்றை உருவாக்கியதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
ஹைர் பென்கல் எனும் கிராமத்தை முதன் முதலில் பார்க்கும் போது கர்நாடகாவின் செழிப்பான உட்புற மாவட்டங்களில் உள்ள ஒரு சாதாரண கிராமம் போலவே தோன்றும். மலைகள், மாந்தோப்புகள், சிறிய செங்கற்சூளைகள், வயல்கள், அதனருகே ஒரு கால்வாய் என கிராமப்புற தென்னிந்தியாவின் அமைதியான வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.
ஆனால் 90 நிமிட மலைப் பயணத்துக்கு பிறகு நிலைமை மாறுகிறது. அந்த மலைப்பாங்கான நிலத்தில் ஏறிச் சென்றால் அது என்னை “மோர்யார் குட்டா” என்ற இடத்துக்கு இட்டுச் சென்றது. உள்ளூர் கன்னட மொழியில் “குள்ள மனிதர்களின் மலை” என்று அதற்கு அர்த்தமாகும். கிரானைட் பாறைகள் நிறைந்த இந்த சமதளத்தில், வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தில் (எழுத்து வடிவிலான ஆவணங்களுக்கு முந்தைய காலம்) பெருங்கற்களாலான கிட்டத்தட்ட 1000 வடிவங்கள் உள்ளன. இவை 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ளன.
அந்த காட்சியே பிரமிப்பாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீடுகளை போன்று தோற்றமளிக்கும் மாபெரும் கற்களாலான அறைகள் மற்றும் கற்களாலான வட்டங்கள் அந்த பகுதி முழுவதும் இருந்தது. இதுவே இந்தியாவின் மிகப் பெரிய, மிகப் பழமையான இடுகாடாகும். இது ஆங்கிலத்தில் necropolis -இறந்தவர்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
புனைவுகளில் விவரிப்பது போன்ற ஒரு மந்திர நகரத்துக்குள் நுழைவது போன்று அந்த மலையேற்றம் இருந்தது. மாபெரும் பாறைகள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டிருந்தன. எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் போல தோன்றினாலும், அவை பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கின்றன. அவை இயற்கையாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் போல காட்சியளித்தன. சிலவற்றில் பாறை உறைவிடங்கள் இருந்தன. அவற்றுக்குள் 700 கி.மு-500 கி.மு காலக்கட்டத்தைச் சேர்ந்த இயற்கையான சிவப்பு நிற ஓவியங்கள் காணப்பட்டன. சிலவற்றில் கால்நடைகள் மற்றும் காட்டுப்பன்றிகளின் வரையப்பட்டிருப்பதை இப்போதும் தெளிவாக காண முடிந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த கல் வடிவங்கள் பழங்கால இடுகாடாகவோ அல்லது நினைவுச்சின்னமாகவோ இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால் அவை உண்மையிலேயே எதனால் உருவாக்கப்பட்டன என்பது மர்மமாகவே உள்ளது.
பட மூலாதாரம், Creative Commons
படக்குறிப்பு, ஹைர் பென்கல்லில் உள்ள பாறைகளில் பல ஆயிரம் ஆண்டு பழமையான ஓவியங்கள் காணப்படுகின்றன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ஜ் என்பது உலகின் பெருங்கல் நினைவுச்சின்னங்களில் மிகவும் அறியப்பட்ட ஒன்றாகும். உலகம் முழுவதும் இது போன்று ஆயிரக்கணக்கான இடங்கள் கிடக்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட இது போன்ற 35,000 இடங்கள் ஐரோப்பாவில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவில் இது வரை 3500 இடங்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ஹைர் பென்கல்லின் பழமையான, மர்மம் நிறைந்த கற்களை பார்க்கும் போது, அங்கு வரையப்பட்டிருக்கும் கோடரி ஏந்தி குதிரைகளில் சவாரி செய்யும் வீரர்கள், ஈட்டி ஏந்திய வேட்டைக்காரர்கள், வணங்கப்பட்ட மான்கள், மயில்கள் மற்றும் பிற விலங்குகளை பார்க்கும் போது, சுவாரஸ்யம் தேடி பயணிப்பவர்களுக்கு பழமை இந்திய சமூகங்கள் எப்படி வாழ்ந்தன, எப்படி வணங்கின என்ற புரிதலை ஏற்படுத்தக் கூடும்.
