படக்குறிப்பு, கேரளாவின் இடைமலையாறு அணைஎழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்
” ஆனைமலையாறு கட்டுவதற்கு கேரளாவில் இடைமலையாறு அணையைக் கட்டிவிட்டதாக அந்த அரசு ஒப்புதல் தரவேண்டும். இரு மாநில பிரச்னை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பேசித்தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்”
இப்படிச் சொன்னது, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்; இப்போது இல்லை. கடந்த 1998 மே 19 அன்று அன்றைய பொங்கலுார் சட்டமன்ற உறுப்பினர் மோகன் கந்தசாமி எழுப்பிய கேள்விக்கு கூறிய பதில் இது.
இப்போது பொங்கலுார் தொகுதியும் இல்லை. கேள்வி எழுப்பிய மோகன் கந்தசாமியும், அப்போது கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதியும் இப்போது இல்லை. ஆனால் அந்நாட்களில் பொதுப்பணித்துறையின் கீழும் தற்போது தனி துறையாகவும் இருக்கும், நீர்ப்பாசனத்துறையின் அமைச்சர் துரைமுருகன் தான்.
ஆனால் இன்று வரை அந்த ஒப்புதலை கேரள அரசு தரவில்லை. தமிழக அரசும் வாங்கவில்லை. பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத்திட்டத்திற்குக் காரணமாக இருந்த தலைவர்களுக்கு பொள்ளாச்சி பிஏபி அலுவலக வளாகத்தில் சிலை அமைத்துள்ள தமிழக அரசு, இத்திட்டத்தில் கூடுதலாகக் கட்ட வேண்டிய ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை இன்று வரை கட்டவில்லை. கடந்த 1988 ஆம் ஆண்டில் தொடங்கிய பேச்சுவார்த்தை இப்போதும் தொடர்வதாகச் சொல்கிறது தமிழக அரசு.
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி, இரு மாநிலங்களிடையே பாய்ந்து மேற்கே அரபிக்கடலில் கலக்கும் 8 நதிகளின் குறுக்கே ஆங்காங்கே அணைகள் கட்டி கிழக்கு நோக்கித் திருப்பி, பாசனம், குடிநீர் மற்றும் நீர் மின் உற்பத்திக்குப் பயன்படுத்துவதே பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத்திட்டம்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
தமிழக முதல்வராக காமராசர் இருந்தபோது 1958 நவம்பர் 9ஆம் தேதியன்று, இத்திட்டத்துக்காக இரு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 1961ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திட்டம் துவக்கிவைக்கப்பட்டது.
இரு மடங்காக பாசனப்பரப்பு அதிகரிப்பு
படக்குறிப்பு, பரம்பிக்குளம் அணைஒப்பந்தப்படி, பரம்பிக்குளம், மேல் ஆழியாறு, ஆழியாறு, மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம், திருமூர்த்தி (பாலாறு), இடைமலையாறு (கேரளா), ஆனைமலையாறு, நல்லாறு என 12 அணைகள் கட்டப்பட வேண்டும்.
இவற்றில் பெரும்பாலான அணைகளின் கட்டுமானப் பணிகள் காமராசர் காலத்திலேயே முடிந்துவிட்டன. சோலையாறு, நீரார் அணைகள் மட்டும், அப்போது துவங்கி, கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1970ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தன.
இதில் கேரளாவில் இடைமலையாறு அணையைக் கட்டிமுடித்து ஒப்புதல் அளித்த பின்பே, தமிழகத்தில் ஆனைமலையாறு அணையைக் கட்ட வேண்டுமென்று ஒப்பந்தத்தில் ஒரு துணை ஒப்பந்தம் சேர்க்கப்பட்டிருந்தது.
பிபிசி தமிழ் நீர்வள ஆதாரத்துறை மற்றும் பல தரப்பிலும் சேகரித்த தகவல்களின்படி, திட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் கட்டி முடித்தபின், ஆண்டுக்கு 48–50 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்குமென்று கணிக்கப்பட்டு, அதில் தமிழகத்துக்கு 30.5 டி.எம்.சி. தண்ணீரும், கேரளாவுக்கு 19.5 டி.எம்.சி. தண்ணீரும் பங்கிடலாமென்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
இதில் தமிழகத்துக்குக் கிடைக்கும் தண்ணீரிலிருந்து பாலாறு படுகை, ஆழியாறு படுகை என இரு படுகைகளிலும் சேர்த்து இரண்டரை லட்சம் ஏக்கர் பயன் பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தத்திலுள்ள ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் இன்னும் கட்டப்படவில்லை.
தமிழகத்துக்கு எதிர்பார்த்த 30.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்காவிடினும் பாசனப்பரப்பு மட்டும் இரு மடங்காக விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கேரளாவுக்கான 19.5 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் ஆண்டுதோறும் தவறாமல் வழங்கி வருகிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கட்டப்பட்ட அணை – ஒப்புதல் தராத கேரள அரசு
திட்டம் துவக்கப்பட்டபோது பாலாறு படுகைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து 2 லட்சத்து 3,299 ஏக்கருக்கும், ஆழியாறு படுகைக்கு ஆழியாறு அணையிலிருந்து 44,398 ஏக்கருக்கும் என 2 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் 8 கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அதாவது 1978 முதல் 1984 வரையிலான 6 ஆண்டுகளில், பாசனம் பெறும் பரப்பு மேலும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விஸ்தரிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை வந்த தண்ணீர், தற்போது 4 மண்டலங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைத்து வருகிறது.
இதிலும் நீர்ப்பங்கீட்டில் பாரபட்சம், தண்ணீர் திருட்டு, கால்வாய் பராமரிப்பின்மை, நீர்க்கசிவு, ஆவியாதல் என பல காரணங்களால், விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்று போராட்டங்கள் தொடர்கின்றன.
பாசனப்பரப்பை இரு மடங்காக விஸ்தரிப்பு செய்தபோதிலும், கூடுதலாக தண்ணீரைத் தேக்குவதற்கு, ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை கட்டுவதற்கு, கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் முயற்சி எடுக்கவில்லை என்பதே 4.5 லட்சம் ஏக்கர் பிஏபி விவசாயிகளின் ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது.
திட்ட ஒப்பந்தத்தின்படி, 30 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1988 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. இரு அணைகளும் கட்டப்படவில்லை.
”கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைத்துத் தேர்தல்களிலும் இடம் பெற்றுள்ள ஒரே தேர்தல் வாக்குறுதி, ஆனைமலையாறு–நல்லாறு அணைத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதுதான். இடைமலையாறு அணை கட்டி முடித்து, கேரள அரசு ஒப்புதல் தராததால்தான் ஆனைமலையாறு அணையைக் கட்ட முடியவில்லை என்கிறது தமிழக அரசு. அது 40 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுவிட்டதை நாங்கள் நேரில் கண்டறிந்து, 1997 ஆம் ஆண்டே தமிழக அரசிடம் ஆதாரம் கொடுத்தோம். அதை வைத்து ஒன்றுமே செய்யவில்லை.” என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம்.
திமுக, அதிமுக என இரு அரசுகளும் இதற்கு அக்கறை காட்டவில்லை என்பதுதான் உண்மை என்று கூறும் பரமசிவம், ”ஆனைமலையாறு அணை, நல்லாறு அணை கட்ட வேண்டுமென்று நாம் கேட்கும்போது, கேரளாவும் சில கோரிக்கைகளை முன் வைக்கிறது. இதில் அதிகத் தேவை நமக்கேவுள்ளது. அதனால் நாம்தான் தொடர்ந்து பேசியிருக்க வேண்டும். ஆனால் இரு அரசுகளும் அதைச் செய்யவில்லை.” என்கிறார்.
இடைமலையாறு அணை: கேரள அரசு கூறுவது என்ன?
பட மூலாதாரம், DIPR
படக்குறிப்பு, பொள்ளாச்சியிலுள்ள பிஏபி திட்ட அலுவலக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று நடந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்.கேரள அரசு ஒப்புதல் தராததால் தான், ஆனைமலையாறு அணைத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை, மின்சாரத்துறை ஆகிய இரு துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் இடைமலையாறு அணை 40 ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இடைமலையாறு பாசனத்திட்டம் என்ற தலைப்பில், அந்த அணை எங்கு எவ்வளவு உயரத்தில் எத்தனை கோடி மதிப்பில் எப்போது கட்டப்பட்டது என்று கேரள நீர்ப்பாசனத்துறை இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
அதில் 1981 ஆம் ஆண்டில் ரூ.17 கோடி மதிப்பில் பணி தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அணை கடந்த 1987 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்டு, நீர் மின் உற்பத்தி நடக்கும் விபரம், கேரள அரசின் மின்சாரத்துறை இணையதளத்தில் அட்டவணையுடன் விவரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பாசனத்திட்டத்தின் பிரதான கால்வாய் பணி முடிந்துவிட்டாலும் இணைப்புக் கால்வாய் பணி இன்னும் முடிக்கப்படவில்லை என்று நீர்ப்பாசனத்துறை இணையதளத் தகவல் தெரிவிக்கிறது.
