Friday, August 22, 2025
Home இலங்கைரணில் கைது – கோட்டை நீதிமன்று முன் கூடிய பெருமளவான ஆதரவாளர்கள்

ரணில் கைது – கோட்டை நீதிமன்று முன் கூடிய பெருமளவான ஆதரவாளர்கள்

by ilankai
0 comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். 

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  காலை முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. 

ஜூன் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது. 

banner

அதைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. 

இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். 

அதன்படி முன்னாள் ஜனாதிபதியும் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like