தொல்லியல் ஆய்வுக் களமான ஹைர் பென்கல் 20 ஹெக்டேர் பரந்து கிடக்கிறது. இது கிழக்கு-மேற்காக இருப்பதன் மூலம் இதற்கு சடங்கு ரீதியான முக்கியத்துவம் இருப்பதை குறிக்கிறது. இந்த இடத்தில் அதிகம் காணப்படுவது செவ்வக வடிவில் பெருங்கற்களாலான கல்லறைகளாகும். இவை பொதுவாக இரண்டு பக்கவாட்டு கற்களும் அவை தாங்கி பிடிக்கும் ஒரு பெரிய மூடுகல்லும் கொண்டதாக இருக்கும். இவை ஆங்கிலத்தில் dolmen என்றழைக்கப்படுகின்றன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மலை உச்சியில் உள்ள ஆழம் குறைவான அகண்ட நீர்நிலை ஒன்றுக்கு அருகிலேயே பல கல்லறைகள் அருகருகே உள்ளன. இந்த நீர் நிலை ஓர் இயற்கையான பாறை குளமாக முதலில் இருந்திருக்கும் என்றும், பழங்கால இந்தியர்கள் பெருங்கல் வடிவங்களை உருவாக்க கற்களை எடுத்த போது இது விரிவடைந்திருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அன்று காலை வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற நீர் அல்லிகள், சிறிய குளம் முழுவதும் பூத்துக் கிடந்தன. இவற்றை பார்க்கும் போது பிரெஞ்சு ஓவியர் க்ளாட் மொனெட்டின் ஓவியங்கள் நினைவுக்கு வருகின்றன.
“பல நூற்றாண்டுகளுக்கு இந்த இடம் முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இவை ஒரே நேரத்தில் உருவானதாக இருக்க முடியாது” என்கிறார் மேம்பட்ட அறிவியல்களின் தேசிய நிறுவனத்தில் உதவி பேராசிரியராகவும் கட்டிட கலைஞராகவும் உள்ள ஶ்ரீகுமார் மேனன். அவர் ஹைர் பென்கல் மற்றும் இந்தியாவில் உள்ள பல பெருங்கல் தலங்களை ஆராய்ந்துள்ளார்.
பட மூலாதாரம், Bansari Kamdar
படக்குறிப்பு, இந்த இடம் மிக கச்சிதமாக கட்டப்பட்டிருப்பதால், இதை ஆதி மனிதர்கள் கட்டியிருப்பார்கள் என்று உள்ளூர் மக்கள் சிலர் நம்புவதில்லை. உள்ளூர் மக்களின் கதைகளின் படி இந்த கல்லறைகள் மனிதர்களால் கட்டப்படவில்லை, “மோரியார்கள்” எனும் அழிந்துவிட்ட குள்ளர்களால் உருவாக்கப்பட்டவை. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்ட இவர்கள் அபார வலிமை மற்றும் கட்டடத் திறன் கொண்டவர்களாக கருதப்பட்டனர். எங்கள் மலையேற்றத்தை வழி நடத்திச் சென்ற உள்ளூர் இயற்கை ஆராய்ச்சியாளர் சந்திரசேகர் அனேகுன்டி இதற்கான காரணத்தை விளக்கினார். கல்லறைகளில் மிக கச்சிதமாக வட்ட வடிவில் உள்ள துளைகளை பார்க்கும் போது, இவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்று உள்ளூர் மக்கள் நம்புவதாக அவர் கூறுகிறார். வடிவங்கள் அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருப்பதால், அவை ஆரம்ப கால சிற்ப கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்க முடியாது என்று கருதுவதாக அவர் தெரிவிக்கிறார்.
“உள்ளூர் மக்கள் மோரியார்கள் மிக குள்ளமானவர்கள் என்று நம்புகின்றனர். ஒரு நெருப்பு மழை பெய்த போது அவர்கள் அழிக்கப்பட்டதாகவும் நம்புகின்றனர்” என்கிறார் அனேகுன்டி. “ஆனால் அவ்வளவு குள்ளமாக இருந்தால், எப்படி இவ்வளவு பெரிய கற்களை அவர்களால் நகர்த்தியிருக்க முடியும்?” என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்புகிறார்.
இதே போன்ற கதைகள் கூறப்படுவதை மேனன் தனது ஆராய்ச்சியின் போது கவனித்துள்ளார். குள்ள மனிதர்கள் பெருங்கல் வடிவங்களை உருவாக்கினர் என்று கர்நாடகாவில் உள்ள மோரிபெட்டா, மோரிகல்லு தெலங்கானாவில் உள்ள சன்னா மோரியாரா தட்டே, தமிழ்நாட்டில் மோரல் பாறை உள்ளிட்ட இடங்களிலும் கதைகள் கூறப்படுகின்றன.
பண்டைய இந்தியாவின் இந்த பழைய கதைகள், இப்போது அழிந்துவிட்ட மனித இனத்தைப் பற்றிய நினைவுகளாக இருக்கலாம் என்று அவர் நினைக்கிறார். இந்த இனம் ஹோமோ ஃப்ளோரேசியென்சிஸ் எனப்படும் ஒரு குள்ள மனித இனத்தை ஒத்திருந்திருக்கலாம். அவர்கள் “ஹாபிட்” மக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த சிறிய மனிதர்கள் இந்தோனேசியாவில் சுமார் 60,000 முதல் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்கள் (ஹோமோ சேபியன்ஸ்) வாழ்ந்த அதே நேரத்தில் வாழ்ந்தனர்.
பட மூலாதாரம், Bansari Kamdar
படக்குறிப்பு, சில மாதங்களில் 20-30 பேர் மட்டுமே இந்த இடத்தை வந்து பார்வையிடுகின்றனர். “பெருங்கல் வடிவங்களை உருவாக்கியவர்கள் நம்மை போன்ற மனிதர்கள் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த கதைகள் இன்னும் இருக்கின்றன” என்கிறார் மேனன்.
அதன் தொல்பொருள் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று ஆர்வம் இருந்தபோதிலும், ஹைர் பென்கல் தென்னிந்தியாவைத் தாண்டி பெரும்பாலும் அறியப்படாததாகவும், அருகிலுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலிடப்பட்ட ஹம்பியின் கோயில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களால் மறைக்கப்பட்டதாகவும் உள்ளது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் முந்தைய இடைக்கால (medieval) தலைநகரம், இந்த பெருங்கற்கால தளத்திற்கு தெற்கே 42 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதன் பிரமிக்க வைக்கும் இடிபாடுகள் மற்றும் பிரமாண்டமான கோயில்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் பக்தர்களையும் ஈர்க்கிறது.
ஆனால் ஹைர் பெங்கலை காண குளிர்காலமான அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களில் 100 பேரும், சில மாதங்களில் வெறும் 20 முதல் 30 துணிச்சலான பயணிகளும் வருகை தருவதாக உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகின்றனர். ஒப்பிட்டு பார்த்தால் அதே நேரம் இங்கிலாந்தின் ஸ்டோன்ஹென்ஜ்-ல் உள்ள 83 நிற்கும் கற்களை காண ஓராண்டில் பத்து லட்சத்துக்கும் மேலானவர்கள் வருகின்றனர்.
“பெங்களூரு போன்ற அருகிலுள்ள நகரங்களில் உள்ள மக்களிடையே கூட இந்த இடம் ஒருபோதும் ஊக்குவிக்கப்படவில்லை” என்று பரோடாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் ஆராய்ச்சி அறிஞருமான திஷா அலுவாலியா கூறுகிறார்.
“இன்னும், இது மிகவும் கவனம் பெற தகுதியானது … அவற்றை உருவாக்க பண்டைய மனிதர்கள் நிறைய முயற்சிகள் செய்துள்ளனர்; அவற்றைப் பாதுகாக்க நாம் இரட்டிப்பு முயற்சி எடுக்க வேண்டும். முதலில் நாம் அவற்றை ஆவணப்படுத்த வேண்டும்.”
1835-ம் ஆண்டில் இந்த இடத்தைக் கண்டுபிடித்த பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளின், பண்டைய மற்றும் கிராமப்புற இந்திய சமூகங்களின் தொழில்நுட்ப வலிமை குறித்த நிராகரிப்பு அணுகுமுறையும் இந்த கட்டுக்கதைகள் பரவ ஒரு காரணமாக இருக்கலாம் என்று அலுவாலியா கூறினார்.
“அதிகாரிகள் இந்த மக்களின் கலாசாரத்தை கூட அறிந்திராமல் இந்த இடங்களுக்கு சென்றனர். பெருங்கல் வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை நன்கு அறியப்படவில்லை. அவை வெறுமனே கற்பலகைகளாக பார்க்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Bansari Kamdar
படக்குறிப்பு, சமீப ஆண்டுகளில் புதையல் தேடுபவர்கள் இந்த இடத்தில் சேதம் ஏற்படுத்தியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில், ஹைர் பென்கலின் சில பெருங்கற்கால கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. கால்நடை மேய்ப்பவர்கள், வதந்திகளை நம்பி புதையல் தேடி கல்லறைகளுக்கு அடியில் தோண்டுபவர்களால் சேதமடைந்து வருகின்றன. தாவரங்களின் ஒழுங்குப்படுத்தப்படாத வளர்ச்சி, காலத்தினால் ஏற்படும் சிதைவு, மற்றும் பாதுகாக்கப்படாதது ஆகியவை இந்த சேதத்துக்கு வழிவகுத்துள்ளன.
“இது ஒரு பலவீனமான தளம்… மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு புரியாததை அழிக்கிறார்கள், “என்று பெங்களூரு கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மீரா ஐயர் கூறுகிறார். அந்த அறக்கட்டளை ஹைர் பென்கலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக சேர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அப்படி சேர்க்கப்பட்டால், சர்வதேச அங்கீகாரம், அரசாங்க நிதி மற்றும் மேம்பட்ட பராமரிப்பை வழங்க முடியும். சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் சமூகங்களும் பயனடையலாம்.
“ஆனால் சுற்றுலா என்பது இரட்டை முனைகள் கொண்ட வாள்” என்று மீரா ஐயர் எச்சரிக்கிறார். தேவையான பாதுகாப்பு இல்லாமல் அதிகப்படியான கவனம் மேலும் சிதைவை ஏற்படுத்தக் கூடும் என்று குறிப்பிட்டார். இங்கு “தேவைப்படுவது விளக்கம், கல்வி மற்றும் சிறந்த ஒழுங்குமுறை” என்கிறார்.
ஹைர் பென்கலின் எதிர்காலம் தெளிவாக இல்லை என்றாலும், ஒன்று நிச்சயம்: இது ஒரு மர்மம் கலந்த மிக அழகான இடமாகும். தக்காண பீடபூமியின் மீது மழை மேகங்கள் திரண்டபோது, நிலம் உயிர் பெற்று வந்ததாக தோன்றியது. நடந்து செல்லும்போது, வெட்கப்படும் பாடும் பறவைகள் புதர்களினூடே பறந்தன. மயில்கள் முழு ராஜ கம்பீரத்தில் இருந்தன, அவற்றின் விதவிதமான வண்ணங்கள் கொண்ட வால்கள் பருவமழை இனச்சேர்க்கை காலத்தை அறிவிக்கும்போது அகண்டு விரிந்து விசிறின. பல்லிகள் வெயிலில் கதகதப்பான கருங்கல்லில் சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருந்தன, அதே நேரத்தில் ஆட்டு மந்தைகள் புதர்களுக்கு அடியில் சுற்றித் திரிந்தன. கரடுமுரடான வெளிப்புறங்களுக்கு இடையில் பூத்திருந்த தங்க அமல்டாஸ் மரங்களை அனேகுன்டி சுட்டிக்காட்டினார்.
பட மூலாதாரம், Chandrashekar Anegundi
படக்குறிப்பு, பறவைகள், பல்லிகள் மற்றும் பிற விலங்குகள் இந்த பழங்கால இடத்தை ஆக்கிரமித்துள்ளன. “இது பறவைகளுக்கும் எங்களுக்கும் ஒரு சொர்க்கம்,” என்று மரங்களிலிருந்து சில விதை காய்களை சேகரித்தபடி அவர் கூறினார்.
ஹயர் பென்கல்லில், இயற்கை மற்றும் அமானுஷ்யம் ஒன்றாக கலக்கின்றன. மலை உச்சியில் நின்று கொண்டிருந்த கல்லறைகள், பாறை முகடுகளின் குறுக்கே வரிசையாக நீட்டி, மறக்கப்பட்ட மக்களின் ரகசியங்களை வைத்திருக்கும் கல் பெட்டிகளாகும்.
நம் முன்னோர்கள் இந்த அறைகளை ஏன் கட்டினார்கள் என்பது நமக்குத் தெரியாது என்றாலும், ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்தவர்களுக்கு இந்த இடம் மிகவும் முக்கியமானது என்பது தெளிவாகிறது. இப்போதைக்கு, இது இந்தியாவின் மிகவும் புதிரான திறந்தவெளி ரகசியங்களில் ஒன்றாக உள்ளது – ஒரு வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னம் நம் கண்ணெதிரே மறைந்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு