Friday, August 22, 2025
Home பிபிசிதமிழிலிருந்துஅமெரிக்காவுடனான நட்புறவு குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன? – BBC News தமிழ்

அமெரிக்காவுடனான நட்புறவு குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன? – BBC News தமிழ்

by ilankai
0 comments

இந்தியாவுடன் முரண்பாடு, பாகிஸ்தானுடன் நெருக்கம் : அமெரிக்கா குறித்து எச்சரிக்கும் பாகிஸ்தான் ஊடகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் சமீபத்தில் இரண்டு முறை அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளார்.எழுதியவர், ஷாயிஸ்தா பாரூக்கிபதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியா-அமெரிக்க உறவுகள் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் இந்த நேரத்தில், நீண்டகால ராஜ்ஜீய மோதலுக்குப் பிறகு, அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பை உருவாக்க முயற்சிக்கிறது.

banner

சமீப காலங்களில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், பிராந்திய நிலைத்தன்மை, பொருளாதார கூட்டணி மற்றும் உயர் மட்ட ராஜ்ஜீய சந்திப்புகள் ஆகியவற்றில் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்படுத் தொடங்கியுள்ளன.

வரலாற்று ரீதியாக , பனிப்போர் காலம் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு ஒத்துழைப்பின் தொடக்க காலங்களில் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது.

ஆனால், காலப்போக்கில் அந்த உறவு பலவீனமடைந்து, இடையிடையே பதற்றங்கள் உருவாகின.

இருப்பினும், அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில், இந்த உறவுகளை சமநிலைப்படுத்தும் புதிய முயற்சி ஒன்று தோன்றியது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு, வர்த்தகம் மற்றும் வரிகளைச் சுற்றி பதற்றமான சூழலை எதிர்கொள்கின்ற நேரத்தில், பாகிஸ்தானுடன் புதிய ஒத்துழைப்பு முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

முன்னதாக கடந்த மே மாதத்தில் இந்தியா–பாகிஸ்தான் மோதலின் போது, சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்கு வகித்ததாக கூறியது.

சமீபத்திய ஆண்டுகளில், சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்த அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமாக செயல்பட்டது.

ஆனால், இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதையும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதையும் காரணம் காட்டி, டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தார். இதனால், இந்தியா–அமெரிக்கா உறவுகள் பாதிக்கப்பட்டன.

மறுபுறம், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் குறைந்த வரி விகிதத்தில் சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது சிறப்பானதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவுடனான உறவுகள் மேலும் வலுவடையும் என்று பாகிஸ்தானில் பலர் நம்பிக்கையுடன் உள்ளனர், இதை ஒரு “புதிய அத்தியாயம்” என்று அழைக்கின்றனர், ஆனால் சிலர், இந்த நெருக்கம் நீடிக்குமா என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

இந்த ஒத்துழைப்பு, அமெரிக்காவின் பொருளாதார மற்றும் உத்தி சார்ந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டது என இந்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள்

பட மூலாதாரம், Pakistani Army / Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு, பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவிற்கு பயணம் செய்தார், அங்கு அவர் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைவர் மைக்கேல் குரில்லாவின் பிரியாவிடை விழாவில் கலந்து கொண்டார் (கோப்புப் படம்)கடந்த சில மாதங்களில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உயர்மட்ட தொடர்புகள் அதிகரித்துள்ளன. இது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது.

அதிபர் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில், எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதத்தில், எரிக் மேயர் தலைமையிலான அமெரிக்கக் குழு பாகிஸ்தானில் முக்கிய கனிமங்களில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதித்தது. இது மேம்பட்ட தொழில்நுட்பத் துறையில் நீண்டகால ஒத்துழைப்புக்கான அமெரிக்காவின் திட்டமிடலையும் சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையில், டிரம்ப் ஆதரவு பெற்ற கிரிப்டோகரன்சி நிறுவனமொன்று, பாகிஸ்தானின் கிரிப்டோ கவுன்சிலுடன் ஒப்பந்தம் செய்து, கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் மற்றும் பிளாக்செயின் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என பாகிஸ்தான் அறிவித்தது.

ஜூலை மாதத்தில், பாகிஸ்தான் பொருட்களுக்கு 19% வரி விதித்து அமெரிக்காவுடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் “பெரிய எண்ணெய் வளங்களை” பயன்படுத்த உதவும் என டிரம்ப் கூறினார்.

ஆகஸ்ட் மாதத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். இதன் மூலம் ராஜ்ஜீய உறவுகள் மேலும் வலுவடைந்தன. அதற்கு முன்னதாக, ஜூன் மாதத்தில், அவர் டிரம்புடன் தனிப்பட்ட மதிய விருந்தில் கலந்துகொண்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான மென்மையான நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் மாதத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். இதன் மூலம் ராஜ்ஜீய உறவுகள் மேலும் வலுவடைந்தன. அதற்கு முன்னதாக, ஜூன் மாதத்தில், அவர் டிரம்புடன் தனிப்பட்ட மதிய விருந்தில் கலந்துகொண்டார்.ஜூலை மாதத்தில், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் கனிமங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே பல தொலைபேசி உரையாடல்கள் நடந்தன.

அதற்கிடையில், பலூச் விடுதலை ராணுவம் (BLA) மற்றும் அதன் கூட்டாளியான மஜீத் படைப்பிரிவை, அமெரிக்கா வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது. இது பாகிஸ்தானின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறிய ‘அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை’ அறிக்கையிலிருந்து அமெரிக்கா தன்னைத் விலக்கிக் கொண்டு, பிராந்திய சக்திகளுக்கிடையிலான உரையாடலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்தது.

தி பிரிண்ட் வெளியிட்ட ஒரு செய்தியின் படி, அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் அசிம் முனீர், எதிர்காலத்தில் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், பாகிஸ்தானுக்கு ஆபத்து இருந்தால், அது முழு பிராந்தியத்தையும் அணு ஆயுதப் போரில் தள்ளிவிடும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், “அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுப்பது பாகிஸ்தானின் பழக்க வழக்கங்களில் ஒன்று ” என்று தெரிவித்தது.

பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 அன்று, ஹைட்ரோகார்பன்கள் மற்றும் முக்கியமான கனிமங்களில் ஒத்துழைப்புக்கான தனது உறுதிப்பாட்டை ரூபியோ மீண்டும் குறிப்பிட்டார் .

ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்த உறவுகள்

பட மூலாதாரம், WHITE HOUSE POOL (ISP POOL IMAGES)/Corbis/VCG via Getty Images

அமெரிக்கா–பாகிஸ்தான் உறவுகள் எப்போதும் சிக்கலானதாகவே இருந்துள்ளன. 1979-இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் படையெடுத்தபோது, இரு நாடுகளும் நெருக்கமடைந்தன. ஆனால், கடந்த சில தசாப்தங்களில் இந்த உறவுகள் நிலையற்றதாகவே உள்ளன.

2000-களின் தொடக்கத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இரு நாடுகளையும் ஒன்றிணைத்தது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் அதன் முக்கிய கூட்டாளியாக மாறியது.

ஆனால், இந்தக் காலத்தில் அமெரிக்கா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்கள் பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் அவநம்பிக்கையை உருவாக்கின.

ராணுவ ஒத்துழைப்பு ஆழமடைந்தாலும், இந்த தாக்குதல்கள் இரு நாடுகளுக்கிடையிலான நம்பிக்கையை பாதித்தன.

ஒபாமா பதவியில் இருந்த காலத்தில், உறவுகள் மேலும் பதற்றமடைந்தன.

குறிப்பாக 2011-இல், இஸ்லாமாபாத் அருகே ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நிகழ்வு, பாகிஸ்தான் ‘இரட்டை விளையாட்டு’ விளையாடுகிறது என்ற அமெரிக்காவின் சந்தேகத்தை மீண்டும் எழுப்பியது.

2018-இல், டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கான 255 மில்லியன் டாலர் ராணுவ உதவியை நிறுத்தி, “பொய்கள் மற்றும் மோசடி செய்வதாக ” பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது. இதனால் உறவுகள் மேலும் மோசமடைந்தன.

இந்தக் காலகட்டத்தில், இரு தரப்பும் உறவுகளை மீட்டெடுக்க முயற்சித்தாலும், ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள், அதற்கு தடையாக இருந்தன.

ஜோ பைடன் பதவியில் இருந்தபோது, இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து, பாகிஸ்தானுடன் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்களில் மட்டுமே அமெரிக்கா உரையாடியது.

” ஆகஸ்ட் 2021-இல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு, பாகிஸ்தானின் முக்கியத்துவம் அமெரிக்காவின் பார்வையில் மேலும் குறைந்தது”என பாகிஸ்தானின் ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ செய்தித்தாள் கூறியது.

ஆனால், பைடனின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாயல் தென்படுகிறது.

பிறகு என்ன மாற்றம் நிகழ்ந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் இந்தியா-அமெரிக்க உறவுகள் மோசமடைந்துள்ளன.பாகிஸ்தானை நோக்கி டிரம்ப் எடுத்துள்ள அணுகுமுறையில் ஒரு தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், இந்த மாற்றத்திற்கு பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் உலக அரசியல் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும் சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மே மாதத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் பாகிஸ்தானின் ராஜ்ஜீய முயற்சிகள், அமெரிக்காவுடன் உறவுகளை மேம்படுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்களும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

“இந்திய தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மிகச் சிறப்பாகவும் பொறுப்புடனும் செயல்பட்டது. அரசாங்கத்தின் உண்மை மற்றும் தர்க்கத்தின் அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கை, சர்வதேச சூழ்நிலையை பாகிஸ்தானுக்கு சாதகமாக மாற்றியது. இதன் விளைவாக, இந்தியா ஆதரிக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா இப்போது பாகிஸ்தானுடன் நிற்கிறது”என்று உருது செய்தித்தாள் ஜாங் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா அதன் பொருளாதார மற்றும் உத்தி சார்ந்த நலன்களில் அதிக கவனம் செலுத்துகிறது என்று இந்தியாவில் உள்ள ஆய்வாளர்கள் நம்புகிறார்கள், இதில் முக்கியமான கனிமங்கள், கிரிப்டோ ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மை ஆகியவை அடங்கும்.

‘டிரம்ப் பாகிஸ்தானில் ஆர்வம் காட்டுவதற்கான மிகப்பெரிய காரணம், முக்கிய கனிமங்களுக்காக சீனா மீதான சார்பைக் குறைப்பதுதான்’எனக் கூறுகிறது இந்திய செய்தித்தாள் தி பைனான்சியல் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரை.

அதே கட்டுரை, இரான்–பாகிஸ்தான் உறவுகள் ‘வலுவாக’ இருப்பதும் ஒரு முக்கிய காரணம் எனக் குறிப்பிடுகிறது. டிரம்ப், ‘பேச்சுவார்த்தைகளை தொடங்கவோ அல்லது போர் அபாயத்தை குறைக்கவோ பாகிஸ்தானை ஒரு பாலமாக பயன்படுத்தலாம்’ என நம்பப்படுகிறது.

மறுபுறம், ‘பாகிஸ்தானின் கிரிப்டோ சொத்துகளில் டிரம்பின் குடும்பத்தினர் முதலீடு செய்திருப்பதே, பாகிஸ்தானுடன் நெருக்கம் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம்’என்கிறார் இந்திய அரசியல் விமர்சகர் பிரம்மா செல்லானி.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மேலும், பாகிஸ்தானின் ராஜ்ஜீய மற்றும் பரப்புரை முயற்சிகளே இந்த மாற்றத்திற்கு காரணம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா, அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்காததாலும், இந்தியா–பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்திற்கான டிரம்பின் முயற்சியை நிராகரித்ததாலும், டிரம்ப் கோபமடைந்திருக்கலாம் என்பது அவர்களது வாதமாக உள்ளது.

‘டிரம்ப் பாகிஸ்தானை நோக்கி எடுத்துள்ள மென்மையான நிலைப்பாட்டுக்கு, அவர் இந்தியாவை கைவிட்டுவிட்டார் என்றோ, இந்தியா இப்போது அவருக்கு எதிரியாகிவிட்டது என்றோ அர்த்தமல்ல’ என்கிறார் முன்னாள் இந்திய தூதர் விகாஸ் ஸ்வரூப்.

“இது, அமெரிக்கா விரும்பும் விதத்தில் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் ஒரு தந்திரம் என நான் நினைக்கிறேன்,” என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?

பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த நெருக்கம் நீண்ட காலம் தொடருமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் , சில அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் இந்த முன்னேற்றம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதே நேரத்தில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அமெரிக்காவுடன் உறவுகள் மேம்படுவதால் ஏற்படும் “ஆழமான தாக்கங்களை” பாகிஸ்தான் எதிர்பார்க்க வேண்டும் என பாகிஸ்தான் நாளிதழான ஜாங் கூறுகிறது.

பாகிஸ்தான் கடந்த காலத்தில் சந்தித்த பல கசப்பான அனுபவங்களையும், இன்னும் எதிர்கொள்கின்ற எதிர்மறை விளைவுகளையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது ‘மிக முக்கியமானது’ என மற்றொரு உருது செய்தித்தாளான நவா-இ-வக்த் குறிப்பிட்டுள்ளது.

“எனவே, இந்த முறை தேசிய நலன்களில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. குறிப்பாக சீனாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள உத்தி சார்ந்த கூட்டணி பற்றிய விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like