அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து (Queensland) மாகாணத்தில் உள்ள ஒதுக்குப்புறமான பண்ணை வீடு ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு குவீன்ஸ்லாந்தின் பொகி (Bogie) பகுதியில் உள்ள ஒரு விவசாயப் பண்ணையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே இரு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு நபர் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஒரு காணித் தகராறு (Land dispute) காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியக் காவல்துறை அப்பகுதியைத் தற்போது முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், மேலதிக தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளது. அமைதியான நாடாகக் கருதப்படும் அவுஸ்திரேலியாவில், இவ்வாறான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதாகவே நிகழும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ________________________________________
அவுஸ்திரேலியாவிலும் காணி தகராறு – துப்பாக்கிச்சூடு – மூவர் பலி! – Global Tamil News
9