அணையை 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடித்துவிட்டு, கால்வாய் பணியை மட்டும் முடிக்காமல் இருப்பதாகக் கூறியே, கேரள அரசு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாகவே தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளும் கூறுகின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டத்தின் முன்னாள் தலைமைப்பொறியாளர் இளங்கோவன், ”கடந்த 1997 ஆம் ஆண்டில் விவசாயிகள் கொடுத்த ஆதாரத்தை வைத்து கேரள அரசுடன் பேசிய போது, இன்னும் கால்வாய்ப் பணிகள் முடியவில்லை என்று காரணம் கூறியது. கடந்த 2015 ஆம் ஆண்டில் இடைமலையாறு அணை மற்றும் கால்வாய்களைப் புதுப்பிக்க உலக வங்கியில் நிதி வாங்கியபோது அதைக் கண்டுபிடித்து, உறுதி செய்த பின்பே கேரள அரசு ஒப்புக்கொண்டது.” என்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில், ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டம் தொடர்பாக கேரள அரசுடன் பேசுவதற்காக தமிழக அரசால் ஒரு குழு (Anamalaiyar-Nallar Dam Formation Committee) அமைக்கப்பட்டது. அந்த குழுவின் உறுப்பினராக இருந்தவர் இளங்கோவன்.
”முதலில் திருவனந்தபுரத்தில் இரு மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அடுத்து 2019 செப்டம்பரில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதன்பின் கேரளா அதிகாரிகள் சென்னை வந்து பேசினர். அந்த 3 கூட்டங்களில் ஓரளவு முன்னேற்றம் இருந்தது. ஆட்சி மாறியதும் குழு கலைக்கப்பட்டுவிட்டது. கடந்த நான்கரை ஆண்டாக திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.” என்கிறார் இளங்கோவன்.
இந்நிலையில்தான், பிஏபி திட்டம் கொண்டுவர முக்கியக் காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராசர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், பிஏபியின் தந்தை என்றழைக்கப்படும் வி.கே.பழனிசாமி கவுண்டர் மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோருடைய சிலைகளை, பொள்ளாச்சியிலுள்ள பிஏபி திட்ட அலுவலக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார்.
அதற்கு முன்பு, உடுமலையில் நடந்த நலத்திட்ட விழாவில் பேசிய அவர், ”ஆனைமலையாறு அணை, நீராறு–நல்லாறு அணை திட்டங்கள் குறித்து கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த கனவு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்.” என்று அறிவித்துள்ளார்.
தாமதத்துக்கு காரணம் என்ன?
படக்குறிப்பு, இந்த திட்டங்கள் தொடர்பாக கேரள முதல்வரை அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த போது, நாங்கள் சொன்னதை பினராயி ஒப்புக்கொண்டார் என்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்.முதல்வரின் அறிவிப்பை, அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், ”இடைமலையாறு அணையைக் கட்டவில்லை என்ற ஒரே காரணத்தை கேரள அரசு கூறிவந்தது. அதை கட்டி முடித்துவிட்டதை கடந்த 2016ல் புகைப்பட ஆதாரங்களுடன் கேரள அரசிடம் கூறினோம். இந்த திட்டங்கள் தொடர்பாக கேரள முதல்வரை சந்தித்த முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். நாங்கள் சொன்னதை பினராயி ஒப்புக்கொண்டார். அப்போது நானும் உடனிருந்தேன். அதன்பின்பே குழு அமைத்து பேச்சுவார்த்தை நடந்தது. திமுக ஆட்சியில் குழு கலைக்கப்பட்டதுடன், நாலரை ஆண்டாக எதுவும் செய்யவில்லை.” என்றார்.
இதைக்கடுமையாக மறுத்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் (திமுக) ஈஸ்வரசாமி, ”வைக்கம் விழாவின்போது, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் முதல்வர் ஸ்டாலினும் இதைப்பற்றி பேசினார். கடந்த 50 ஆண்டுகளில் அதிமுகதான் அதிகமான ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இதே ஜெயராமன்தான் அதிகமுறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். கடந்த 1991 லிருந்து 2021 வரையிலும் 30 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் 18 அமைச்சர்கள் இருந்துள்ளனர். கடந்த முறை பாஜவுடன் கூட்டணியிலும் இருந்தனர். அப்போது ஏன் இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை?.” என்று கேட்கிறார்.
இந்த கேள்வியை ஜெயராமனிடம் வைத்தபோது, ”கொரோனா தாக்கம் இல்லாமல் இருந்திருந்தாலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும் அத்திக்கடவு–அவினாசி திட்டம் போல இதையும் செயல்படுத்தியிருப்போம். அப்போது நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மினிட்ஸ் புத்தகத்தில் பதியப்பட்டது. அதை வைத்தே இந்த ஆட்சியில் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்திருக்கலாம்.” என்றார் அவர்.
இவர்கள் மட்டுமின்றி விவசாய சங்கப் பிரதிநிதிகளும், ஆனைமலையாறு திட்டம், இரு மாநில அரசுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்பதால்தான் தாமதமாகிவிட்டது என்கின்றனர். கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என மாறிமாறி ஆளும்போது, ஒரு கட்சி இதை ஆதரித்தால் மறுகட்சி எதிர்ப்பது வழக்கமாகவுள்ளது என்கிறார் பிஏபி பாலாறு படுகை பாசனத்திட்டக்குழுத்தலைவர் பரமசிவம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”முதல்வர் ஸ்டாலினை ஆகஸ்ட் 11 அன்று சந்தித்துப் பேசியபோது, ஆனைமலையாறு, நல்லாறு அணைத் திட்டங்களில் நான்கு ஆண்டுகளாக மீண்டும் தாமதம் ஏற்பட்டதைக் கூறினோம். கேரள அரசுடன் பேசி கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ” என்றார்.
படக்குறிப்பு, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் (திமுக) ஈஸ்வரசாமிதற்போதுள்ள அரசியல் சூழலில், ஆனைமலையாறு திட்டத்துக்கு கேரள அரசு ஒப்புதல் அளித்தாலும், அதற்குப் பின் மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் அனுமதி கிடைக்கவே பெரும் தாமதமாகும் என்று விவசாய சங்கப்பிரதிநிதிகள் கூறுகின்றனர். ஆனால் விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசு அரசியல் செய்யாமல் விரைவாக அனுமதி வழங்கும் என்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாநிலத்தலைவர் ஜி.கே.நாகராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”காமராசர் கொண்டு வந்த திட்டத்தில் ஒரு துளி கூடுதல் தண்ணீரைப் பெற ஒரு அணையும் கட்டாமல் அரசியல் லாபங்களுக்காக இரு ஆட்சிகளிலும் பாசனப்பரப்பை மட்டும் இரண்டரை லட்சத்திலிருந்து இரு மடங்காக்கிவிட்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய யாருமே விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை.
எடப்பாடி பழனிசாமி விவசாயி என்பதால், அவர்தான் இதற்காக சற்று முயற்சி எடுத்தார். ஆனால் திமுக, அதிமுக இரு அரசுகளுக்குமே நீர் மேலாண்மையில் திறன் இல்லை, விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை என்பதே அப்பட்டமான உண்மை. பாஜ கூட்டணி ஆட்சி வந்தால் இத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” என்றார்.
ஆனைமலையாறு–நல்லாறு அணைத்திட்டங்கள் குறித்து கேரள அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையின் நிலை பற்றி பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத்திட்டத்தின் தலைமைப்பொறியாளர் முருகேசனிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அவர், ”இத்திட்டம் பற்றி கேரள அரசுடன் பேசுவதற்காக துறை செயலாளர் தலைமையில் ஓர் உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தொழில்நுட்பரீதியாக உதவ என்னையும் உள்ளடக்கிய ஒரு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.
”கடந்த 1988 ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தைப் புதுப்பித்திருக்க வேண்டும். 1988 லிருந்து இப்போது வரை 31 கூட்டங்கள் நடந்துள்ளன. இப்போதுதான் இடைமலையாறு அணை கட்டியதற்கான ஒப்புதலை வழங்க கேரள அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்த கட்ட கூட்டத்துக்கு தேதி கேட்டு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். விரைவில் அந்த கூட்டம் நடக்கும்.” என்றார்.
படக்குறிப்பு, விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசு அரசியல் செய்யாமல் விரைவாக அனுமதி வழங்கும் என்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாநிலத்தலைவர் ஜி.கே.நாகராஜ்.திட்டத்தின் இப்போதைய மதிப்பீடு என்ன?
ஆனைமலையாறு அணைத்திட்டம் என்பது ஆனைமலையாறு மற்றும் அதன் துணை ஆறான இட்டலியாறு ஆகியவற்றின் மூலமாக கிடைக்கும் 2.5 டி.எம்.சி. நீரை திருப்பிக்கொள்வதற்கான திட்டமாகும்.
இட்டலியாற்றின் குறுக்கே அணை கட்டி, 5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதை மூலமாக கீழ்நீராறுக்கு எடுத்துச் சென்று சோலையாறு, பரம்பிக்குளம் அணை வழியாக ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதே இத்திட்டம். ஒப்பந்தப்படி இதற்கு கேரள அரசின் ஒப்புதல் அவசியம்.
இதற்கு கடந்த 1989 ஆம் ஆண்டில் போடப்பட்ட மதிப்பீடு ரூ.50 கோடி. இப்போது இதற்கான மதிப்பீடு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பிஏபி தலைமைப் பொறியாளர் முருகேசன், ”தொழில்நுட்பக்குழு கடந்த 2018 ஆம் ஆண்டில் அடுத்த 6 ஆண்டு விலையேற்றத்தைக் கணக்கிட்டு (2024 வரை) கொடுத்த மதிப்பீட்டின்படி, ரூ.550 கோடி. இது இப்போது இன்னும் சற்று அதிகரித்திருக்கும்.” என்றார்.
நீரார்–நல்லாறு அணைத்திட்டம்
மேல் நீராறு தண்ணீர் முழுவதும் தமிழகத்துக்கு சொந்தம் என்பதால், மேல் நீராற்றில் இருந்து 14.40 கி.மீ. தொலைவுக்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்து, நல்லாறு பகுதிக்கு கொண்டு வந்து, அங்கிருந்து 4 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து, காண்டூர் கால்வாயுடன் இணைத்து 4 மணி நேரத்தில் திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் கொண்டு வருவதே நல்லாறு அணைத்திட்டம்.
இதனால் பல கி.மீ. சுற்றிச்செல்லும்போது ஏற்படும் நீர் விரயம் தடுக்கப்படும். மழைக்காலங்களில், நீராறு, ஆனைமலையாறு மற்றும் சோலையாறு ஆறுகளில் அதிகமாக வரும் வெள்ளம் கேரள சோலையாறுக்குச் செல்லாமல் தமிழகத்தில் தேக்கமுடியும். இதில் 7.12 டிஎம்சி தண்ணீர் கூடுதலாகத் தேக்கலாம். 250 மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்யலாம்.
கடந்த 1997 ஆம் ஆண்டில் இதைக் கட்டுவதற்கு ரூ.557 கோடி செலவாகுமென மதிப்பிடப்பட்டது. இப்போது இதன் மதிப்பீடு பற்றி பிபிசி தமிழிடம் கூறிய பிஏபி தலைமைப் பொறியாளர் முருகேசன், ”கடந்த 2018 ஆம் ஆண்டு அடுத்த 5 ஆண்டு (2023 வரை) விலையேற்றத்தைக் கணக்கிட்டு போடப்பட்ட மதிப்பீட்டின்படி, இந்த அணை கட்ட ரூ.3578.84 கோடி ரூபாய் தேவைப்படும். இதுவும் தற்போது மேலும் அதிகரித்திருக்கும்.” என்றார்.
இரு அணைகளையும் கட்டினால் தமிழகத்துக்கு 7–9 டிஎம்சி தண்ணீர் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. நல்லாறு அணை கட்ட கேரள அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றாலும் இந்த அணை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே பிஏபி விவசாயிகளின் ஆதங்கமாகவுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு